“பெரியவா முன் படமெடுத்து ஆடிய கருநாகம்”

“பெரியவா முன் படமெடுத்து ஆடிய கருநாகம்”

( ஸ்ரீரங்கத்துல இருக்கற அரங்கநாதரே தன்னோட அணையாக இருந்த ஆதிசேஷனை அனுப்பி, தனக்கு வேண்டியதை தானே கேட்டு வாங்கிக்க பெரியவா கிட்டே பேசியிருக்கலாங்கறது மற்றும் இசைஞானி இளையராஜா செய்த கைங்கர்யமும்-) இக்கட்டுரையில்)

கட்டுரையாளர்- பி. ராமகிருஷ்ணன்நன்றி-குமுதம் பக்தி 2014.

பகவானே தன் பக்தர்களோட நேர்லவந்து பேசின சம்பவம் எல்லாம் புராண காலத்துல நிறைய நடந்திருக்கு.

மகாபெரியவாளோட வாழ்க்கைலயும் அப்படி எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கு. அதுல ஒரு ஆச்சர்யமான சம்பவத்தையும், ஸ்ரீரங்கம் கோயிலைப் பத்தி பலருக்கும் தெரியாத ஒரு விஷயத்தையும் இப்போ சொல்றேன்.

1983ம் வருஷம் வாக்குல நடந்த சம்பவம் இது. அப்போ மகாராஷ்ட்ரா மாநிலத்துல இருக்கற சதாராவுக்கு விஜயம் பண்ணியிருந்த மகாபெரியவா, அங்கே மஹாகாவ் என்கிற கிராமத்துல தங்கியிருந்தார்.

ரொம்ப எளிமையான இடத்துல ஒரு சின்ன அறை பெரியவா நித்யபடி பூஜை. அனுஷ்டானங்களை செய்யறதுக்கு ஒதுக்கப்பட்டிருந்துது. அதுக்கு கதவுகூடக் கிடையாது. ஒரே ஒரு ஜன்னல் மாத்திரம் இருந்தது. மத்தபடி எல்லாருக்கும் தரிசனம் தரவும் மத்தவா தங்கிக்கவும் மாட்டுக் கொட்டகை ஒண்ணுதான் சுத்தப்படுத்தி ஒதுக்கப்பட்டிருந்தது.

அங்கே ஒருநாள் மகாபெரியவா தினசரி அனுஷ்டான பூஜையை ஆரம்பிச்ச சமயத்துல எங்கே இருந்தோ ஒரு பெரிய கருநாகம் வேகவேகமா வந்து, பெரியவா தங்கியிருந்த அறை வாசலை மறைச்சமாதிரி படத்தை விரிச்சுகிட்டு நின்னு ஆட ஆரம்பிச்சது. எல்லாருக்கும் ஒரே அதிர்ச்சி! கூடவே பயம்!

உள்ளே பெரியவா மெய்மறந்து பூஜை பண்ணின்டு இருக்கார். கூப்பிட்டுச் சொல்லவும் முடியாது. பாம்பை விரட்டலாம்னா, அதோட உருவமே கிட்டே நெருங்க முடியாத அளவுக்கு பயங்கரமா இருந்துது. என்ன பண்றதுன்னு புரியாம எல்லாரும் தவிச்சுண்டு இருந்த சமயத்துல அந்த பாம்பு மெல்ல நகர்ந்து ஜன்னல்ல ஏறி உள்ளே நுழைங்சு பூஜை பண்ணின்டு இருந்த பெரியவா பக்கத்துல போய் கொஞ்ச நேரம் அப்படியே ஆடாம அசையாம நின்னுது. “புஸ்.. புஸ்’னு அது எழுப்பின் சத்தம் எதிரொலி மாதிரி கேட்டுது. சுத்தி நின்னவாளோட இதயம் லப்டப்னு அதுக்கு ஈக்வலா அதிர்ந்துது. இத்தனை ஆரவாரத்துலயும் பெரியவா முகத்துல துளி சலனம் இல்லை. கருமமே கண்ணா, பூஜை பண்ணிண்டு இருந்தார் அவர்.

எல்லாம் ஒரு சில நிமிடங்கள்தான். வந்த வேலை முடிஞ்சுதுங்கற மாதிரி அந்தப் பாம்பு சரசரன்னு வெளியில வந்து சட்டுன்னு எங்கேயோ போய் மறைஞ்சுடுத்து.
அதுக்கு அப்புறம் ரொம்பநேரம் கழிச்சு, பூஜையை முடிச்சுட்டு எழுந்தார் ஆச்சார்யா. எல்லாரும் பதட்டமும் பரபரப்புமா பாம்பு வந்துட்டு போன விஷயத்தை அவர்கிட்ட சொன்னாங்க. ஆனா, கொஞ்சம்கூட ஆச்சர்யமோ, அதிர்ச்சியோ இல்லாம எல்லாம் தெரியும்கிற மாதிரி அமைதியா கேட்டுண்டு ஒரு புன்னகை மட்டும் செஞ்சார் பெரியவா.

அவரோட அந்த தெய்வீகச் சிரிப்புக்கு என்ன காரணம்னு அடுத்த நாள் தெரியவந்துது. அன்னிக்கு மத்தியானம் பெரியவாளை தரிசிக்க வந்தவாள்ல இருந்த ரெண்டுபேர் ரொம்பவே பரபரப்பா இருந்தாங்க. அந்த ரெண்டுபேர்ல ஒருத்தர், ரொம்ப பிரபலமான இசையமைப்பாளர், இன்னொருத்தர் தெய்வீக ஓவியர். இசையமைப்பாளர், ஓவியர்கிட்டே பேசறச்சே, பரமாசார்யார்கிட்டே இருந்து ஏதோ உத்தரவு கிடைச்சிருக்கிறதாகவும், அதை நிறைவேத்தறதா வாக்குறுதி தரவே வந்திருக்கிறதாகவும் சொல்லிண்டு இருந்தார். யார் அவங்க, என்ன வாக்குறுதின்னு சொல்றதுக்கு முன்னால ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லிடறேன்.
ஸ்ரீரங்கத்துக்கு ராஜகோபுரத் திருப்பணி நடந்துண்டிருந்த காலகட்டம் அது. பதிமூணு நிலைகளோட கம்பீரமா அமைக்கத் திட்டமிட்டிருந்தாங்க. ஆனா, அதுக்கான செலவு ரொம்பவே அதிகமா இருந்துது. ஒவவொரு நிலையையும் கட்ட ஒவ்வொருத்தர் பொறுப்பு ஏற்றுக்கிட்டு இருந்தாங்க. அந்த சமயத்துல ஒர நிலைக்கான செலவை ஏத்துண்டிருந்தவர்கஙளால தவிர்க்க முடியாத காரணத்தால அதை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுது. அதனால, அந்தப் பொறுப்பை வேறயாருக்காவது தரவேண்டிய கட்டாயம் வந்துது. இதையெல்லாம் விளக்கி அப்போ இருந்த ஜீயர் சுவாமிகள் மகாபெரியவாளுக்கு கடிதம் எழுதியிருந்தார். லெட்டர் வந்ததுமே, அந்தப் பொறுப்பை யார்கிட்டே ஒப்படைக்கிறதுன்னு யோசிச்சார் மகாபெரியவா. மடத்துல இருந்தவங்க ஆளுக்கு ஒரு பெரிய மனுஷா பெயரைச் சொன்னாங்க. ஆனா, பெரியவா சினிமாவுல இசைத்துறையில பிரபலமான ஒருத்தர் பேரைத்தான் தேர்ந்தெடுத்தார்.

சரி, ஆளை தேர்ந்தெடுத்தாச்சு, அவர்கிட்டே எப்படிச் சொல்றது? அவர் சம்மதிப்பாரா மாட்டாரா? இப்படி எதுவுமே தெரியாத நிலையில தான், எங்கேயோ ஒரு கிராமத்துல போக்குவரத்துக்கே கஷ்டமான பகுதியில தங்கியிருந்த பெரியவளை தரிசிக்க வந்திருந்தார் மகாபெரியவா தேர்ந்தெடுத்த அதே பிரபலமான இசையமைப்பாளர். வரிசையில் வந்த அவர், பெரியவாளை தரிசிச்சு, நமஸ்காரம் பண்ணினார். எதுவும் சொல்லாம அவரை ஆசிர்வதிச்ச ஆசார்யா, “ராத்திரி நேரமாகப் போறது, இன்னிக்கு இங்கேயே தங்கிட்டு நாளைக்குப் புறப்படுங்கோ!’ அப்படின்னு சொன்னார்.

அன்னிக்கு ராத்திரி வழக்கமான தரிசனமெல்லாம் முடிங்சப்புறம் பெரியவா அந்த ரெண்டு பேரோடயும் பேசிண்டு இருந்தார். அப்போ இசைத்துறை சம்பந்தமா, ஓவியம் சார்ந்ததா, வானத்துல இருக்கிற நட்சத்திரங்களை பத்தின்னு ஏராளமான விஷயங்களை அவாகூட பேசிண்டு இருந்தார் ஆசார்யா. ஆனா, கோபுரம் கட்டவேண்டிய விஷயத்தைப்பத்தி பெரியவா எதுவமே அப்போ சொல்லலை.
மறுநாள், நித்யகர்மா எல்லாம் முடிங்சுது. அந்த ரெண்டுபேரும் பெரியவாளை தரிசிக்க வந்தாங்க. “பெரியவா, என்னை நம்பி பெரிய பொறுப்பை ஒப்படைக்கப்போறதா ஒரு தகவல் கிடைச்சது. இது என்னோட பாரம் இல்லை. உங்க பாரம்! இதை எப்படி நடத்திக்கணுமோ, அப்படி நீங்களாவே நடத்திப்பீங்கன்னு தெரியும். உங்க கட்டளையை நான் ஏத்துக்கறேன்’ அப்படின்னார், இசையமைப்பாளர்.

“கிட்டத்தட்ட எட்டுலட்சம் ஆகும்கறா. தொகை ரொம்ப பெரிசு. நீ எப்படிப் பண்ணுவே?’ கேட்டரா ஆசார்யா.

“இதுக்குன்னே தனியா ரெண்டு இசை நிகழ்ச்சி நடத்தலாம்னு இருக்கேன். வர்றதை அப்படியே குடுத்துடறேன். நிச்சயமா முடியும்?’

சொன்ன இசையமைப்பாளருக்கு ஆசிர்வாதம் பண்ணி ஒரு மாம்பழத்தைப் பிரசாதமா குடுத்துனுப்பினார் ஆசார்யா.

ரொம்ப சந்தோஷமா புறப்பட்டாங்க அவங்க ரெண்டு பேரும். சொன்னபடியே செஞ்சு முடிச்சார். அந்த இசையமைப்பாளர். ஸ்ரீரங்கம் கோபுரத்தோட ஆறாவது நிலை, அவரோட கைங்கரியமா கட்டப்பட்டுது.

எல்லாம் முடிஞ்சு ஸ்ரீரங்கம் கோபுரம் கட்டி முடிச்சு கும்பாபிஷேகம் நடந்த சமயத்துல மடத்துக்கு பிரசாதம் வந்துது. அன்னிக்கும் ஒரு பாம்போட நடமாட்டம் கண்ணுல பட்டதா எல்லாரும் சொல்லிண்டாங்க. அப்போதான் புரிஞ்சுது, மஹாகாவ்ல பெரியவா பூஜை பண்ணின சமயத்துல பெரிய பாம்பு வந்தது. ஸ்ரீரங்கத்துல இருக்கற அரங்கநாதரே தன்னோட அணையாக இருந்த ஆதிசேஷனை அனுப்பி, தனக்கு வேண்டியதை தானே கேட்டு வாங்கிக்க பெரியவாகிட்டே பேசியிருக்கலாங்கறது.

எல்லாம் சரி, ஸ்ரீரங்கம் கோபுரத்துல ஒரு நிலையை மகாபெரியவா ஆணைப்படி கட்டித்தந்த அந்த இசையமைப்பாளர் யார்? அவர்கூட சேர்ந்து பெரியவாளை தரிசிக்க வந்த ஓவியர் யாருன்னு சொல்லவே இல்லையேன்னுதானே கேட்கறீங்க?
இசைஞானி இளையராஜாவும், தெய்வீக ஓவியர் சில்பியுதான்

Advertisements