December 3, 2021, 4:30 pm
More

  “கடவுளைப் பார்க்க முடியுமா?'(18 வயது பையன் .பெரியவாளிடம்.)

  “கடவுளைப் பார்க்க முடியுமா?’-

  (18 வயது பையன் .பெரியவாளிடம்.)

  (கடவுளைப் பார்க்க நானும் .ஆர்வமாகத்தான் இருக்கேன். இன்னும் தேடிக் கொண்டிருக்கேன்!” -என்று மேலோட்டமாகச் சொன்ன பெரியவாளின் அற்புத பதில்)

  கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
  புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் (114)
  தட்டச்சு-வரகூரான் நாராயணன்

  பதினெட்டு வயதுப் பையன், விவேகானந்தர் போன்ற சில மகான்களின் சரித்திரங்களைப் படித்திருப்பான் போலிருக்கிறது.

  ‘கடவுளைப் பார்க்க முடியுமா?’ என்று சுளீரென்று ஒரு கேள்வியைப் பெரியவாளைப் பார்த்துக் கேட்டான்.

  ‘முடியும்’ என்ற பதில் வந்தால் ‘எங்கே எனக்குக் காட்டுங்கள்’ என்று மடக்கி விடலாம் என்றெல்லாம் திட்டம் போட்டுக் கொண்டு வந்திருப்பான் போல் தோன்றியது.

  (‘கடவுளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவருக்கு எத்தனை முகங்கள், கைகள் புடைவையா,வேஷ்டியா?கறுப்பா,சிவப்பா? என்று வரிசையாகக் கேட்டு, பெரியவாளைத் திக்கு முக்காடச் செய்யலாம் என்ற எண்ணமும் இருந்திருக்கக்கூடும்.

  வயதுக் கோளாறு! கொஞ்சம் படித்து விட்டு, எல்லாவற்றையும் கரைத்துக் குடித்து விட்டதாக நினைத்துக்கொள்ளும் ஈகோ!

  பெரியவாள்.சிரசைத் தூக்கி அவனைப் பார்த்தார்கள்.

  “கடவுள் இருக்கிறார்னு மகான்களெல்லாம் சொல்லியிருக்கா. சாஸ்திரம் சொல்றது. இவை இரண்டும் நம்பத்தகுந்தவை என்பதால், நாமும் ஒப்புக் கொள்கிறோம். கடவுளைப் பார்க்க நானும் ஆர்வமாகத்தான் இருக்கேன். இன்னும் தேடிக் கொண்டிருக்கேன்!”

  பையனுக்கு வேகம் தணிந்து விட்டது. சுவாமிகள், நான் கடவுளைப் பார்த்திருக்கிறேன்’ என்று சொல்லியிருந்தால் அவர்களைக் குடைந்திருக்கலாம் ‘ஒப்புக்கொள்கிறோம்’ என்று தெள்ளத் தெளிவாகக் கூறி விட்டார்களே? அப்புறம், வாதம் செய்ய என்ன இருக்கிறது?

  பெரியவாள் அந்தப் பையனை அருகில் உட்காரச்சொன்னார்கள்.

  “உன் மாதிரி புத்திசாலிப் பசங்கள் அந்தக் காலத்திலேயும் இருந்திருப்பார்கள்னு நினைக்கிறேன். நான் கேள்விப்பட்ட ஒரு கதையைச் சொல்றேன். கேட்கிறியா?”–பெரியவாள்.

  பையன் அக்கறையில்லாமல் தலையை அசைத்தான்.

  அணுக்கத் தொண்டர்களுக்கெல்லாம் உள்ளூர ஆத்திரம்.

  உபநிடதங்களில் ஒரு வாக்கியத்தின் ஆழ்பொருளை அறிந்து கொள்வதற்காக, பெரியவாளின் திருமுகத்திலிருந்து விளக்கம் வராதா என்று – அறநூல் விற்பன்னர்கள் தவித்துக் காத்துக் கொண்டிருக்கும் சந்நிதியில், அந்த அஸத்துப் பையனுக்குக் கதை சொல்கிறாரா, கதை!

  பெரியவாள் சொல்கிறார் பையனிடம்;

  ஒரு முனிவர்கிட்டே, மேதாவியான சிஷ்யன் இருந்தான். ஒருநாள்,’கடவுள் இருக்காரா?’ன்னு ஆசிரியரைக் கேட்டான்.

  ‘இருக்கார்’

  “அப்படியானால்,என் கண்ணுக்குத் தென்படலையே’ன்னான்.

  “கடவுள் இருப்பதை, அநேக அடயாளங்களால் ஒப்புக் கொள்ளலாமே தவிர, கண்ணாலே பார்க்க முடியாதுன்னார்

  .”பார்க்க முடியாத பொருளை எப்படி நம்புவது?ன்னான்.

  “ஆமாம்..நீ சொல்றது சரிதான்.நீ சிந்திக்கத் தெரிந்த புத்திசாலி நெறையக் கேள்வி கேட்கிறே. நான்,என் குருநாதர் சொன்னதையும், வேத – புராணங்கள் சொன்னதையும் அப்படியே நம்பி ஏத்துண்டுட்டேன்.கண்ணுக்குத் தெரியாத ஒரு பொருளை எப்படி ஒப்புக்கொள்றதுன்னு இப்பதான் எனக்கும் சந்தேகம் வருது.–ஆசிரியர்.

  பையன் கொஞ்சம் திமிராக நிமிர்ந்து உட்கார்ந்தான். கடைசியில் சுவாமிகள், கடவுள் இல்லை;இல்லவேயில்லை கட்சியில் சேர்ந்து விடுவார் போலிருக்கிறதே!

  பெரியவாள் தொடர்ந்தார்கள்.கதையை

  “முனிவர் இருந்த இடம் மரங்கள் அடர்ந்த சோலை. ஒரு பெருங்காற்றில் மரத்தின் கிளைகள் வேகமாக அசைந்தன. ஜில்லுன்னு காத்து. உடம்புக்கு ரொம்ப இதமா இருந்தது. முனிவர், சிஷ்யனைப் பார்த்து, ‘அந்த மரக்கிளைகளெல்லாம் ஏன் இப்படி அசுரத்தனமாக அசைகின்றன?” என்று கேட்டார்.

  “சுவாமி! இப்போ பெரிய காற்று வீசித்தே அதனாலதான்”

  “காற்றா..அப்படீன்னா வீசித்தா..அப்படீன்னா? நீ பார்த்தாயா? அடாடா…எனக்குக் காட்டியிருக்கப்படாதோ? நானும் ரொம்ப நாளா யத்தனம் பண்ணிண்டிருக்கேன், காற்றைப் பார்க்கணும்னு

  “நீயோ,காற்று வீசியது என்கிறாய். நானும் அந்த சுகத்தை அனுபவிச்சேன். ஆனால், அது காற்றின் வேலை என்பதை என்னால ஒப்புக் கொள்ள முடியவில்லை. கண்ணால் பார்க்க முடியாத ஒரு பொருள் இருக்கிறது என்று எப்படி ஒப்புக் கொள்வது’ என்றாராம் முனிவர்

  உடனே,சிஷ்யன் எழுந்து முனிவர் கால்லே விழுந்து, புரிஞ்சுடுத்து’ன்னு சொல்லி கண்ணாலே ஜலம் விட்டானாம்.

  அதி நவீன நாகரிகப் பையனும், மகாப் பெரியவா திருவடிகளில் நான்கு முறை நமஸ்காரம் செய்துவிட்டு,கண்களில் நீர் வழிய நின்றான்.

  “உன் அகத்திலே ரேடியோ இருக்கோ? எலெக்ட்ரிக் லைட் இருக்கோ? எலெக்ட்ரிக் ஃபேன் இருக்கோ?”–பெரியவா

  “இருக்கு”-நாகரிகப் பையன்.

  “இதெல்லாம் எப்படி வேலை செய்யறது?”–பெரியவா

  “எலெக்ட்ரிஸிட்டியாலே….”-பையன்

  “அந்த ஸிட்டி’யை நீ பார்த்திருக்கியோ?”–பெரியவா

  பையன் திக்குமுக்காடிப் போனான்

  .பெரியவா பிரசாதம் கொடுத்து ஆசீர்வதித்து அனுப்பினார்கள்.அருகில் இருந்த எல்லோரும் ‘இந்தக் குழந்தைக்கு என்ன அதிருஷ்டம்! பெரியவா எத்தனை நேரம் அவனோட பேசியிருக்கா!’  என்று ஆச்சர்யப்பட்டார்கள்.

  கடவுள் இருக்கிறார் – இருக்கவே இருக்கிறார்   

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,104FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,779FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-