ஆச்சரியம் தரும் அதிசய ஆன்மீக தகவல்கள்!

தமிழகத்தில் எத்தனையோ ஆலயங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆலயமும் ஏதோ ஒரு தல புராணத்தின் அடிப்படையில், அதிசயத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும். அப்படி, தலங்களில் குடிகொண்ட இறை மூர்த்தங்கள், அதிசயங்கள், தல விளக்கங்களுடன், ஆச்சரியம் தரும் அதிசய ஆன்மிகத் தகவல்கள் இங்கே… !

⊳ சின்ன சேலம் ஆறகழூரில் உள்ள காமநாதேஸ்வரர் ஆலயத்தில் அஷ்ட பைரவர்களையும் ஒரே நேரத்தில் தரிசிக்கலாம்.

⊳ சக்தியோடு கூடிய தட்சிணாமூர்த்தியை திருக்கள்ளில், சுருட்டப்பள்ளி ஆகிய தலங்களில் தரிசிக்கலாம்.

⊳ காங்கேயம் முருகன் ஆலயத்தில் கால்நடைகள் நோய் நொடியின்றி வளமாக வாழ கதனை என்று கூறப்படும் அதிர்வெடி வழிபாடு நடைபெறுகிறது.

⊳ சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அழகிரிநாதசுவாமி ஆலயத்தில், சிம்ம முகத்துடன் அனுமனை தரிசிக்கலாம்.

⊳ வந்தவாசிக்கு அருகில் உள்ள மேலஆவணியாபுரத்தில் சிம்ம முகத்தோடு அருள்கிறாள் மகாலட்சுமி! பக்தர்களைக் காக்க, யாகத் தீயால் எரிந்த, அடையாளம் காண முடியாத, முகமில்லாத நரசிம்மர் மடியில் அமர்ந்திருக்கிறாள். அந்த நரசிம்மரின் முகத்தை தேவிதான் ஏற்று அருள்பாலிக்கிறாள்.

⊳ ஆந்திராவில் உள்ள மங்களகிரி பானக நரசிம்மருக்கு நாம் எவ்வளவு பானகம் நிவேதனம் செய்தாலும், அந்தப் பானக அளவில் பாதியை விழுங்கி, மீதியை பிரசாதமாக நிறுத்திவிடுகிறார். இனிப்பான பானகம் எத்தனையோ லிட்டர் கொண்டு சேர்த்தாலும் அத்தலத்தில் ஈ எறும்பு இல்லாதது அற்புதம்.

⊳ ராமபிரான் நான்கு கரங்களுடன் மூலவராக செங்கல்பட்டிற்கு அருகே உள்ள பொன்பதர்கூடத்திலும் உற்சவராக கும்பகோணத்தருகே உள்ள புள்ளம்பூதங்குடியிலும் அருள்பாலிக்கிறார்.

⊳ மனித முகத்துடன் விநாயகரை கும்பகோணம் திருமீயச்சூர் அருகே உள்ள செதலபதியிலும் சிதம்பரம் தெற்கு வீதியிலும் தரிசிக்கலாம்.

⊳ வேதாரண்யம் அருகில் உள்ள கோடிக்காட்டில் ஆறு கரங்களும் ஒரு முகமும் கொண்ட முருகப்பெருமான் அருள்கிறார்.

⊳ கும்பகோணம் அருகில், நாச்சியார் கோயில் கல் கருடன் வீதிஉலா வரும்போது கருடனின் எடை கூடிக்கொண்டே செல்வதும் பின் ஆலயம் திரும்பும்போது குறைந்து கொண்டே வருவதுமான அற்புதம் நிகழ்கிறது.

⊳ சென்னை – மயிலை கோலவிழி அம்மனின் திருவிழிகள் மனிதர்களுக்கு இருப்பது போலவே உயிரோட்டமுள்ளதாக அமைந்துள்ளது.

⊳ விருத்தாசலம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் சப்தகன்னியர்களும் தாயாரின் தோழிகளாக பூஜிக்கப்படுகின்றனர்.

⊳ செங்கல்பட்டு – மதுராந்தகம் பிரதான சாலையில், படாளம் கூட் ரோடில் இருந்து இடதுபுறத்தில் சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள அரசர்கோயிலில் ஆறு விரல்கள் கொண்ட மகாலட்சுமியை தரிசிக்கலாம்.

⊳ சிதம்பரத்தில் உள்ள தில்லைக்காளி ஆலய பிராகாரத்தில் கடம்பவன தட்சிணாமூர்த்தி ரூபிணி எனும் பெயரில் பெண் வடிவ தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

⊳ தன் பக்தனுக்காக தீபாவளி அன்று திதி கொடுக்கும் கும்பகோணம் சார்ங்கபாணி பெருமாளுக்கு அன்றைய நிவேதனம், திதி சமையல்தான் நிவேதிக்கப்படுகிறது.

⊳ விநாயகரின் முகத்தையும் தேள் போன்ற வரிவரியான உடலமைப்புடன் உள்ள விருச்சிகப் பிள்ளையாரை கும்பகோணம் ஆடுதுறையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள மருத்துவக்குடியில் தரிசிக்கலாம்.

⊳ ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு கிழக்கே 14 கி.மீ. தொலைவில் உள்ள நயினார் கோயில் நாகநாதர் சந்நதியில் குழந்தைகளை ஆலயத்திற்கு நேர்ந்து விட்டு, பின் ஏலம் கேட்டு அவர்களை திரும்பப் பெறும் பிரார்த்தனை வழக்கத்தில் உள்ளது. இதை விற்று வாங்குதல் என அழைக்கின்றனர்.

⊳ திருச்சி, சிறுவாச்சூர் மதுரகாளிக்கு ஆலயத்திலேயே மாவிடித்து மாவிளக்கு ஏற்றுகின்றனர். வீட்டிலிருந்து மாவு எடுத்துச் செல்ல அங்கு அனுமதி இல்லை.

⊳ சென்னை, தாம்பரம் காஞ்சிபுரம் மார்க்கத்தில் உள்ள பண்ருட்டிக் கண்டிகையில் மகாமேரு, மாதங்கி, வாராஹி திதிநித்யா தேவிகள் போன்ற அனைத்து தேவியர்களுமே யந்திர வடிவிலேயே அருள்கின்றனர்.

⊳ வேலூர் அருகில் உள்ள சேண்பாக்கத்தில் 11 சுயம்பு விநாயகர்கள் ஒரே கருவறையில் அருள்கின்றனர்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.