ருஷி வாக்கியம் (6) – பேச்சு வெறும் சொல்லல்ல!

வாக்கு அதாவது சொல் என்பது அனைத்திற்கும் முக்கிய காரணமாகிறது. நல்ல சொல், கெட்ட சொல் என்று இரண்டு உள்ளன. இரண்டும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. கெட்ட வார்த்தை நம்மை அழிவுப் பாதையில் தள்ளுகிறது. நல்ல வார்த்தை முன்னேற்றுகிறது.

நல்ல சொல் என்று எதனைக் கூறுவது? சாஸ்திர வசனங்களை நல்ல சொல் என்று கூற வேண்டும்.

அதாவது ருஷிகள் சொந்த அனுபவத்தால் நமக்கு எது நன்மை பயக்கும் என்று உபதேசம் செய்கிறார்களோ அதனை நல்ல சொல் என்று கூறவேண்டும். ருஷிகள் உபதேசித்த வேதம், இதிகாசம், புராணம், தர்ம சாஸ்திரம் – இவற்றை சுபாஷிதங்கள் என்பார்கள். ஏனென்றால் “சர்வ லோக ஹிதம்” அதாவது உலகில் அனைவருக்கும் நம்மை பயக்கக் கூடிய சொற்களை ருஷிகள் கூறியதால் அவற்றை சுபாஷிதம் என்கிறோம்.

எனவே, வாக்கு எப்போது பவித்திரமாகும் என்றால், சாந்தமாகவும், பிறர் நன்மை கோரியும், எவ்வித கபடமுமின்றி கூறும் வாக்கு சுபாஷிதம் எனப்படுகிறது. ஆயின் கூறும் சொற்கள் நல்லவையாக இருந்தால் மட்டும் போதாது. அதற்கு சாஸ்திரப் பிரமாணம் இருக்க வேண்டும். ஏனென்றால் இன்றைக்கு ஒன்று நல்லதாகத் தோன்றும். நாளை மீண்டும் அது நல்லதல்ல போலிருக்கிறதே என்று தோன்றும். எனவே நமக்கு நல்லதாகத் தோன்றுவது என்பது முக்கியமல்ல. சாஸ்திரத்தை பிரமாணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் சாஸ்திரம் ஆவேசத்தால் பேசாது. அனுபவத்தால் எடுத்துக் கூறுகிறது. ஒரு தெளிவான மன நிலையில் பேசுகிறது சாஸ்திரம்.

ஏனென்றால் ஆவேசத்தோடு ஒருவன் இன்று ஒன்று சொல்வான். சில நாட்கள் கழித்து அவனே, ”அன்று ஏதோ ஆவேசத்தில் அவ்வாறு கூறிவிட்டேன். ஒன்றும் நினைத்துக் கொள்ளாதீர்கள்” என்பான். எனவே ஆவேசத்தில் பேசுவது உயர்ந்த சொல்லல்ல.
ஓரொரு சமயம் ஆவேசத்தோடும் முன்பின் யோசிக்காமலும் சாஸ்திரப் பிரமாணம் இல்லாமலும் பேசக்கூடிய சொற்கள் கேட்பதற்கு உயர்வாகத் தோன்றலாம். தர்க்கத்தோடு கூடியதாகத் தோன்றலாம். இனிமையாகக் கூட இருக்கலாம். ஆனால் அவற்றை சுபாஷிதம் என்று கூறக் கூடாது.

சுபாஷிதம், துர்பாஷிதம் இரண்டிற்கும் என்ன வேறுபாடு என்று வியாச மகரிஷி தெளிவாக எடுத்துக் கூறுகிறார். துர்பாஷிதம் என்பது கெட்ட சொல்.

விருப்பு, வெறுப்பு, அசத்தியம், குரோதம், காமம், பேராசை இந்த ஆறு தோஷங்களில் எதனைச் சேர்ந்திருந்தாலும் அதனை துர்பாஷிதம் என ஒதுக்கி விட வேண்டும் என்கிறார்.

முதலாவதாக விருப்பம். ஒன்றின் மீது பிரத்தியேகமாக இருக்கும் பிரேமை. விருப்பமான பொருள் பற்றி புகழ்ந்து பேசுவான் மனிதன். அதில் உண்மை இருக்காது. வெறும் மோகம் மட்டுமே இருக்கும். அதன் மேல் விருப்பம் அதிகமாக இருப்பதால் சாஸ்திரத்திற்கு விரோதமாகப் பேச வாய்ப்பும் அதிகம் இருக்குமென்பதால் விருப்பம் என்ற குற்றத்தோடு பேசினால் அது துர்பாஷிதம் என்கிறார்.

அதே போல் துவேஷம். ஒருவரைப் பிடிக்காமல் அவர் மேல் வெறுப்பிருந்தால் அவர் நல்ல செயல் செய்தாலும் கெட்டவையாகவே கண்ணில் படும். விருப்பமானவன் கெட்ட செயல் செய்தாலும் நல்லவையாகவே கண்ணில் படும். அதற்குத் தகுந்தாற்போல் பேசுவான். ஆதனால் பாரபட்சத்தோடு விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டு பேசும் சொற்களுக்கு துர்பாஷிதம் என்று பெயர்.

இனி அசத்தியம். பொய் கூறுவதும் துர்பாஷிதமே. ஓரொரு முறை விருப்பத்தாலோ வெறுப்பினாலே நம்மை அறியாமலே பொய் கூறுவோம். சில முறை வேண்டுமென்றே தெரிந்தே பொய் கூறுவோம். இவையெல்லாம் துர்பாஷிதம் கீழ் வரும்.
சாஸ்திரத்திற்கு விரோதமாகப் பேசுவதும் அசத்தியம் என்றே கூறப்படுகிறது. இது மிக முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய அம்சம். சாஸ்திர விரோதமாகப் பேசுவது துர்பாஷிதம். ஓரொரு முறை சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் நமக்குப் பிடிக்காமல் போகும். நமக்குப் பிடிக்காது என்பதால் சாஸ்திர வாக்கியங்களை வேண்டாம் என்று விலக்கக் கூடாது என்றறிய வேண்டும்.

ஏனென்றால், “தர்மத்தோடு சம்பாதிக்க வேண்டும். தர்மத்தோடு செலவழிக்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்” என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால், “தர்ம வழியில் சம்பாதிப்பது போதாது. எப்படியாயினும் சரி சம்பாதிக்க வேண்டும்” என்று நாம் நினைப்போம். இது சாஸ்திரத்துக்கு விரோதமான பேச்சு. இதனை துர்பாஷிதம் என்பர்.

அதே போல் கோபம். கோபம் வந்த போது பேசக் கூடாத, உசிதமல்லாதவற்றைப் பேசி விடுவோம். கோபம் வரும் போது பேசாமல் இருக்கக் கற்க வேண்டும். கோபாவேசம் குறைந்த பின் அப்போது பேசாமல் மௌனமாக இருந்தது நல்லதாகி விட்டது என்பது பின்னர் புரியும். எனவே கோபத்தில் பேசிய பேச்சுகள் துர்பாஷிமாகிறது.

இனி காமம். காமம் கண்ணை மறைக்கும். ஆசையில் பேசும் பேச்சுகள் கூட துர்பாஷிதமே.

இனி பேராசை. மனிதனுக்குப் பேராசை ஏற்படும் போது அதை அடைய எதை வேண்டுமானாலும் பேசுவான். அதர்மத்தைக் கூட தர்மம் போலவும் தர்மத்தை அதர்மம் போலவும் சாமர்த்தியமாகப் பேசுவான். அதனால் ஆசை எப்படிப்பட்ட ஆபத்தையேனும் ஏற்படுத்தி விடுமாதலால் பேராசை கூட துர்பாஷிதத்திற்குக் காரணமாகிறது.

எனவே இந்த ஆறு தோஷங்களோடு கூறிய சொல் துர்பாஷிதம் எனப்படுகிறது. இத்தகைய பேச்சு, பேசியவனையும் அதனை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டவனையும் கூட நரகத்தில் தள்ளுகிறது என்று எச்சரிக்கிறார் வியாச பகவான். அவித்யா என்றால் அஞ்ஞானம். ராகம் என்றால் ஒரு பொருள் மீது ஏற்படும் அபரிமிதமான விருப்பம். இவ்விரண்டாலும் கூட துர்பாஷிதம் ஏற்பட்டு ஜனனம் மரணம் என்னும் பிறவித் தளையில் நம்மைக் கட்டிப் போட்டு விடும் என்கிறார் வியாசர்.

இதன் மூலம் பேச்சு எப்படி இருக்க வேண்டும் என்றறிய முடிகிறது.

நல்ல சொல் என்றால் சாஸ்திர வசனமும், சாஸ்திர பிரமாணத்தோடு பேசும் பேச்சும். அப்படிப்பட்ட சுபாஷிதங்களை யார் கூறினார்கள் என்றால் ருஷிகள் கூறியுள்ளர்கள். ரிஷிகள் தம் தவச் சக்தியால் மனதை சுத்தம் செய்து கொண்டுள்ளார்கள். அவர்கள் மனதில் விருப்பு வெறுப்பு என்ற தோஷங்கள் இல்லை.

அதனால்தான் மகாபராதத்தில் கிருஷ்ண பரமாத்மா பீஷ்மரைப் பார்த்து கூறுகையில், “தர்மத்தை எடுத்துக் கூறுவதற்கு நீர் அருகதை உள்ளவர். ஏனென்றால் தர்மத்தை நீர் அறிவீர். அது முதன்மை காரணம். இரண்டாவது தர்மத்தை நீர் அனுசரித்து நடந்து கொண்டீர். மூன்றாவதாக உம் மனத்தில் எப்போதும் விருப்போ வெறுப்போ இல்லை” என்றான்.

இது மிக முக்கியமான அம்சம். ஏனென்றால் மனதில் விருப்பு வெறுப்புகள் இருந்தால் எத்தனை தர்ம சாஸ்திரம் தெரிந்திருந்தாலும் அவற்றை தமக்கு அனுகூலமாக மாற்றிப் பேசுவார்களே தவிர சத்தியத்தைக் கூற மாட்டார்கள்.
எனவே விருப்போ வெறுப்போ இல்லாமலிருப்பதே நல்ல சொற்களைப் பேசுவதற்குத் தேவையான தகுதி. இதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் ராகம், துவேஷம் இவற்றுக்கு அடிமையாகிப் போனவர்கள் அதற்குத் தகுந்தாற்போல் பேச்சை மாற்றிப் பேசுவார்கள்.

எனவே சுபாஷிதம் பேசுவதற்கு முக்கியமாக தகுதிகள் சாஸ்திர ஞானம், சாஸ்திரத்தைக் கடைபிடிப்பது, மூன்றாவது விருப்பு வெறுப்பின்றி உண்மை பேசும் வல்லமை என்பதை அறிந்து கொண்டு, சுபாஷிதத்தை கௌரவிப்போம், துர்பாஷிதத்தை விலக்கி விடுவோம். இதனை நமக்குக் கட்டளை இட்ட வியாச மகரிஷிக்கு வந்தனம் கூறுவோம்.

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் –ராஜி ரகுநாதன்.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...