ருஷி வாக்கியம் (25) – சூட்சும விஞ்ஞானம்

சில நுட்பமான விஷயங்களை வெளிப்படையாக நிரூபிக்க இயலாத போதோ, கண்ணால் பார்க்க இயலாத போதோ அவற்றை உபயோகமற்றதாக ஒதுக்கி விடுகிறோம். அவ்வாறு ஒதுக்குவது அறியாமை.

முன்னோர்கள் சூட்சுமமாக கூறிய அம்சங்களை நடைமுறைப்படுத்திப் பார்த்தால் அவற்றின் நல்ல பலன்களை இன்றைக்கும் பெற முடியும். எதனால் நம் பெரியவர்கள் அது போன்ற நியமங்களை ஏற்படுத்தினார்கள் என்பது நம் வெளிப்பார்வைக்கு புரியாமல் போகலாம். ஏனென்றால் நம் விஞ்ஞானம் அதை அறிந்துகொள்ளும் அளவுக்கு இன்னும் வளரவில்லை. ஆனால் நாமும் விஞ்ஞானத்தில் நுட்பமான பார்வை பெற முடியுமானால் முன்னோர் எதற்காக அவ்வாறு கூறினார்கள் என்பதை அறிய முடியும். ஆனால் அவ்வாறு சூட்சுமமாக அறியக்கூடிய நுட்ப சக்தியை அனைவரும் பெற இயலாது அல்லவா?

அதனால் ருஷிகள் கூறியுள்ள வாக்கியங்களை நம்பிக்கையோடு ஏற்பது நன்மை பயக்கக்கூடியது. நமக்குப் புரியாவிட்டாலும் கடைபிடித்து பார்த்தால் அற்புதமான பலன்களைப் பெறலாம் என்பதில் ஐயமில்லை.

உதாரணத்திற்கு…. நம் ஆயுர்வேத சாஸ்திர நூல்களை இப்போது உலகம் முழுவதும் ஆய்வு செய்து வருகிறார்கள். அவற்றில் தெரிவித்துள்ள மருத்துவ முறைகளாலும், நியமத்தோடு கூடிய வாழ்க்கை முறையினாலும் ஆரோக்கியத்தைப் பெற்று வருகிறார்கள்.

நவீன மருத்துவமுறை சில நோய்களை குணமாக்க இயலாததால் தற்போது மாற்று மருத்துவ முறை என்ற பெயரில் ஆயுர்வேதம் போன்ற பழமையான வழிமுறைகளை கடைபிடித்து ஆரோக்கியத்தை பெற்று வருகிறார்கள். நவீன மருத்துவ முறையால் தீர்க்க முடியாத எத்தனையோ நீண்ட கால நோய்களை தற்போது உலகமெங்கும் பாரத தேசத்தின் பழமையான வைத்திய முறைகளைக் கடைப்பிடித்து குணப்படுத்திக் கொண்டு வருவதை காணமுடிகிறது.

நம் பழமையான யோகக்கலை, நம் பழமையான வைத்திய முறை இவ்விரண்டையும் ஆழமாக ஆய்ந்து அறிய வேண்டிய தேவை உள்ளது. இங்கு சாமானிய மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. ஆயுர்வேதம் என்றவுடன் ஒரு மருந்தை கடையில் வாங்குவது போன்றது என்ற எண்ணத்திலிருந்து நாம் வெளிவரவேண்டும். ஒரு மருந்தை உபயோகிப்பது மட்டுமே ஆயுர்வேதம் அல்ல. ஒரு சரியான கட்டுப்பாடான வாழ்க்கை முறையை ஆயுர்வேத விஞ்ஞானம் கற்றுத் தருகிறது.

காலையில் எழுந்தது முதல் வாழ்க்கை முறை எப்படி இருக்க வேண்டும் என்று கூறுகிறது. அத்தகைய வாழ்க்கை முறையே சனாதன தர்மத்திலும் கூறப்படுகிறது. அதாவது வேதம் கூறிய வாழ்வியல் வழிமுறைகள் எல்லாம் ஆயுர்வேதம் கூறும் ஆரோக்கிய வாழ்க்கை முறையோடு ஒத்துப்போகிறது. இரண்டும் ஒன்றாகவே உள்ளது என்பதை ஆய்வின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

சரகர், சுஷ்ருதர் போன்றவர்கள் எழுதிய சம்ஹிதை நூல்களையும் இன்னும் ஆயுர்வேத ரத்னாவளி போன்ற நூல்களையும் ஆராயும்போது, மருந்து பற்றியும் வியாதி பற்றியும் மட்டும் கூறாமல் ஒருபுறம் ஜோதிட சாஸ்திரம், மறுபுறம் யோக சாஸ்திரம், இன்னொருபுறம் மந்திர சாஸ்திரம், யக்ஞ சாஸ்திரம் இவை அனைத்தையும் இணைத்து கூறுகிறது ஆயுர்வேத விஞ்ஞானம் என்பதை அறிய முடிகிறது.

அதாவது மருத்துவம் என்பது ஒரு பிரத்தியேகமான பிரிவாக இல்லாமல் இயற்கையோடும் உலகத்தோடும் மானுட ஜீவன வழிமுறையோடும் தொடர்பு கொண்டதாக உள்ளது.

ஆரோக்கியமான, ஆனந்தமான வாழ்க்கைக்கு எத்தனை நியமங்கள் உள்ளன என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஆயுர்வேதத்தின்படி “ஆரோக்கியம்” என்ற சொல்லுக்கு “ரோகம் இல்லாத தேகம்” என்று மட்டுமே பொருள் அல்ல. சிறந்த உடல், சிறந்த மனம், சிறந்த புத்தி இவற்றோடு சுத்தமான அந்தக்கரணம் இருந்தால் அதுவே ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்று பொருள் கூறியுள்ளார்கள். அதாவது உடல் ஆரோக்கியம் மட்டுமே அன்றி மானசீகமான சுத்தம், மானசீகமான பவித்திரம் இவையும் தேவை. அப்படிப்பட்ட சாத்வீகமான ஜீவன வழிமுறையால் நம் ஆரோக்கியத்தை நல்லவிதத்தில் காத்துக் கொள்ள முடியும். சாத்வீக உணவு ஏற்பது, ராஜஸ தாமஸ பதார்த்தங்களை குறைந்த அளவில் கட்டுப்பாட்டோடு ஏற்பது இவை வைத்திய சூத்திரங்களில் ஒன்று.

வைத்திய சாஸ்திரம் கூறும் சில கூற்றுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. சூக்ஷ்ம விஞ்ஞான சாஸ்திரம் என்பது இதுதான்.

சில வியாதிகள் குணமாவதற்கு பசும்பால் அருந்தச் சொல்வார்கள். அந்த பசும்பாலில் இருக்கும் சிறப்பு என்னவென்றால் குறிப்பிட்ட தீனி தின்ற பசு மாட்டின் பாலை மட்டுமே அருந்தி வந்தால் சில நோய்கள் குணமாகும். பசும்பாலுக்கும் பசுமாட்டின் உணவுக்கும் தொடர்பு உள்ளது என்பதை இதிலிருந்து அறிய முடிகிறது.
பசுமாடு எப்படிப்பட்ட ஆகாரத்தை உண்கிறதோ அதன் குணம் அதிலிருந்து கிடைக்கும் பாலிலும் கலந்திருக்கும். தேவையற்ற குப்பைகளையும் பிளாஸ்டிக் பேப்பர்களையும் தின்னும்படி செய்துவிட்டு பின்னர் அந்த பசு மாட்டிலிருந்து பால் கறந்தால் அந்த பால் எந்த அளவு நன்மை செய்யும் என்று எவ்வாறு கூற இயலும்? அதனால் பசுவிற்கு போடும் ஆகாரம் கூட ஒரு நியமத்தோடு இருக்க வேண்டும். பசுக்களை வளர்க்கும் விதத்தைப் பற்றிக் கூட வைத்திய விஞ்ஞானம் போதிக்கிறது.

அதேபோல ஒரு குறிப்பிட்ட நோய்க்கு மருந்தாக எந்த மச்சமும் இல்லாத பசுவின் பாலை அருந்தச் சொல்லியிருக்கிறார்கள். அதிலும் அதன் கன்று உயிரோடு இருக்க வேண்டும். பூச நட்சத்திரம் உள்ள நாளில் பால் கறக்க வேண்டும். இந்த மூன்றும் சேர்ந்த போது அத்தகைய பசுமாட்டில் இருந்து கலந்த பாலை மருந்தாக அருந்தினால் சில வியாதிகள் குணமாகும் என்று ஆயுர்வேத சாஸ்திரத்தில் ஒரு ஸ்லோகம் உள்ளது. நம் பூமியின் மீது பூச நட்சத்திரம் எத்தனை தூரத்தில் இருந்து தாக்கம் ஏற்படுத்துகிறதோ பாருங்கள்! இதன் மூலம் ஜோதிட சாஸ்திரத்திற்கும் வைத்திய சாஸ்திரத்திற்கும் உள்ள தொடர்பு விளங்குகிறது.

நம் புராதன வைத்திய சாஸ்திர நூல்களில் எவ்விதம் அருந்திய பாலால் எந்த வியாதி குணமாகும் என்று கூறப்பட்டுள்ளதோ இன்றைக்கும் அவ்விதம் அருந்தினால் அந்த வியாதி குணமாகிறது என்பதை பார்க்கும்போது நம் சாஸ்திரங்களில் எத்தகைய சயின்டிஃபிக் உண்மைகளை கூறியுள்ளார்கள் என்பதை உணர முடிகிறது.

அந்த உண்மைகளை தற்கால நவீன சயின்ஸ் புரிந்து கொள்ள இயலாததால் அதனை ஏளனம் செய்து ஒதுக்குகிறது. பகுத்தறிவு வாதிகளும் நாத்திகர்களும் நம் புராதன சாஸ்திரங்களை நம்பக்கூடாது என்று பிரச்சாரம் செய்து மக்களிடம் வியாதி பெருக வழி வகுக்கிறார்கள். இவர்களின் புத்தி வீச்சும், அறிவும் போதாமையால் இவர்கள் செய்யும் தர்க்கத்திற்கு நம் புராதன சாஸ்திரங்களின் மேலான ஞானம் எட்டுவதில்லை.

ஒரு நட்சத்திரத்தின் நகர்வுக்கும் ஒரு பசுவின் உடல் அமைப்புக்கும் அதன் கன்றுக்கும் நாம் அருந்தும் பாலுக்கும் நம் வியாதி குணமாவதற்கும் உள்ள தொடர்பை விவரித்து சாஸ்திரம் கூறி இருக்கிறது என்றால் அது எத்தகைய சூட்சுமமான விஞ்ஞானம் என்பதை கவனிக்க வேண்டும்.

இதேபோல் மந்திரங்களுக்குள்ள சக்தியையும் விளக்கியுள்ளார்கள். அதேபோல் மூலிகைகளைப் பற்றியும் கூறியுள்ளார்கள். வைத்திய சாஸ்திரத்தில் மட்டுமின்றி புராணங்களிலும் ராமாயணம் போன்ற இதிகாசங்களிலும் கூட மூலிகைகள் பற்றி கூறியுள்ளார்கள்.

ஒவ்வொரு மூலிகைக்கும் ஒவ்வொரு சக்தி உள்ளது. சில ஔஷதிகளை சில நாட்களில் மட்டுமே பறிக்க வேண்டும். சிலவற்றை சில நட்சத்திரங்கள் உள்ள நாட்களில் மட்டுமே பறிக்க வேண்டும். அதேபோல் மூலிகையை மருந்தாக மாற்றும் செயலில் கூட சில மந்திரங்களை உச்சரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மூலிகைக்கும் ஜோதிட சாஸ்திரத்திற்கு மந்திர சாஸ்திரத்திற்கும் நம் உடலின் வியாதி குணமாவதற்கும் உள்ள தொடர்பினை விளக்குகின்றன நம் சாஸ்த்திரங்கள்.

அதனால்தான் பாரத தேசத்தின் புராதன வைத்திய சாஸ்திரத்தை இன்று பிரபஞ்சம் மொத்தமும் தலையில் வைத்து தாங்குகிறது.

இத்தகைய ஆயுர்வேத வைத்திய முறையை நோக்கும்போது மனித இனத்தை ஆரோக்கியமாக வாழ வைப்பதற்கு மகரிஷிகள் எத்தகைய சூட்சும விஞ்ஞானத்தை போதித்துள்ளார்கள் என்பதை உணரமுடிகிறது.

அப்படிப்பட்ட நுட்பமான மருத்துவ முறையை பலப்பல யுகங்களுக்கு முன்பே கொண்டிருந்த அற்புதமான பாரதீய சனாதன தர்மத்திற்கு வந்தனம்!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...