ருஷி வாக்கியம் (27) – தர்மத்தை ஏன் பின்பற்ற வேண்டும்?

“மோகம், பேராசை, அறியாமை, விவேகமின்மை போன்றவற்றால் தர்மப் பாலத்தைத் தகர்க்கக் கூடாது!” என்பது ராமன் கூறிய வாக்கியம். இதைப் பற்றி மஹாபாரதத்திலும் வியாசபகவான் அற்புதமாக விளக்கியுள்ளார்.

“ந ஜாது காமான் ந பயான்ன லோபாத்
தர்மம் த்யஜே ஜ்ஜீவிதஸ்யாபி பேதோ: !
நித்யோ தர்ம: சுக துக்கேது அநித்யே
ஜீவோ நித்ய: ஹே துரஸ்ய த்வ நித்யே !!”
-இது மகாபாரதத்தில் வியாசர் கூறியுள்ள ஆழமான வாக்கியம்.

நித்தியம் எது? அநித்தியம் எது? என்பதை அறிந்து கொள்ளும்படிக் கூறுகிறார். சாதாரணமாக தர்மத்தை எதற்காக மீறுகிறோம்? சுகம் பெற வேண்டும் என்றும் துயரத்திலிருந்து வெளிவர வேண்டும் என்றும் தர்மத்தை மீறுகிறோம். ஆனால் இன்றைய தாற்காலிகமான சுகத்திற்காக தர்மத்தை விட்டு விலகினால் அது நமக்கு சாஸ்வதமான துக்கத்தை கொடுக்கும். இன்றைக்கு தற்காலிகமான கஷ்டத்தைப் பொறுத்துக் கொண்டு தர்மத்தை பின்பற்றினால் அது நிரந்தரமான சுகத்தை அளிக்கும். இது விஸ்வ நியமம். அதுவே வேத நியமம். சாஸ்திர நியமம். அதுவே தர்மம்!

அதனால், “நித்யோ தர்ம: சுக துக்கேது அநித்யே” என்ற அற்புதமான வார்த்தையை கூறுகிறார். – “தர்மம் சாஸ்வதமானது. சுகதுக்கங்கள் தற்காலிகமானவை”. இது எப்போதும் நம் உள்ளத்தில் எதிரொலிக்க வேண்டிய ருஷி வாக்கியம்.

வாழ்க்கையை சிறிதளவு ஆராய்ந்து பார்த்தாலே இது எளிதில் விளங்கும். சுகமும் துக்கமும் ஸ்திரமாக நிற்பதில்லை. இவ்விரண்டும் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருக்கும். பின் எதுதான் நிலைத்து நிற்கும்? தர்மம் மட்டுமே நிலைத்து நிற்கும்!

தர்மம் சாசுவதமானது. ஜீவியும் சாஸ்வதமானவான். இதனை தெரிந்து கொள்ள வேண்டும். ஜீவன் எப்போதும் இருக்கக் கூடியவன். தர்மச் செயல்களைச் செய்தாலும் அதர்மச் செயல்களைச் செய்தாலும் எப்போதோ மரணிக்கத்தானே போகிறோம் என்று எண்ணக்கூடாது. மரணிப்பது உடல்தானே தவிர ஜீவன் மரணிப்பதில்லை. ஜீவன், தான் செய்த தர்ம அதர்மங்களை அனுபவித்தபடியே மேலும் மேலும் பிறவி எடுத்துக் கொண்டே இருப்பான். இதனை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

சாஸ்வதமான ஜீவன் சாசுவதமான தர்மத்தை கடைபிடிக்க வேண்டுமே தவிர தற்காலிகமான சுகங்களுக்காக தர்மத்தை மீறினால் ஜீவன் தண்டனை அனுபவிக்கிறான். அதனால்தான் “ந ஜாது காமான் ந பயான்ன லோபாத்
தர்மம் த்யஜே ஜ்ஜீவிதஸ்யாபி பேதோ: !” என்று எச்சரிக்கிறார்.

தன் வாழ்க்கையின் நலனுக்காக கூட தர்மத்தை விட்டு விலகக் கூடாது. இது மிகவும் முக்கியம். அதாவது உயிரை விட தர்மத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். காமத்தாலோ பயத்தாலோ பேராசையாலும் தர்மத்தை மீறக்கூடாது என்ற அற்புதமான கூற்றை மகாபாரதத்தில் வியாசர் போதித்துள்ளார். ராமாயணமும் அதையே கூறுகிறது. ஏனென்றால் ராமாயணத்துக்கும் மகாபாரதத்திற்கும் மூல தத்துவத்தை எடுத்துக் கூறிய வேதமும் அதையேதான் கூறுகிறது.

வேதம் பொது மக்கள் அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்பதற்காக இராமாயணம் மகாபாரதம் பாகவதம் போன்ற வடிவங்களில் வந்துள்ளது. இந்த சிறந்த கருத்தை நினைவில் கொள்ளவேண்டும்.

தர்மம் என்பது திடீரென்று ஒரேயடியாக சாதிக்கக் கூடியது அல்ல. சின்னச் சின்ன தர்மங்களை நாம் கடைப்பிடித்தாலும் அந்த சின்ன தர்மங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நம்மைப் பாதுகாக்கும். எனவே மனிதன் கொஞ்சமாவது தினமும் தர்மச் செயல்களைச் செய்து வர வேண்டும். ஒவ்வொரு நாளும், ‘இன்று நான் எந்த அளவு தர்மம் செய்ய முயற்சித்தேன்?’ என்று ஆலோசித்து வரவேண்டும்.

தர்மச் செயல்கள் என்றால் என்ன? சாஸ்திரங்கள் கூறிய நல்ல செயல்கள். சாஸ்திரங்கள் இவற்றைச் செய்யாதே என்று விலக்கியவற்றைச் செய்யாமல் இருப்பதும் தர்மமே! வேதம் முதலான சாஸ்திரங்கள் கூறியுள்ள சத்தியம், அகிம்சை, சௌசம் முதலான நியமங்களோடு கூடிய தர்மங்கள் எதுவோ அத்தகைய தர்மங்களை நாம் சிறிதளவாவது செய்து வந்தால் அவை ஒன்று சேர்ந்து நம்மைக் காத்தருளும். அதனை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பதை அற்புதமான தர்ம சூத்திரங்களை கொண்டு மகரிஷிகள் விளக்கியுள்ளார்கள்.

“தர்மத்தைப் பின்பற்றுவதாக சொல்லிக் கொண்டு பிறரை துன்புறுத்தக் கூடாது. தர்மத்தை பின்பற்றுவதற்கு முதல் தகுதி பிறரை தொந்தரவு செய்து பீடிக்காமல் இருப்பதே! இது எப்படிப்பட்டதென்றால் தேனீக்கள் தேனை அருந்தும்போது பூக்களை துன்புறுத்தாமல் எவ்விதம் தேனை ஏற்குமோ, அதே போல் உலகியல் வாழ்வில் செயல்படும் போது பிறரை துன்புறுத்தாமல் தர்மத்தைக் கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு சிறிது சிறிதாக இயன்ற அளவு தர்மத்தை பின்பற்றினாலும் அவை எல்லாம் சேர்ந்து ஒரே குவியலாகி நம்மைப் பாதுகாக்கும். அது எவ்வாறெனில் தேனீக்கள் சிறிது சிறிதாக உறிஞ்சி எடுத்து கூட்டில் சேர்த்த தேன் எவ்வாறு பயன்படுகிறதோ அதே விதமாக நாம் சேர்த்து வைத்த தர்மம் நமக்கு இவ்வுலகிற்கு மட்டுமின்றி மேலுலகத்திற்கும் உதவி புரியும் என்று உறுதியளிக்கிறார்.

மனித ஜீவிதம் மிகவும் சிறியது. அதன்பிறகு உள்ள ஜீவிதம் மிகவும் பெரியது. இதுதான் ஆன்மிகம். இந்த கருத்தைப் புரிந்து கொண்டால் இப்பூவுலகில் கஷ்டப்பட்டாவது தர்மத்தைப் பின்பற்றுவோம். நாம் பின்பற்றிய தர்மம் நமக்குப் பிறகு நம் சந்ததியினரையும் காப்பாற்றும். நமக்கும் மேலுலகத்தில் பயன்படும். இது பாரதீய சனாதன தர்மம் போதிக்கும் அற்புதமான அம்சம்!

தர்மத்தைப் பின்பற்றும் போது தற்காலிகமாக கஷ்டமாக இருந்தாலும், பலன் வடிவிலும் பரிணாமத்திலும் அது நிரந்தரமான சுகத்தை அளிக்கக் கூடியது. ஏனென்றால் சுகம் என்பது தர்மத்தின் பலன். துக்கம் என்பது பாவத்தின் பலன். இதனை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்.

அதனால்தான் சுக்கிராச்சாரியார், “சுகம் ச ந வினா தர்மம், தஸ்மாத் தர்ம பரோ பவேத்!” என்றார். “தர்மமின்றி சுகம் இல்லை என்பதால் எப்போதும் தர்மத்திற்கு கட்டுண்டிரு!” என்கிறார். இந்த ஒரு வாக்கியத்தில் எத்தனை உயர்ந்த கருத்தை கூறியுள்ளார் பாருங்கள்!

சனாதன தர்மம் கூறும் அற்புதமான இந்த வாக்கியங்களை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...