“மது அருந்திய ஆசாமி மடத்தில்”

“மது அருந்திய ஆசாமி மடத்தில்”
 
(மகான்கள் தீர்க்கதரிசிகள்! அவர்களது செயல்பாடுகளில் அவர்களின் ஒவ்வொரு பார்வையிலும் கூட ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும். இதை உணர்ந்து செயல்பட்டால், மகான்களது ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.)
26229690 1821457997899357 3857730218347429361 n - Dhinasari Tamil
 
16-02-2013 போஸ்ட்
 
 
சேத்திரங்கள் பலவற்றுக்கும் சென்று, அங்கு உறைந்திருக்கும் இறைவனை தரிசிக்க வேண்டும்; புண்ணிய நதிகளில்- தீர்த்தங்களில் நீராட வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. மகாமகம், கும்பமேளா போன்ற புண்ணிய காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நதிகளில் நீராடுவதை இன்றைக்கும் காணலாம்! புண்ணிய நதிகளில் நீராடினால்… பாவங்கள் நீங்கி, மனதுள் நிம்மதி பெருகும்!
 
 
 
‘கடலைக் காண்பதே விசேஷம். இதைப் பார்ப்பதே புண்ணியத்தைத் தரும்’ என்பர். ஆனால், சாதாரண நாளில், கடலில் நீராடக் கூடாது. ஆடி மற்றும் தை அமாவாசை, கிரகணம், மாசி மகம் போன்ற புண்ணிய காலங்களில் மட்டுமே கடலில் நீராடலாம். ஆனால் ராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், தனுஷ்கோடி ஆகிய தலங்களில் உள்ள கடலில் எப்போது வேண்டுமானாலும் நீராடலாம்; புண்ணியம் பெறலாம்.
 
 
 
காஞ்சி மகா பெரியவர், தமிழகம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டிருந்தார். ஆடி அமாவாசை புண்ணிய காலம் நெருங்குவதையொட்டி, வேதாரண்யத்தில் ஸ்நானம் செய்ய முடிவு செய்தார்
 
 
 
பெரியவாள்! அதற்கு தக்கபடி தனது யாத்திரையை அமைத்துக் கொண்டார் ஸ்வாமிகள். ஸ்ரீராமபிரான், காரண-காரியம் இல்லாமல் எந்தவொரு வார்த்தையையும் பேச மாட்டார்; செயல்பட மாட்டார் என்பர். மகான்களும் அப்படித்தான்… வெட்டிப் பேச்சுகளும் வீண் செயல்களும் அவர்களிடம் இருக்காது!
 
 
 
யாத்திரையின்போது, வழியில் உள்ள சில ஊர்களில் முகாமிட்டுத் தங்கி, பூஜைகளை முடித்துக் கொண்டு பிறகு பயணத்தைத் தொடர்ந்தார் ஸ்வாமிகள். இப்படி ஓர் ஊரில் முகாமிட்டிருந்தபோது, அங்கு பசியால் வாடிய நிலையில், ஒருவர் வந்தார்.
 
 
 
அவரைக் கண்டதும் மடத்து மேனேஜரை அழைத்த ஸ்வாமிகள், ”இவருக்கு ஆகாரம் கொடு; அப்படியே நல்ல வேஷ்டி- துண்டும் கொடு” என்றார். மேனேஜரும் அப்படியே செய்தார்.
 
 
 
பிறகு பெரியவாளிடம் வந்து, ”தங்களின் உத்தரவுப்படி உணவும் உடையும் கொடுத்தாச்சு. அவரை அனுப்பிடலாமா?” என்று கேட்டார்.
 
 
 
உடனே பெரியவாள், ”மடத்துக்கு முக்கிய பிரமுகர்கள் வந்தால் அவர்களை எப்படி கவனிப்பீர்களோ… அதேபோல இவரையும் கவனியுங்கள்; ராஜோபசாரம் செய்யுங்கள்” என்றார்.
 
 
 
மேனேஜருக்குக் குழப்பம்! இருப்பினும் பெரியவாளின் உத்தரவுப்படி, யாத்திரையில் புதிய நபரும் உடன் வந்தார்.
 
 
 
தினமும் மேனேஜரிடம், ‘அவருக்கு சாதம் போட்டாயா?’, ‘அவரை நன்றாகக் கவனித்துக் கொள்கிறாயா?’ என்று விசாரித்துக் கொண்டே இருந்தார் ஸ்வாமிகள். நாட்கள் நகர்ந்தன. அந்த புதிய ஆசாமி, திடீரென மது அருந்தி விட்டு வந்தார். கடவுளைத் திட்டினார்; மடத்து ஊழியர்களைக் கண்டபடி ஏசினார்; தனக்கு உணவு மற்றும் உடை தந்து ஆதரித்த பெரியவாளையும் இஷ்டத்துக்குத் திட்டித் தீர்த்தார்.
 
 
 
இதைக் கண்டு பொறுமை இழந்த மேனேஜர், ஓடோடி வந்து, பெரியவாளிடம் விவரம் முழுவதும் சொன்னார். ‘இந்த ஆசாமியை அனுப்பி விடுங்கள்’ என்று வேண்டினார்.
 
 
 
இதைக்கேட்டு வாய்விட்டுச் சிரித்தார் பெரியவாள். இம்மியளவு கூட அந்த ஆசாமி மீது கோபமே வரவில்லை ஸ்வாமிகளுக்கு!
 
 
 
”ஸ்வாமி! அந்த ஆசாமியை அனுப்பிடட்டுமா?” என்று மீண்டும் கேட்டார் மேனேஜர். ஆனால், பெரியவாள் மறுத்துவிட்டார்.
 
 
 
ஆடி அமாவாசை! இந்த நாளில் காஞ்சி மகா பெரியவாள், வேதாரண்யத்தில் சமுத்திர ஸ்நானம் செய்யப் போகிறார் எனும் தகவல் அறிந்து சுற்றியுள்ள பல ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வேதாரண்யத்துக்கு வந்து சேர்ந்தனர்.
 
 
 
ஆடி அமாவாசை நாளில் கடலில் நீராடுவது புண்ணியம்; அதிலும் காஞ்சி மகானுடன் நீராடுவது பெரும் பேறு என்று எண்ணியபடி பெருங் கூட்டமாக கடற் கரைக்கு வந்திருந்தனர். வயதான மூதாட்டிகளும் ஆர்வத்துடனும் பக்தியுடனும் கரையில் காத்திருந்தனர்!
 
 
 
ஸ்வாமிகள் கடற்கரைக்கு வந்தார்; அவரை அனைவரும் நமஸ்கரித்தனர்; நீராடுவதற்காக கடலில் இறங்கினார் பெரியவாள்! அவரைத் தொடர்ந்து மூதாட்டிகள் உட்பட எண்ணற்ற பக்தர்கள் பலரும் தபதபவென கடலில் இறங்கினர்.
 
அவ்வளவுதான்!
 
 
மூதாட்டிகள் சிலரை அலை இழுத்துச் செல்ல… பலரும் செய்வதறியாமல் தவித்து மருகினர்.
 
 
 
அப்போது… ஆரவார அலைகளைப் பொருட் படுத்தாமல் பாய்ந்து சென்று, மூதாட்டிகளை இழுத்து வந்து, கரையில் சேர்த்தார் ஒருவர். அவர் வேறு யாருமல்ல… பெரியவாள் உட்பட அனைவரையும் மது போதையில் ஏசினானே… அந்த ஆசாமிதான்!
 
 
 
இவற்றைக் கவனித்த ஸ்வாமிகள், மேனேஜரைப் பார்த்து மெள்ள புன்னகைத்தார். உடனே அவர் ஓடோடி வந்து பெரியவாளை நமஸ்கரித்தார்.
 
 
மகான்கள் தீர்க்கதரிசிகள்! அவர்களது செயல்பாடுகளில்… அவர்களின் ஒவ்வொரு பார்வையிலும் கூட ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும். இதை உணர்ந்து செயல்பட்டால், மகான்களது ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.
 
 
மகான்களின் பூரண ஆசி கிடைத்து விட்டால், வாழ்நாளெல்லாம் திருநாள்தானே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Latest Posts

spot_imgspot_img

Follow Dhinasari on Social Media

19,160FansLike
373FollowersFollow
64FollowersFollow
0FollowersFollow
2,485FollowersFollow
17,300SubscribersSubscribe
-Advertisement-