“ஐயோ…சனியன் புடிச்சு போனவனே…இந்த பாவி என்றைக்கு விலகுறது… இவனுக்கு படிப்பு மண்டையிலே ஏறப்போவுது…!”

கிரகங்களை திட்டாதீர்கள்-பெரியவா
அக்டோபர் 27,2015,-தினமலர்.
“ஐயோ…சனியன் புடிச்சு போனவனே…இந்த பாவி என்றைக்கு விலகுறது… இவனுக்கு படிப்பு மண்டையிலே ஏறப்போவுது…!”
“இந்த குரு நீசமாகி கிடக்கிறாராமே! இவளுக்கு எப்ப தான் கல்யாண யோகம் வந்து தொலையப் போகுதே…”
“ராகுவைப் போல கொடுப்பாருமில்லை… கெடுப்பாருமில்லையாம்…இவர் என்னத்த கொடுத்தாரு… கெடுக்கிறதுக்குனே என்னை தேர்ந்தெடுத்திருக்கிறானே…”
இப்படி ஒவ்வொரு கிரகத்தையும் திட்டித் தீர்ப்பவர்கள் ஏராளம். இப்படி கிரகங்களைத் திட்டக்கூடாது என்கிறார் காஞ்சி மகாபெரியவர்.
ஒருமுறை, பெரியவரைத் தரிசனம் செய்ய ஜோதிடர் ஒருவர் வந்தார். அவரது குடும்பம் மிகவும் பெரியது. ஜோதிடம் கணித்துச் சொல்வதில் கிடைக்கும் வருமானம் போதவில்லை. செலவுக்கு ரொம்பவே சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.
பெரியவரை தரிசனம் செய்த அவர், “பெரியவா… எனக்கு வருமானம் போறலே! ரொம்ப சிரமப்படறேன்… நீங்க தான், எனக்கு அனுக்கிரகம் செய்து, வருமானம் உயர அருளாசி தரணும்,” என்று வேண்டிக் கொண்டார்.
பெரியவர் அவரிடம், “நீ உன்னோட அப்பா வசித்த பூர்வீக வீட்டில் தானே இருக்கே…?” என்று கேட்டார்.
அதற்கு ஜோதிடர், “இல்லை பெரியவா… அங்கே என் அண்ணா இருக்கான். அதற்கு மேலண்டை இருக்கிற ஒரு வீட்டில் நான் குடியிருக்கேன்…” என்று பதிலளித்தார்.
“நீ அந்த வீட்டில் குடியிருக்க வேண்டாம். உன்னோட பூர்வீக வீட்டிற்கு கிழக்கு பக்கத்திலே இருக்கிற பழைய மாட்டுக்கொட்டகை இருக்குதே…அந்த இடத்திலே, ஒரு குடிசை போட்டுகிட்டு அங்கே போய் குடி இரு,” என்றார் பெரியவர்.
அவர் அவ்வாறு சொன்னதற்கு காரணம் இருந்தது. அந்த ஜோதிடரின் குடும்பம் பரம்பரை பரம்பரையாய் அம்பாளை உபாசனை (பூஜை) செய்த குடும்பம். அதனால், புனிதம் மிக்க பசு கொட்டிலில் குடியிருக்கச் சொன்னார் பெரியவர்.
அத்துடன், “நீ எல்லாருக்கும் பலன்கள் சொல்லும் போது, கிரகங்கள் சரியில்லேன்னு பொதுவாகச் சொன்னால் போதுமே…!
எதுக்காக, உங்க ஜாதகத்திலே குரு நீசன்… சனி பாபி, புதன் வக்ரம் என்றெல்லாம் சொல்றே…குரு என்பவர், தட்சிணாமூர்த்தி சொரூபம். சனி என்பவர் சூரியனின் புத்திரர். ஈஸ்வர பட்டம் பெற்றவர். அவரை பாபி என சொல்லலாமா!
திருமணப் பொருத்தம் பார்க்க வருகிறவர்களிடம் கூட, “”பொருத்தம் இல்லே…” என நிர்தாட்சண்யமாக சொல்லாமல், பெண்ணுக்கு விவாகம் வர கொஞ்சம் தாமதமாகும் என்று சொல். புத்திர பாக்கியம் பற்றி கேட்டால், அதற்கு பாக்கியமில்லை என வெளிப்படையாகச் சொல்லாமல், கொஞ்சம் பொறுத்து பார்க்கலாமே… என சமாளி,” என்று புத்திமதி கூறினார்.
“இனிமேல் நீங்கள் சொன்னபடியே செய்கிறேன்,” என்ற ஜோதிடர், பெரியவரிடம் ஆசி பெற்று கிளம்பினார்.
நாமும் இனி கிரகங்களைத் திட்டாமல், அவை தரும் சோதனைகளை கடவுளிடம் ஒப்படைத்து விட்டு, நம் பணியைத் தொடர வேண்டும். அப்படி செய்தால், கிரகங்கள் மகிழ்ந்து நம்மை நல்வாழ்வுக்கு அழைத்துச் செல்லும்