16/10/2019 7:38 AM
ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் ருஷி வாக்கியம் (87) - புலனடக்கம்

ருஷி வாக்கியம் (87) – புலனடக்கம்

-

- Advertisment -
- Advertisement -


மகரிஷிகள் வேதங்களிலும் தர்ம சாஸ்திரங்களிலும் யோக சாஸ்திரங்களிலும் கூறியுள்ள கருத்துக்கள் எல்லா காலத்திற்கும் அனைத்து மானுடர்களுக்கும் நன்மை அளிக்கக் கூடியவை. அதிலும் மனித மனதின் இயல்பை நன்கு ஆராய்ந்து பார்த்து, இயற்கையின் பாதிப்பையும் கவனித்து, அதற்கும் மேல் ப்ரக்ருதியையும் ஜீவர்களையும் நடத்துவிக்கும் இறைவனின் லீலையையும் கருணையையும் அத்யயனம் செய்த பின்னர் ரிஷிகள் தர்மசாஸ்திர வாக்கியங்களை போதித்துள்ளனர். அதனால் அத்தகைய சிறப்பை அவற்றில் காண முடிகிறது.

சில உண்மைகளை ஜீரணித்துக் கொள்வதற்கு நமக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் சத்தியம் சத்தியமே அல்லவா? என்ன செய்வது? அப்படிப்பட்ட சில உண்மைகள் உள்ளன. அவற்றைக் கேட்ட உடனே அவை நமக்கு ருசிக்காமல் போகலாம். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அவை அற்புதமானவையாகத் தோன்றும்!

வைத்தியர் மருந்து கொடுக்கும்போது பத்தியம் இருக்கச் சொல்வார். பத்தியம் எப்போதுமே வெறுப்பை ஏற்படுத்தும். ஆனால் அதனைக் கடைபிடித்தால் கட்டாயம் ஆரோக்கியம் கிடைக்கும்.

அதே போல் தர்மசாஸ்திர வாக்கியங்கள் கேட்பதற்கும் செய்வதற்கும் சிறிது சிரமமாக இருந்தாலும் கடைப்பிடித்து வந்தால் நற்பலனை கட்டாயம் அனுபவிக்கமுடியும். அப்படிப்பட்ட சில வாக்கியங்களை சிரத்தையோடு யோசித்துப் பார்த்தால் அவற்றின் மீது விருப்பம் ஏற்படும். அவற்றுள் இன்றியமையாதது இந்திரிய நிக்ரஹம் எனப்படும் புலனடக்கம்.

இதனைப் பற்றி நம் மூதாதையரான மகரிஷிகள் அதாவது வேதங்களில் கூறப்படும் மகாத்மாக்கள் சில அழகான உயர்ந்த விஷயங்களை அளித்துள்ளார்கள்.

“இந்த்ரியாணாம் பிரசங்கேண தோஷ ம்ருச்யத் ச சம்சய:” – அதாவது புலன்களைப் போகங்களை அனுபவிப்பதற்கு பயன்படுத்திக் கொண்டிருப்பது தவறு. புலன்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிந்தால், “தத சித்திம் ப்ரயச்சதி !” காரிய சித்தி கட்டாயம் கிடைக்கும் என்கிறார்.

எந்தவித காரியசித்தி தேவை என்றாலும் முதலில் புலனடக்கம் இன்றியமையாதது. இந்திரிய நிக்ரஹம் என்ற சொல்லைக் கேட்ட உடனே நாம் என்ன நினைக்கிறோம்? இது ஏதோ ஆன்மீகச் சொல். நமக்குத் தேவையில்லாதது என்று நினைப்போம். ஆனால் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் கூட புலனடக்கம் என்பது பிரதானமான விதி. அது இல்லாதபோது எந்த தர்மத்தையும் காப்பாற்ற இயலாது. அதனால் இந்திரிய நிக்கிரகம் பற்றிய மிக அற்புதமான விஷயங்களை கூறியுள்ளார்கள்.

“இந்திரிய நிக்கிரகம் என்றால் லௌகிகமான போகங்களை அனுபவிக்காமல் புலன்களை கட்டிப்போடுவது அல்ல!” என்கிறார் சுவாயம்புவ மனு. இந்திரியங்களை நிக்ரஹிப்பது என்றால் இந்திரியங்களை கட்டிப்போடுவது அல்ல.

உதாரணத்திற்கு, ‘உணவை கட்டுப்படுத்து!’ என்று சாஸ்திரம் கூறியுள்ளது. அதற்காக வாயை கட்டிக்கொண்டு எதையும் சாப்பிடாமல் இரு என்பதல்ல பொருள். அதேசமயம் கண்ணால் பார்த்ததை எல்லாம் தின்னக் கூடாது என்ற பொருளையும் நாம் அறிய வேண்டும்.

புலன்களை அடக்குவது கூட ஒரு முறையோடு நடக்க வேண்டும் என்று கூறுகிறார். எவ்வாறு என்று கேட்டால் போகங்களை அனுபவிக்காமல் வெறுமையாக உட்காருவது அல்ல புலனடக்கம் என்பது.

எந்த சுகங்களை அனுபவிக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ அந்த சுகங்களின் சாரம் என்ன? அது எது வரையில் நாணயமானது? அதனால் ஏதாவது பலன் உண்டா? என்று யோசித்துப் பார்த்தால் இயல்பாகவே அவற்றின் மீது வைராக்கியம் ஏற்பட்டு அத்தகைய சுகங்களின் வழிக்குப் போகாமல் இருப்போம். அதுவே உண்மையான இந்திரிய நிக்ரஹம் என்று அற்புதமான விளக்கத்தைக் கூறி உள்ளார் மனு.

உதாரணத்திற்கு ஒரு நோயாளியிடம் வைத்தியர் ஒரு குறிப்பிட்ட பதார்த்தத்தை உண்ணக்கூடாது என்று கூறுகிறார். அவனுக்கு அதன் மேல் மிகவும் விருப்பம் உள்ளது. ஆனால் மருத்துவர் அதனை விலக்கச் சொல்கிறார். புலன்களுக்கு இயல்பாக அதன் மேல் விருப்பம் இருப்பதால் அதன் மீது மனம் செல்கிறது. அந்த மாதிரி சமயத்தில் அவன் புலன்களை எவ்வாறு கட்டுப்படுத்திக்கொள்வது? தின்னாமல் உட்காருவது ஒன்று மட்டுமே அல்ல! அந்த பதார்த்தத்தை உண்பதன் மூலம் எப்படிப்பட்ட தீமை ஏற்படும்? எப்படிப்பட்ட ஆபத்து நிகழும்? ஆரோக்கியம் எவ்விதம் கெட்டுப் போகும்? என்பதை அவன் யோசித்துப் பார்க்க முடிந்தால் அவனாகவே அந்த பதார்த்தத்தைத் தொடமாட்டான்.

அவ்வாறே ஒவ்வொன்றும் கூட! காம விஷயத்தில் கூட சிலர் அவசரப்படுவார்கள். பின்னால் வரும் விளைவுகள் எத்தனை ஆபத்தாக இருக்கும் என்பதை யோசிக்க முடியுமானால் கட்டாயம் புலனடக்கம் ஏற்படும்.

எனவே புலன்களை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்றால் போகங்களை அனுபவிக்காமல் இருப்பதன் மூலம் புலனடக்கம் ஏற்படாது. அத்தகைய சுகங்களை அனுபவிப்பதால் ஏற்படும் நஷ்டத்தை புரிந்து கொண்டால் அதனை வெற்றி கொள்ள இயலும் என்கிறார். யார் புலன்களை அடக்கியாள்கிறாரோ அவர் அனைத்து வித பிரயோஜனங்களையும் சாதிக்கக்கூடியவராக இருப்பார்.

“தேனாஸ் ச க்ஷரதி ப்ரக்ஞா த்ருதேப்பாதா திவோதகம் !” – இது மிகச் சிறந்த வார்த்தை. ஒரு பானை நிறைய நீர் ஊற்றினாலும் அதில் ஒரு ஓட்டை இருந்து விட்டால் அந்த நீர் பானையில் நிற்காது. நம் உடலில் இறைவன் கொடுத்துள்ள அற்புதமான ஒரு சக்தி உள்ளது. அதனை ‘ப்ரக்ஞை’ என்பார்கள். ப்ரக்ஞை வடிவில் மகா சைதன்யம் நம் உடலில் உள்ளது. அந்த சைதன்யம் நம் உடலினுள்ளே நிலைபெற்று நிற்க வேண்டுமென்றாலோ சிறப்பாக வேலை செய்ய வேண்டுமென்றாலோ புலனடக்கம் கட்டாயம் இருக்க வேண்டும்.

யோகிகளுக்கு நம்மை விட மிஞ்சிய அதீத சக்திகள் எவ்வாறு வருகின்றன என்றால் புலனடக்கம் மூலமாகவே வருகின்றன! யாருடைய புலன்கள் அடக்கியாளப்படுகின்றனவோ அவருடைய இந்திரியங்களுக்கு ‘அதீந்த்ரிய ப்ரக்ஞை’ கிடைக்கிறது. அதனால் யோகிகள் மகாத்மாக்களாக ஆவதற்குக் காரணம்….. அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்து வருவதற்குக் காரணம்…. தவச் சக்தி பெற்றவர்களாக இருப்பதற்குக் காரணம்…. புலனடக்கம் மட்டுமே! இதனை அறிய வேண்டும். இதனை அறிய முடிந்தால் நாம் ஏற்றம் அடைவோம்.

ஓட்டைப் பானையிலிருந்து நீர் எவ்விதம் வெளியேறிவிடுமோ இந்திரிய நிக்ரஹம் இல்லாதவனிடம் இருந்து அவனுடைய சரீரத்தின் பிரச்ஞை சைதன்யமும் வெளியேறிவிடும். அவன் உய்வடைய இயலாது என்று அழகாகக் கூறி, “யோகம் உத்தமம்” என்கிறார். உத்தமமான யோகம் யாருக்கு கிடைக்கும் என்றால் புலனடக்கம் இருப்பவனுக்கு மட்டுமே என்று கூறுகிறார்!

இதனை உண்மையில் சிறிய வயதிலிருந்தே நம் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்து கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு இன்னும் பலமாக கற்றுத்தர வேண்டும். ஏனென்றால் அப்போது அவர்களுடைய புலன்கள் மலர்ந்து உலகின்மீது ஓடிக்கொண்டிருக்கும் வயதும் அவசரமுமாக இருப்பார்கள்! அதனால் இதனை அழகாக உதாரணங்களோடு அவர்களுக்குக் கூறமுடியுமானால் புலனடக்கம் என்பது மாணவப் பருவத்திலும் அதன் பின் வரும் இளமையின் போதும் மிகவும் தேவை என்பதை புரிந்து கொள்வார்கள்!

இப்படிப்பட்ட சர்வ காலத்திற்கு உபயோகப்படும் ஞானத்தை அருளிய பாரதிய மகரிஷிகளின் பாத பத்மங்களுக்கு வந்தனம்!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

- Advertisement -
- Donate via PayTM -
Tamil Dhinasari News..! We are in the path of protecting our Hindu dharma! Please consider supporting us to run this Tamil web portal continuously.
-Advertisement-

சினிமா:

-Advertisement-
-Advertisement-
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you

%d bloggers like this: