December 8, 2024, 2:40 PM
30.5 C
Chennai

‘சுக்லாம் பரதரம் ஆச்சா?’ என்பதில் ‘காபி குடிச்சாச்சா’ என்பதும் அடங்கியிருக்கிறது!

‘சுக்லாம் பரதரம் ஆச்சா?’ என்பதில் ‘காபி குடிச்சாச்சா’
என்பதும் அடங்கியிருக்கிறது”
 
(மகாபெரியவரின் நகைச்சுவை)
.சொன்னவர்-சந்திரமவுலி ஸ்ரௌதிகள் & சி.வெங்கடேஸ்வரன்
 
டிசம்பர் 30,2016,-தினமலர்
 
காஞ்சிப் பெரியவர் தம் சீடர் ஒருவரைப் பார்த்து, ”சந்தியா வந்தனம் ஆச்சா? சுக்லாம் பரதரம் ஆச்சா?” என்று கேட்டார். சீடரும், ‘ஆச்சு’ என்று தலையசைத்தார்.
 
அதற்கு பெரியவர், ‘சுக்லாம் பரதரம் சொன்னாயான்னு நான் கேட்கலை… ஆச்சான்னு தான் கேட்டேன்” என்றார்.
 
சீடர் ஒன்றும் புரியாமல் குழம்பினார்.
 
பெரியவர் சீடரிடம், “சுக்லாம் பரதரம் சொல்லு பார்ப்போம்” என்றார்.
 
“சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
பிரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே”
 
என்று சீடர் சொன்னார்.
 
பெரியவர், “இதற்கு அர்த்தம் தெரியுமோ?” என்று கேட்டார்.
 
“தெரியும்” என்று பதிலளித்த சீடர், ”வெள்ளை உள்ளம், யானையின் கருப்பு நிறம், நான்கு கரங்கள், பிரகாசமான முகம், எல்லாரையும் நினைக்கச் செய்யும் உருவம் ஆகியவற்றைக் கொண்ட விநாயகரை நினைத்தால் எல்லா தடைகளும் கவலைகளும் நீங்கும்,” என்றார்.
 
“இதற்கு வேறொரு அர்த்தமும் இருக்கு… அது உனக்குத் தெரியுமோ? என்று சொல்லி சிரித்தார்.
 
“சுக்லம்’ என்றால் ‘வெள்ளை’… அதாவது பால்; ‘விஷ்ணும்’ என்றால் ‘கருப்பு’ அதாவது ‘டிக்காஷன்’; ‘சசிவர்ணம்’ என்றால் கருப்பும், வெள்ளையும் கலந்தது…
 
அதாவது காபி; ‘சதுர்புஜம்’ என்றால் நான்கு கை. அதாவது மாமியோட இரு கைகளால் காபியைக் கொடுக்க, மாமாவின் இரு கைகள் அதைப் பெற்றுக் கொள்ளும். ‘த்யாயேத்’ என்றால் ‘நினைத்தல்’. அதாவது இப்படி காபி கொடுப்பதை மனதில் நினைப்பது. ‘பிரசன்ன வதனம்’ என்றால் ‘மலர்ந்த முகம்’ அதாவது காபியை மனதில் நினைத்ததும், மாமாவின் முகம் மலர்ந்து விடும். ‘சர்வ விக்னோப சாந்தயே’ என்றால் ‘எல்லா கவலையும் நீங்குதல்’. அதாவது காபி குடித்தால் கவலை நீங்கி மனம் சாந்தமாகி விடும்.
 
‘சுக்லாம் பரதரம் ஆச்சா?’ என்பதில் ‘காபி குடிச்சாச்சா’ என்பதும் அடங்கியிருக்கிறது என்று தெரிந்து கொண்ட சீடர்கள் தங்களை மறந்து சிரித்தனர்.
 
காஞ்சிபுரத்திலுள்ள காஞ்சிப் பெரியவர் 100 அடி ஸ்தூபி மண்டபத்தில் உள்ள சாமவேத பாடசாலை அத்யாபகராக உள்ள சந்திரமவுலி ஸ்ரௌதிகள், இதை அடிக்கடி சொல்லி கவலை தீரச் சிரிப்பார். இவர் சிறு வயது முதல் பெரியவரிடம் சீடராக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது
ALSO READ:  தீபாவளி பற்றி காஞ்சி மஹா பெரியவர் சொன்னவை!
author avatar
வரகூரான் நாராயணன்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week