ஈரானுடன் வர்த்தகம்: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்காவை சீனா விஞ்சி விடும் என்பது, உலக வங்கி, பன்னாட்டு நிதியம் போன்ற அமைப்புகளின் கணிப்பு.சீனாவுடன் போட்டிப்போட்டுக்கொண்டு, இந்தியாவும் வளர்ச்சி கண்டு, ஆசிய பிராந்தியத்தில் இருபெரும் வல்லரசுகளாக உருவெடுத்து வருகின்றன. இது, தற்போது முதல் இடத்திலுள்ள அமெரிக்காவுக்கு கலக்கத்தை ஏற்படுத்த, அந்நாடு மறைமுக வர்த்தகப்போரை திணிக்கும் நடவடிக்கைளில் இறங்கியுள்ளது என்றே சொல்லலாம்.

1,300 சீனப் பொருட்களுக்கு திடீரென 25 சதவீத அதிக வரி என அறிவித்த அமெரிக்கா அடுத்ததாக, தங்கள் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியப் பொருட்கள் மீதும் அதிரடியாக வரிகளை விதித்தது. இதனால் அதிர்ச்சி போன ஐரோப்பிய நாடுகளும், இந்தியாவும், சீனாவும் தங்கள் பங்கிற்கு அமெரிக்காவின் பொருட்கள் மீது வரிகளை வாரி வீசத் தொடங்கி உள்ளன. எந்நாட்டுடனும் வர்த்தக போரை திணிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வந்தாலும், சர்வதேச வணிகத்தில் பிற நாடுகளின் வர்த்தகங்களை, அமெரிக்கா முடக்கும் செயலாகவே, இது பார்க்கப்படுகிறது.

தற்போது, ஈரானை தனிமைப்படுத்துவதாகக் கூறி, அந்நாட்டிடமிருந்து, எந்த ஒரு நாடும் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யக்கூடாது என புதிதாக ஒரு மிரட்டலை விடுத்திருக்கிறது அமெரிக்கா. நவம்பர் மாதத்திற்குள் ஈரானிடம் இருந்து இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில், அந்நாடுகள் மீது பொருளாதார தடைகள் பாயும் என்றும் எச்சரித்திருக்கிறது.

நம் நாட்டில் கச்சா எண்ணெய்யின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த சூழலில், 125 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா, இதனை எப்படி எதிர்க்கொள்ளப்போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. ஈராக், சவுதி அரேபியாவை தொடர்ந்து, கச்சா எண்ணெய் தேவையில் ஈரானையே இந்தியா பெரிதும் நம்பியிருக்கிறது. ஏற்கனவே பெட்ரோலிய பொருட்களின் விலை இந்தியாவில் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ள வேளையில், ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு டிரம்ப் அரசு முட்டுக்கட்டை போடுவது, புஷ், ஓபாமா போன்ற முன்னாள் அதிபர்கள் வளர்த்தெடுத்த இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்படுத்தும் என்பது வெளியுறவுத்துறை நிபுணர்களின் கருத்தாகவே உள்ளது.