சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் காலமானார்

சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 92. இவருக்கு ஊர்மிளா என்ற மனைவியும் மகன் ஆசித், மகள் ஜோதிகா, 3 பேரக் குழந்தைகளும் உள்ளனர்.

தமிழகத்தில் இருந்து சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்த செல்லப்பன், அபிராமி தம்பதியரின் 3-வது மகனாக 1924 ஜூலை 3-ம் தேதி ராமநாதன் பிறந்தார். வேலை காரணமாக அவரது குடும்பம் மலேசியாவின் ஜொகூர் மாநிலம் மூவார் நகருக்கு குடிபெயர்ந்தது. அங்குள்ள ரப்பர் தோட்டத்தில் நாதனின் தந்தை எழுத்தராகப் பணியாற்றினார். குடும்ப வறுமை காரணமாக பகுதிநேர வேலைகளை செய்து கொண்டே நாதன் படித்தார். இரண்டாம் உலகப்போரின் போது சிங்கப்பூரை ஜப்பானிய ராணுவம் ஆக்கிரமித்தது. அப் போது ஜப்பானிய நிறுவனத்தில் மொழிபெயர்ப்பாளராக பணி யாற்றினார். அந்த போர் அவருக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

1955-ல் சிங்கப்பூர் சுகாதாரத் துறையில் அவர் பணி யில் சேர்ந்தார். அரசுத் துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் அவர் திறம்பட பணியாற்றினார். 1982-ல் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளை வகித்தார். 1999 ஆகஸ்ட் 18-ம் தேதி சிங்கப்பூர் அதிபராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அதிபர் பதவியேற்றபோது உலகம் முழுவதும் பொருளாதார தேக்க நிலை நிலவியது. அதிலிருந்து சிங்கப்பூரை அவர் மீட்டு வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தினார். இதன் காரணமாக 2005-ம் ஆண்டில் அவர் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப் பட்டார். வயது முதுமை காரணமாக 3-வது முறையாக அவர் அதிபர் பதவிக்கு போட்டியிடவில்லை.

கடந்த ஜூலை 31-ம் தேதி அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு அவர் காலமானார்.

எஸ்.ஆர்.நாதன் மறைவுக்கு பிரதமர் லீ சியன் லூங், அதிபர் டோனி டான் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.