30-03-2023 12:43 AM
More
    Homeகல்விகேள்வி பதில் - நீட் தேர்வு குழப்பங்களும் தீர்வும்

    To Read in other Indian Languages…

    கேள்வி பதில் – நீட் தேர்வு குழப்பங்களும் தீர்வும்

    நீட் கேள்வித்தாள் மொழிபெயர்ப்பு விவகாரத்தில் அதைத் தயாரித்த சி.பி.எஸ்.ஸி தானே முழுக் குற்றவாளி?

    இந்தியாவில் இந்த வருடம் சுமார் 10 மொழிகளில் இந்தக் கேள்வித்தாள் தயாரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலக் கேள்வியும் இணைத்தே தரப்பட்டுள்ளது. கலைச்சொல் அல்லது வாக்கிய மொழிபெயர்ப்பில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் ஆங்கில மூலத்தைப் பார்த்துப் புரிந்துகொள்ளும்படிச் சொல்லியிருக்கிறார்கள். பிற மொழிகளில் எழுதியவர்களுக்கு இந்தப் பிரச்னை வரவில்லை. தமிழ் மொழிபெயர்ப்பில் மட்டுமே இந்தக் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

    இதிலிருந்து இரண்டு விஷயங்கள் தெரியவருகின்றன. முதலாவதாக, பிற மொழிகளில் சரியாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். அல்லது குழப்பம் இருந்தபோதிலும் அந்த மொழிகளில் எழுதிய மாணவர்கள் ஆங்கிலத்தைப் பார்த்து கேள்வியைச் சரியாகப் புரிந்துகொண்டு பதில் எழுதியிருக்கிறார்கள்.

    தமிழகத்தில் ஏன் இப்படி நடக்கவில்லை?

    முதலில் தமிழ் வழியில் எழுதிய மாணவர்களில் எத்தனை பேர் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டார்கள் என்று நமக்குத் தெரியாது.

    தமிழக மாணவர்கள் சார்பாகப் பேசுவதாகச் சொல்லும் அரசியல் தலைவர்கள், போராளிகளின் வார்த்தைகளை மட்டுமே நாம் கேட்க முடிந்திருக்கிறது. என் சந்தேகம் என்னவென்றால், தமிழ் வழியில் படித்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் ஆங்கிலக் கேள்வியை ஒப்பிட்டுப் பார்த்து பதில் எழுதும் அளவுக்குத் திறமை பெற்றிருப்பார்கள் என்றே நம்புகிறேன். நாளை நான்கு வருட மருத்துவப் படிப்பை முழுக்க முழுக்க ஆங்கிலத்தில்தானே படிக்கப் போகிறார்கள். எனவே வாக்கியப் புரிதலும் கலைச்சொல் புரிதலும் போதுமான அளவுக்கு இருக்கும் என்றே நம்புகிறேன். அல்லது இருந்தாகவேண்டும் என்றே எதிர்பார்க்கிறேன். எனவே, தமிழ் வழிக் கல்வி மாணவர்களுடைய நலன் என்ற பெயரில் இன்று சொல்லப்படுவதில் அவர்களுடைய நலனைவிட மத்திய அரசுடன் மோதியாகவேண்டும் என்ற தமிழக சமீபத்திய போக்கே மிகுதியாக இருக்கிறது.

    இந்த மொழிபெயர்ப்பைச் செய்தது இந்தப் பிரச்னையை தற்போது எழுப்பியிருப்பவர்களின் தோழர்களே என்பதில் இருந்து இந்த சந்தேகம் பலப்படவே செய்கிறது.

    சி.பி.எஸ்.ஸி. தானாகவே இந்த மொழிபெயர்ப்பைச் செய்திருந்தால் இந்தப் பிரச்னையை இன்னும் தீவிரமாக எழுப்பியிருப்பார்கள். மொழிபெயர்க்கும் பொறுப்பை தமிழக ஆசிரியர்களிடம் சி.பி.எஸ்.ஸி. சாமர்த்தியமாகக் கொடுத்துவிட்டதால் மொழிபெயர்த்தது யார் என்று வெளியே சொல்ல முடியாமல் மறைத்துக் களமாடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் எதிர்த்தே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டுக் களமாடும் தமிழக அடிப்படைவாத குழுக்களே இதற்கு முழுப் பொறுப்பு. அவர்கள்தான் ஊடகங்கள், நீதித்துறை, காவல்துறை, அரசியல்கட்சிகள், கல்வி துறை, பிற அதிகார வர்க்கங்கள் என அனைத்திலும் ஊடுருவி இருக்கிறார்கள். தமிழக மாணவர்கள் மேல் அக்கறை இன்றிச் செயல்பட்டிருப்பது மொழிபெயர்த்த தமிழக கல்வித் துறையினரும் அவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கும்படிச் சொன்ன தமிழக அரசியல்வாதிகளும் தான்.

    நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துக் கல்லூரிகளில் இடம் கொடுத்தாகவேண்டும் என்ற புதிய நடைமுறையால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி, கல்லூரிகள், சிறுபான்மை என்ற போர்வையில் இயங்கும் கல்லூரிகள் (அரசின் சலுகைகளை முழுவதுமாகப் பயன்படுத்தி அவர்கள் கொடுக்கும் கல்வி அவர்களுடைய மதப் பிரசாரத்துக்கும் மதத்தினருக்கும் மட்டுமே பயன்படும்வகையில் இருந்துவந்ததை இந்த புதிய வழிமுறை தடுத்துவிடும் என்பதும் ஒரு காரணம். உதா : வேலூர் கிறிஸ்தவக் கல்லூரி. அங்கு கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தரப்படும்) ஆகியவற்றின் நலனுக்காக முன்னெடுக்கப்படும் இந்த எதிர்ப்பு தமிழக மாணவர்களின் நலன் என்ற போலி முகமூடியை அணிந்துகொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

    இந்த அரசியல் கணக்குகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், தமிழ் வழியில் படித்த மாணவர்கள் உண்மையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்களே… அதற்கு என்ன பதில் என்ற கேள்வி எழும்.

    இந்தக் கேள்விக்குக் கொஞ்சம் கறாரான பதிலையே சொல்ல முடியும்.

    அலோபதி மட்டுமல்ல இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்த மருத்துவம், ஆயுர்வேதம் போன்றவற்றுக்கான கல்லூரிகள்கூட முழுக்கவும் ஆங்கில வழியில் இருக்கின்றன. பள்ளிப் படிப்பு முழுவதும் தாய் மொழியில் படித்த ஒருவர் ஓரிரு மாதங்களில் தொடங்கவிருக்கும் ஆங்கில வழிக் கல்லூரி வகுப்புகளுக்குத் தன்னை எப்படித் தயார்படுத்திக்கொள்வார்? தவழவே தெரியாத குழந்தை உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கெடுக்க விரும்புவதைப் போன்றது அது.

    இந்த அடிப்படையே மிகவும் தவறானது.  உயர் கல்வியானது தாய்மொழிக்கு மாறியாகவேண்டும். அல்லது ஆங்கிலம் ஒரு மொழியாக சிறப்பாகக் கற்றுக்கொடுக்கப்பட்டாகவேண்டும். அப்படியான ஒன்று நடைமுறையில் வரவே போவதில்லை என்பதால், மாணவர்கள் தான் அதற்காகத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ளவேண்டும். ஒலிம்பிக் போட்டியில் வெல்ல வேண்டும் என்ற கனவு இருந்தால் அதற்கான பயிற்சியில் சிறு வயதில் இருந்தே ஈடுபட்டாகவேண்டும். அதுபோல் மருத்துவராக வேண்டுமென்றால் ஆறாம் வகுப்பில் இருந்தே ஆங்கிலத்தில் புலமை பெற தமிழ் வழிக் கல்வி மாணவர்கள் முயன்றாகவேண்டும்.

    இது அவர்கள் இதற்கு முன்பே செய்திருக்கவேண்டிய விஷயம். நீட் தேர்வு என தேசம் முழுமைக்குக் கொண்டுவரப்பட்ட பிறகாவது அதற்கு முயற்சி செய்திருக்கவேண்டும். ஆங்கில வழிக் கல்விக்கு தயார்படுத்திக்கொள்ள ஓரிரு வருட ஆங்கிலப் பயிற்சியே போதுமானது. அதிலும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ள இன்று சிடிக்கள், புத்தகங்கள் என எவ்வளவோ மலிவு விலையில் குவிந்து கிடக்கும் நிலையில் எந்தவொரு குக்கிராம மாணவரும் எந்தவொரு ஏழைப் பெற்றோரும் எந்தவொரு கல்வியியலாளரும் எந்தவொரு சமூகப் போராளியும் செய்ய முடிந்த எளிய விஷயம்தான் இது.

    உண்மையில் அனைத்து மாநிலங்களுக்குமே ஆங்கிலத்தில் மட்டுமே கேள்விகளைக் கேட்பதே சரி. கல்லூரிப் படிப்பை ஆங்கில வழியில் வைத்துக்கொண்டு அதற்கான நுழைவுத் தேர்வை மட்டும் தாய்மொழியிலும் நடத்துவேன் என்றால் அது எப்படி சரியாகும்? ஒன்று மருத்துவப் படிப்பையும் தாய் மொழிக்கு மாற்றியாகவேண்டும் (அதுதான் மிகவும் சரியானது). அப்படி இல்லையென்றால் நுழைவுத் தேர்விலிருந்தே ஆங்கிலத்தை ஆரம்பித்துத்தான் ஆகவேண்டும்.

    அடுத்ததாக, தேசம் முழுமைக்குமான இந்த நீட் பொதுத் தேர்வு அமலாவதற்கு முன்னால் தமிழ் வழியில் 12 வரை படித்து மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றவர்கள் இரண்டு சதவிகிதம் கூட இருக்கமாட்டார்கள். தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் படித்தவர்களும் பணக்காரர்களும் அரசியல் சிபாரிசு பெற்றவர்களும் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் இடம் ’வாங்கியிருப்பார்கள்’.

    இன்று திறமையை மட்டுமே அடிப்படையாக வைக்கும் நீட் தேர்வு ஏழைத் தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கும் நுழைய வழியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அது இந்த வழிமுறையின் மிகப்பெரிய சாதக அம்சம். தேசம் முழுமைக்கும் ஒரே தேர்வு என்பதால் சில நடைமுறைச் சிக்கல்கள் எழுகின்றன. அது சிறிய பாதகமான அம்சம்.

    முதலில் சி.பி.எஸ்.ஸி. கேள்வித்தாளைத் தயாரிக்கும் பொறுப்பை மாநிலங்களிடம் ஒப்படைத்தது. சென்ற ஆண்டு ஆங்கிலத்தைவிடக் கடினமானதாக இருந்ததாகத் தமிழகம் வழக்கு தொடுத்தது. கேள்விகளைத் தயாரித்ததும் தமிழகக் கல்வியாளர்களே… வழக்கு தொடுத்ததும் தமிழகத் தோழர்களே.  எனவே, அதைப் போக்க ஒரே கேள்வித் தாளை சி.பி.எஸ்.ஸி. இந்த ஆண்டு அமல்படுத்தியது.  இப்போது மொழிபெயர்ப்புப் பிரச்னை அதே தமிழகப் போராளிகளால் எழுப்பப்பட்டிருக்கிறது. விஷயங்கள் புரிகின்றனவா..?

    *

    லட்சக்கணக்கான மாணவர்கள் வெறும் ஆயிரக்கணக்கான இடங்களுக்குப் போட்டியிடும்போது பல்வேறு வடிகட்டல் அளவுகோல்களைப் பயன்படுத்தியே தீரவேண்டும். எளிய ஆங்கிலப் பரிச்சயம் என்பது அதில் மிக மிக அடிப்படையான அளவுகோல்தான். இயற்பியல், வேதியல், உயிரியல், கணிதம் ஆகிய நான்கு பாடப் பிரிவுகளில் போதிய அறிவு இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது போலவே ஆங்கில அறிவும் மிகவும் அவசியமே.

    அதோடு, இந்தத் தேர்வுகள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மீண்டும் நடத்தப்படப்போகின்றன. தமிழக மொழிபெயர்ப்பாளர்களை நம்பிக்கொண்டிருக்காமல், தமிழ் வழி மாணவர்கள் நீட் பயிற்சி மையங்களில் சேர்ந்து அல்லது இணைய தளத்தைப் பயன்படுத்தி தங்களை ஆங்கிலத்திலும் மருத்துவ ஆங்கிலக் கலைச் சொற்களிலும் தகுதிப்படுத்துக்கொள்வதே சிறந்த வழி.

    இதில் இன்னொரு பிரச்னையும் சமீபத்தில் எழுப்பப்பட்டிருக்கிறது. இயற்பியல், வேதியல் பாடங்களில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு மருத்துவ சீட் கிடைத்திருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது. மருத்துவப் படிப்புக்கு இயற்பியல், வேதியல் எந்த அளவுக்குத் தேவை என்பது வேறு விஷயம்  (வடிகட்டலுக்கு எல்லாமே தேவைதான்!). ஆனால், இது தேர்வை நடத்திய நிறுவனத்தின் தவறு அல்ல. மதிப்பெண்களை மட்டுமே கல்லூரியில் சேர்வதற்கான அடிப்படையாக வைத்திருப்பதால் இது நடந்திருக்கிறது. கட் ஆஃப் மதிப்பெண் என்ற ஒன்றை இந்தத் தேர்வு முறையில் வரையறுத்தாகவேண்டியிருக்கும். உயிரியல் பாடப்பிரிவில் 300 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் வரும். கட் ஆஃப் மார்க் 200 போதும் என்ற நடைமுறை ஞானம் பெறுபவர்கள் இயற்பியல் வேதியலைப் படிக்கும் நேரத்தில் உயிரியலையே அதிகம் படித்து அதில் 200க்கு மேல் மதிப்பெண் பெற்றுத் தேறிவிடுவார்கள்.

    இப்படி வழிகாட்டத் தெரிந்த கோச்சிங் நிபுணர்கள்தான் இன்று பள்ளிகளில் ஆசிரியர் திலகங்களாக இருக்கிறார்கள். பனிரெண்டாம் வகுப்புவரை மொழிப்பாடத்துக்கு கவனம் கொடுக்கவேண்டாம் என்ற அருமையான வழியையும் அவர்களே கண்டு சொல்லியிருக்கிறார்கள். எனவே, இதை முறியடிக்கவேண்டுமென்றால்  அடுத்த ஆண்டு முதல், கட் ஆஃப் மதிப்பெண் நீங்கலாக இயற்பியல், வேதியல், கணிதம், உயிரியல் என அனைத்து பாடப் பிரிவுகளிலும் தனித்தனியாக 35 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றிருக்கவேண்டும் என்ற ஒரு விதியையும் சேர்த்தாக வேண்டியிருக்கும். நம் கோச்சிங் திலகங்கள் அதன் பிறகும் வேறொரு வழியைக் கண்டுபிடிப்பார்கள்.

    இதில் இருக்கும் இன்னொரு பிரச்னை இந்தப் பொதுத் தேர்வு மருத்துவத்துறை சார்ந்த நிபுணர்களை உருவாக்கும் இலக்குடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது சர்வ தேசத் தரத்தில் மருத்துவர்கள் உருவாகியாகவேண்டிய உலகச் சூழலைக் கருத்தில் கொண்டு கடினமான சிலபஸை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் அப்படியான சிலபஸ் அறிமுகமாகவில்லையென்பதால் கட் ஆஃப் மதிப்பெண்ணை மிகவும் குறைவாக வைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

    இதனால் என்ன ஆகிறதென்றால் அப்போது இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகமாகிவிடுகிறது. அதாவது, 12 லட்சம் பேர் தேர்வு எழுதினால் ஆறு லட்சம் பேர் தேர்ச்சிபெற்றுவிடுகிறார்கள். உயர் கல்விக்கு இது மிக அதிக தாராளமான, இக்கட்டான நிலை. உயர் கல்வி மையங்களிலோ 70 ஆயிரம் மாணவர்களுக்கான இடம் கூட இல்லை. இப்படி சுமார் ஒரு லட்சம் இடம் மட்டுமே கல்லூரிகளில் இருந்தால் 12 லட்சம் பேரில் முதல் ஒரு லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும்படியாக கட் ஆஃப் மதிப்பெண் வைக்கப்படவேண்டும்.

    அப்படியானால் மொத்த மதிப்பெண் 700 என்றால் அதில் 500க்கு மேல் எடுத்தால்தான் கல்லூரியில் இடம் என்று வைக்கவேண்டும். இப்போது அது முடியாத நிலை. 200 மதிப்பெண் என்பது காசும் அரசியல் சிபாரிசும் உள்ள ஒருவரால் எளிதில் எடுக்க முடிந்த மதிப்பெண்ணே. தனியார் கல்லூரிகளில் அவர்கள் கேட்கும் லட்சங்களைக் (கோடிகளைக்?) கொட்டிக் கொடுத்து எளிதில் நுழைந்துவிடவும் முடியும். ஆக, கடினமான சிலபஸ் என்பதால் குறைவான கட் ஆஃப் மதிப்பெண் என்பது மீண்டும் கோடிகளைக் கொடுக்க முடிந்தவர்களை நுழைய வழிவகுப்பதாக ஆகிவிடுகிறது. இங்கும் ஏழை தாய் மொழிக் கல்வி மாணவர் ஓரங்கட்டப்படும் நிலை ஏற்படுகிறது. இதுதான் இந்த பொதுத் தேர்வின் மிகவும் சிக்கலான அம்சம்.  தனியார் கல்விக் கொள்ளையர்கள் இதைப் பயன்படுத்தியே இந்த நல்ல திட்டத்தையும் காலி செய்ய முயற்சி செய்கிறார்கள்.

    *

    மருத்துவராக வேண்டுமென்றால், நோயாளிகளைக் குடும்ப உறுப்பினர் போல் பார்க்கவேண்டும்; நோயைக் குணப்படுத்தும் மாபெரும் உதவியைச் செய்கிறோம் என்ற மன நிறைவு பெறுபவராக இருக்கவேண்டும்; குறைந்த விலையில் கிடைக்கும் மருந்துகளைப் பரிந்துரைக்க செய்ய வேண்டும். நம் தேசத்தின் நலிவடைந்த பிரிவினருக்கு மருத்துவ சேவையில் முன்னுரிமை கொடுக்கும் கருணை இருக்கவேண்டும். ஐந்தாறு வருடங்கள் கிராமங்களில் பணிபுரிதல், நகரங்களில் மருத்துவம் செய்யும்போதும் ஓரிரு நாட்கள், அல்லது ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் எளியவர்களுக்கு மருத்துவம் பார்த்தல் என எந்தவித உயரிய மதிப்பீடும் எந்தத் துறையிலும் எதிர்பார்க்கப்படுவதில்லை. பாடம் புரிகிறதா என்பதுகூடப் பார்க்கப்படுவதில்லை. மதிப்பெண் மட்டுமே ஒற்றை இலக்காக வைக்கப்பட்டிருக்கிறது. அது மாறாமல் எதுவும் மாறாது.

    *

    இதன் மறுபக்கமாக, இன்று இணையமும் தொலை தொடர்பும் செயற்கைக்கோள் ஒளிபரப்பும் பெருகிவிட்டிருக்கின்றன. நான்கு சுவர்களுக்குள்ளான வகுப்புகள், பத்து மணியில் இருந்து நான்கு மணி வரையிலான கல்லூரி, ஆசிரியர் மேடை மேல் ஏறி நின்று பாடம் எடுப்பது என்பது போன்ற நவீன கால படிப்புமுறையை மாற்றிக்கொள்ள வேண்டிய தேவையும் வசதிகளும் வந்துவிட்டன. இன்றைய பின் நவீன காலகட்டத்தில் எய்ம்ஸ், ஜிப்மர், ஸ்டான்லி போன்ற மருத்துவக் கல்லூரிகளில் ஆசிரியர்கள் வகுப்பெடுப்பதை அப்படியே நேரடி ஒலிபரப்பாக குக்கிராமத்தில் கூட ஒளிபரப்ப முடியும். அவற்றுக்கான தாய்மொழி மொழிபெயர்ப்புகளோடு ஒளிபரப்பமுடியும். ஹாலிவுட் படங்கள் தொடங்கி உலகப்படங்கள் அனைத்தும் டப்பிங்கில் வெளியிடப்படும்போது கல்விக்கான அதைச் செய்து தர முடியாதா என்ன..? தூர்தர்ஷன் தொலைக்காட்சியால் இதை கட்டாயம் செய்து தரமுடியும்.

    பத்து லட்சம் மாணவர்கள் பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தால் அவர்கள் அனைவருமே மருத்துவப் படிப்பைப் பெற முடியும். செய்முறை வகுப்பு போன்றவற்றுக்கு ஒவ்வொரு அருகமை மருத்துவக் கல்லூரியிலும் ஷிஃப்ட் முறை அமலானால் இன்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைபோல் பல மடங்கு பேர் எளிதில் படிக்க முடியும். பல இளைஞர்களுக்கு மருத்துவ ஆசிரியர் பணி கிடைக்கவும் வழி பிறக்கும்.

    காலை ஆறு மணியில் இருந்து பத்து மணி வரை ஒரு பிரிவு. 10.30லிருந்து 2.30 வரை இன்னொரு பிரிவு. மதியம் 3.00 மணியில் இருந்து ஏழு மணி வரை இன்னொரு பிரிவு என்று படிக்க முடியும். அதுமட்டுமா அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களுக்காக இரவிலும் கண்முழித்து சேவகம் செய்யத் தயாராக இருக்கும் தலைமுறைக்கு இரவில் கூட வகுப்புகள் எடுக்கலாம். அல்லது சனி, ஞாயிறுகளில் தனியார், அரசுக் கல்லூரிகள் தனது கல்லூரி சாராத மாணவர்களுக்கு செய்முறை வகுப்புகள் மட்டும் எடுக்கலாம்.

    ஒருவர் ஒரு துறையில் படிக்க விரும்பினால் கற்றுக் கொடுக்க நாம் கஞ்சத்தனம் படவேண்டியதில்லை. இறுதித் தேர்வுகளில் யார் தேர்ச்சிபெறுகிறாரோ அவர் வேலை பெறப்போகிறார்.  சொந்த ஊரில் இல்லையென்றால் வேறு ஊரில், அங்கும் இல்லையென்றால் வேறு மாநிலத்தில்; அங்கும் இல்லையென்றால் வேறு நாட்டில் என அவரவர் திறமைக்கும் வசதிக்கும் ஏற்ப வேலை தேடிக் கொள்ளப்போகிறார்கள். நம் நாடும் உலகின் பிற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு  நம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்து தரலாம்.

    சித்த மருத்துவம், ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு நீட் தேர்வு இல்லை என்று அரசு அறிவித்துள்ளது. தமிழ் வழியில் கல்வி பெற்றவர்கள் தேச பாரம்பரிய மருத்துவத்தில் ஆர்வம் காட்ட கிடைத்த வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தனியார் பள்ளி மாஃபியா, அரசியல் பிரிவினைவாதி இவர்களின் கைப்பாவையாக ஆகாமல் இருக்கலாம்.

    29 ஆயுஷ் கல்லூரிகளில் சுமார் 1800 இடங்கள் தற்போது இருக்கின்றன. இணைய வழிக் கல்வி மூலம் இந்த இடங்களை வெகுவாக அதிகரிக்க முடியும். சித்த மருத்துவத்துக்கு தமிழ் பற்றாளர்களும் ஆயுர்வேதத்துக்கு இந்துப் பற்றாளர்களும் முன்னுரிமை கொடுக்கவேண்டும்.

    தீர்வுகள் இல்லாமல் இல்லை. அமல்படுத்தத்தான் ஆட்கள் இல்லை.

    *

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    5 × two =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,033FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,634FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...