Homeஉரத்த சிந்தனைஆக... ஆக... தமிழரான வள்ளுவர் ஓர் இந்து; இந்துவான வள்ளுவர் ஒரு தமிழரே!

ஆக… ஆக… தமிழரான வள்ளுவர் ஓர் இந்து; இந்துவான வள்ளுவர் ஒரு தமிழரே!

thiruvalluvar statue hind - Dhinasari Tamil

திருவள்ளுவர் ஒரு இந்து மத துறவி:
திருவள்ளுவர் இந்துவா?
அர்த்தமுள்ள இந்து மதத்தில் கவியரசு கண்ணதாசன் கூறியது…

ஒரு மனிதன் எந்த மதத்தைச் சேர்ந்தவன் என்று எப்படிக் கண்டுபிடிப்பது?
இந்துக்களின் நெற்றி மதச் சின்னத்தைக் காட்டுகிறது.
கிறிஸ்தவர்களின் கழுத்தில் தொங்கும் சிலுவை அவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதைக் குறிக்கிறது.
முஸ்லீம்களின் ஆடையும், தொப்பியும், கோஷாவும் அவர்கள் முஸ்லீம்கள் என்பதைத் தெளிவாக்குகின்றன.

ஆனால், இந்தச் சின்னங்கள் ஏதுமில்லாத நவநாகரிக இளைஞன் ஒருவனை, அவன் எந்த மதத்தைச் சேர்ந்தவன் என்று எப்படிக் கண்டுபிடிப்பது?

ஒரு கதை உண்டு.
ஒரு மனிதன் பன்னிரண்டு மொழிகள் பேசுவானாம்.

ஒவ்வொரு மொழியையும், அந்தந்த மொழிக்காரர்கள் எப்படிப் பேசுவார்களோ அப்படியே, அதே தொனியோடும் உச்சரிப்போடும் பேசுவானாம்.

அவனுடைய தாய் மொழி எது என்று யாருக்கும் தெரியவில்லையாம்.
அவனைக் கேட்டால் அவனும் சொல்ல மறுத்து விட்டானாம்.
அவனது தாய் மொழியைக் கண்டுபிடிக்க அவனது நண்பர்கள் ஒரு வேலை செய்தார்களாம்.

ஒருநாள், அவன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது `பளார்’ என்று அவன் முதுகிலே ஓங்கி அடித்தார்களாம்.

அவன், ஆத்திரத்தோடு, “எந்தடா நாயாடி மோனே” என்று சொல்லிக் கொண்டே எழுந்து உட்கார்ந்தானாம்.
அவனது தாய் மொழி மலையாளம் என்பது தெரிந்து விட்டதாம்.

Kannadasan - Dhinasari Tamil

தன்வயமற்ற நிலையில் ஒருவன் பேசுகிற பேச்சுத்தான் உண்மையான பேச்சு. அது போதையாயினும் சரி, உற்சாகமாயினும் சரியே. நடக்கும் வழியில் ஒரு கல் தடுக்கிவிட்டதென்றால் ஒருவன் `கடவுளே’ என்கிறான்; அவன் இந்து.

`அல்லா’ என்றால், அவன் முஸ்லீம்.
`கார்த்தரே’ என்றால், அவன் கிறிஸ்தவன்.

ஒவ்வொரு மதத்துக்காரருக்கும் முக்கியமான கட்டங்களில் எல்லாம், தனது மத தத்துவம், தனது கடவுள் நினைவுக்கு வருவதுபோல், ஒவ்வொரு மதக் கவிஞனுக்கும், தனது எழுத்துகளில் தனது கடவுள் பற்றிய சிந்தனையே வரும்.

வள்ளுவனும் அப்படியே!

இறைவனைப் பற்றி, அவன் குறிப்பிடுகிற சில வார்த்தைகள் வேறு சில மதக்கடவுளுக்கும் பொருந்தும் என்றாலும், பெரும்பாலானவை நேரடியாக இந்து மதக் கடவுள்களையே குறிக்கின்றன. அனைத்திலும் இந்த எண்ணம் பிரதிபலிக்கிறது.

`கடவுள்’ என்ற வார்த்தையை வள்ளுவன் பயன்படுத்த வில்லை என்றாலும், `கடந்து உள்ளிருப்பவன்’ என்ற பொருளில் இந்துக்கள் மட்டுமே அதனைப் பயன்படுத்துகிறார்கள்.

`இறைவன்’ என்ற சொல் `கடவுள்’ என்ற பொருளில் வள்ளுவனால் இரண்டு இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.

ஐந்தாவது குறளில், `இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்’ என்றும்,

பத்தாவது குறளில், `பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார்’ என்றும், அது ஆளப்படுகிறது.

கடவுளை `இறைவன்’ என்று பௌத்தர்களோ, முஸ்லீம்களோ, கிறிஸ்தவர்களோ கூறத் தொடங்குவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் வள்ளுவன் கூறியிருக்கிறான். (மற்றவர்கள் பின்னால் எடுத்துக் கொண்டார்கள்.) வள்ளுவன் காலத்தில் பௌத்த மதமும், இந்தியாவிலேயே பிறந்த வேறு சில மதங்களும் மட்டுமே இருந்தன.

அந்நாளில் அவை, கடவுளை `இறைவன்’ என்று அழைத்ததில்லை. ஆனால், இந்துக்களின் கடவுள் பாடல்கள், பிரபந்தங்கள் அனைத்திலும் அந்த வார்த்தை வருகிறது.

valluvarpoonal e1572962129888 - Dhinasari Tamil

அதிலும் வினைகள் இருவகை; அவை நல்வினை, தீவினை எனச் சொல்வோர் இந்துக்கள்.

அஃதன்றியும், இறைவன் என்ற சொல்லை அரசன் என்ற பொருளில் 690, 733, 778 ஆவது குறள்களில் வள்ளுவன் கையாள்கிறான். இறைவனையும், அரசனையும் வேறு எந்த மதத்தவரும் ஒன்றாகக் கருதுவதில்லை. ஒரே சொல்லால் அழைப்பதில்லை. பிற்காலத்தில் தமிழ் இந்துக்கள் இன்னும் ஒரு படி மேலே போய், `கோ’ என்ற வார்த்தைக்கு `இறைவன், அரசன், பசு’ என்ற மூன்று அர்த்தத்தையும் கொடுத்திருக்கிறார்கள்.

`இறைவனடி சேர்வது’ என்ற மரபு இந்துக்களுக்கு மட்டுமே உண்டு.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்
– என்ற குறளில் வரும், `வானுறையும் தெய்வம்’ இந்துக்களுக்கு மட்டுமே உண்டு.

தெய்வம் வானத்தில் இருக்கிறது என்பதை மற்ற மதத்தவர் ஒத்துக் கொள்வதில்லை.

`பெயக் கண்டும் நஞ்சுண்டமைவர்’ என்ற குறள், “திருப்பாற்கடல் கடையப்பட்டபோது ஆலகால விஷத்தை அள்ளியுண்ட பரமசிவனையே குறிக்கிறது” என்கிறார் பேராசிரியர் திரு. ஜி. சுப்பிரமணிய பிள்ளை. `அடியாருக்கு, நஞ்சமுதம் …ஆவதுதான் அற்புதமோ?’ என்கிறார் சேக்கிழார் பெருமான்.

நற்றிணையில் வரும், `நஞ்சுண்பர் நனிநாகரிகர்’ என்ற தொடரும் சிவனாரைக் குறிப்பதாக நான் சொன்னால் யார் மறுக்க முடியும்?

அஃதன்றியும், ஒரு குறளில் இந்துக்களுக்கு மட்டுமே உரிய இந்திரனைச் சாட்சிக்கழைக்கிறார் வள்ளுவர். வேறு எந்த மதத்தவருக்கும் `இந்திரன்’ என்று ஒருவன் இல்லை. அதிலும் இந்திரன் சம்பந்தப்பட்ட இந்து மதம் ஒன்றையே வள்ளுவர் உவமிக்கிறார்.

ஐந்தவித்தான் ஆற்றல்அகல் விசும்புளார் கோமான்
இந்திரனே சாலுங் கரி.

ஐந்து பொறிகளையும் அடக்காது சாபம் எய்திய இந்திரன், அடக்குவோனுடைய ஆற்றலுக்குச் சான்றாகிறான் என்கிறார்.

கெட்டுப் போனவனைக் காட்டி நல்லவனைப் புகழ்வது போல், பொறி அடக்காத இந்திரனைக் காட்டி அடக்குவோரின் ஆற்றலை வியக்கிறார் வள்ளுவர்.

இந்துக்களின் புராணப்படி, `அகல் விசும்புளார் கோமான்’ என்றே இந்திரனை அழைக்கிறார்.
அவர் கூறும் உவமான கதை அகலிகையின் கதையாகும்.

இன்னுமோர் இடத்தில்,
கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை -என்கிறார்

இந்துக்களின் இறைவனுக்கு மட்டுமே எட்டு குணங்கள் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. (அதாவது, பரமசிவனுக்கு.)
பரிமேலழகர் சொற்படி அந்த எட்டு குணங்கள் கீழ்க்கண்டவை.
தன் வயத்தனாதல்
தூயவுடம்பினனாதல்
இயற்கையுணர்வினனாதல்
முற்றுமுணர்தல்
இயல்பாகவே பாசங்களின் நீங்குதல்
பேரருளுடைமை
முடிவிலாற்றலுடைமை
வரம்பில் இன்பமுடைமை
– சைவ ஆகமத்திலும் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.

அப்பர் சுவாமிகளும், `எட்டு வான் குணத்து ஈசன்’ எனப் பாடினார்.

கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
– என்றொரு குறள்.

இதில் `வாலறிவன்’ என்பது, மற்ற மதக் கடவுள்களையும் குறிக்கக் கூடிய மயக்கத்தைத் தரும். ஆயினும், எங்கும், எப்பொழுதும், தானாகவே அனைத்தையும் அறியும் ஞானத்தைக் குறிப்பதால், `அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்தமூர்த்தியாகி’ நிற்கும் ஈசனைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

அதுபோலவே, `தனக்குவமை இல்லாதான்’ என்ற சொல்லும் …மயக்கத்தைத் தரும். ஆயினும், அதுவும் ஈசனைக் குறிப்பதாக எடுத்து அப்பர் சுவாமிகள் பாடல் ஒன்றை மேற்கோள் காட்டிப் பேராசிரியர் ஜி. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் இதனை விளக்கியிருக்கிறார்கள்.

ஒரு குறளில் வரும் `மலர்மிசை ஏகினான்’ என்ற வார்த்தை பல பொருள் தருமாயினும், பரிமேலழகர் உரைப்படியும், பிற்கால நாயன்மார்கள் பாடல்களின் படியும், அதுவும் சிவபெருமானையே குறிக்கின்றது.

பிறவியைப் `பெருங்கடல்’ என்று இந்துக்கள் மட்டுமே குறிப்பதால், நான் முன்பு சொன்ன அந்தக் குறளும் வள்ளுவன் ஓர் இந்துவே எனக் காட்டுகிறது. மற்றும்,

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
– என்றும்,

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு
– என்றும்,

இந்துக்களின் துறவுத் தத்துவத்தையும், தலைவன் பெயரையும் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

வள்ளுவர் கூறும், `தானமும் தவமும்’ இந்துக்களின் மரபுகளே.

துறவறத்தின் பெருமையைப் புத்த மதமும் கூறுமாயினும், இந்திரனைப் பற்றிய குறிப்பு வள்ளுவரின் `நீத்தார் பெருமை’ என்ற அதிகாரத்திலேயே வருவது குறிப்பிடத் தக்கது.

இவ்வாறு வள்ளுவப் பெருந்தகை, தொட்ட இடமெல்லாம், இந்துக் கடவுள்களையும், இந்துக்களின் மரபையுமே கூறுவதால், அவரும் ஓர் இந்துவே என்பது சந்தேகத்திற்கு இடமில்லாத உண்மை.

அவரைத் தூக்கத்தில் தட்டி எழுப்பியிருந்தாலும், `இறைவா’ என்றுதான் சொல்லி இருப்பார்.

அறத்துப்பாலில் காணும் அறமும், பொருட்பாலில் காணும் பொருள்களும், தமிழர்களுக்கு மட்டுமே உரியவையாக அன்று இருந்தன.

ஆகவே, தமிழரான வள்ளுவர் ஓர் இந்து; இந்துவான வள்ளுவர் ஒரு தமிழரே ஒரு தமிழனே என்பது எனது துணிபு.

  • தொகுப்பு :

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,139FansLike
376FollowersFollow
67FollowersFollow
74FollowersFollow
2,860FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

ஆஸ்கர் விருது கலை அறிவியல் குழுவில் உறுப்பினராக நடிகர் சூர்யா..

ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைப்புவிடுவிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர்...

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவுக்கு பலி..

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .நுரையீரல்...

அஞ்சலி-பூ படத்தில் அறிமுகமான குணச்சித்திர நடிகர் ராமு காலமானார்..

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணச்சித்திர நடிகர்...

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

Latest News : Read Now...