இந்த முறை ஜின்னாவின் ‘ நேரடி நடவடிக்கை ‘ மிகப் பெரிய தவறாக அமைந்தது. பாகிஸ்தான் வழியாக காஷ்மீருக்குச் செல்லும் இரு பாதைகளையும் அடைத்து விட்டு, ‘ பழங்குடியினர் தாக்குதல் ‘ என்ற பெயரிலே காஷ்மீர் மக்கள் மீது ராணுவத்தை ஏவி விட்டு தாக்குதல் நடத்தினார்.
இந்த வெளிப்படையான தாக்குதலை எதிர்பார்க்காத மஹாராஜா ஹரிசிங், காஷ்மீரை காப்பாற்ற உதவும்படியாக பாரத அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தார். இரண்டு நாட்களுக்கு நேருவும் அவரின் தோழர்களும் எதுவும் செய்யாது, மவுண்ட்பேட்டனின் காலின் கீழ் உட்கார்ந்து கொண்டு அவர் கூறுவதை கேட்டுக் கொண்டிருந்தனர்.
காஷ்மீருக்கு ராணுவ உதவியை அனுப்புவது எப்படியெல்லாம் தவறு என்று அவர் நேருவிற்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். பாரத ராணுவத்தின் தளபதியாக அன்று இருந்த சர் ராப் லாக்ஹர்ட்டும் மவுண்ட்பேட்டனின் வாதத்திற்கு வலுச் சேர்த்து ராணுவத்தை அனுப்புவது அபாயகரமானது என நேருவிடம் வலியுறுத்தினார்.
ஆனால் அப்போது துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்த வல்லபாய் பட்டேல் இதை ஏற்க மறுத்தார். காஷ்மீரை பாரதத்துடன் இணைக்க வேண்டும், இதை மஹாராஜா ஹரிசிங்கை ஏற்க செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார்.
ஹரிசிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு கட்டத்தில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் அப்போதைய தலைவர் குருஜி கோல்வல்கரும் முயன்று 1947 அக்டோபர் 17 ல் ஸ்ரீநகர் சென்று ஹரிசிங்கை சந்தித்து பேசினார். அதில் வெற்றியும் கண்டார்.
கடைசியில் வேண்டா வெறுப்பாக மவுண்ட்பேட்டனும்,நேருவும் ராணுவத்தை அனுப்ப ஓப்புக் கொண்டனர். பாரத ராணுவம் காஷ்மீரை அடையும் வரை, காஷ்மீர் மக்களில் மக்களாக இணந்து ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவகர்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலை எதிர்கொண்டு ஸ்ரீநகரையும்,சுற்றியிருந்த பகுதிகளையும் பாதுகாத்து நின்றனர்.
( தொடரும்)
எழுத்து: யா.சு.கண்ணன்