அக்.31ம் தேதி சர்தார் வல்லப பாய் படேலின் 143வது பிறந்த தினம் கொண்டாடப் பட்டது. அதில், குஜராத் முதல்வராக இருந்த போது அடிக்கல் நாட்டி, நாட்டின் பிரதமராக இருக்கும் போது படேலின் பிரமாண்ட சிலையை திறந்து வைத்திருக்கிறார் நரேந்திர மோடி!
இந்நிலையில், இது குறித்து அரசியல் மட்டத்தில் பல்வேறு மோசமான பிரசாரங்கள் மேற்கொள்ளப் படும் நிலையில், தாம் அறிந்த உண்மையை புட்டுப் புட்டு வைக்கிறார் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான மாலன். அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் அளித்த விளக்கத்தில் இருந்து…
“133அடி திருவள்ளுவர் சிலையை கணபதி ஸ்தபதி எனும் இந்தியர் செய்தார். 182 அடி வல்லபாய் பட்டேல் சிலையை எல் அண்ட் ட்டிக்கு டெண்டர் கொடுத்து அவர்கள் ஜியாங்கி டொகைன் எனும் சீனக் கம்பெனிக்கு வார்ப்படம் செய்வதற்காக ஆர்டர் ( out sourcing)கொடுத்து செய்து இருக்கிறார்கள்” என்று கலை விமர்சகர் இந்திரன் Indran Rajendran தனது முகநூல் பதிவில் எழுதியிருந்தார். அதன் நீட்சியாகவும், எழுப்பப்படும் வேறு கேள்விகளுக்காகவும் இந்தக் கேள்வி பதில்
1. படேல் சிலையை வடிவமைத்தது யார்?
வடிவமைத்த்து ஓர் இந்தியர். ராம்.வி. சுதர் (Ram.V.Sutar) என்ற இந்தியச் சிற்பி. மராட்டியர்
2.யார் இந்த சிற்பி?
பத்ம பூஷன் விருதளிக்கப்பட்ட புகழ் பெற்ற சிற்பி..50க்கும் மேற்பட்ட நினைவகங்களில் அவர் வடித்த சிலைகள் உள்ளன. நதிகள், நதிக்கரைச் சிற்பங்கள் வடிப்பதில் சிறப்பு கவனம் செலுத்துபவர். சம்பல் நதியைப் போற்றும் வகையில் மத்திய பிரதேசத்தில் 50அடி உயரத்தில் ஒரே கல்லில் சிலை அமைத்தவர். பாரளுமன்ற வளாகத்தில் தியானத்தில் அமர்ந்திருக்கும் காந்தி சிலையும் இவர் வடித்ததே. இவரது படைப்புகளைப் பார்த்த நேரு பக்ரா அணை கட்டப்பட்ட போது உயிரிழந்த தொழிலாளர்களின் நினைவாக ஒரு சிலை வடித்துத் தரச் சொன்னார். அது அந்த அணையின் அருகே நிறுவப்பட்டுள்ளது
3. சீனக் கம்பெனிக்கு வார்ப்படம் செய்ய ஆர்டர் கொடுத்தது பற்றி?
சிலை மூன்று அடுக்குகளால் (layer) ஆனது. 127 மீட்டர் உயரமுள்ள கோபுரம்தான் உள்ளே உள்ள முதல் அடுக்கு (inner most layer) அதன் மேலே இரும்பு உருக்கால் செய்யப்பட்ட வலை போர்த்தப்பட்ட்டுள்ளது. அதன் மேலே 7000 ஆயிரம் வெண்கலாத் தகடுகளால் மூடப்பட்டுள்ளது (bronze cladding) இந்த வெண்கலத் தகடுகள் மட்டும்தான் சீனத்தில் செய்யப்பட்டவை. அதற்கான செலவு மொத்தச் செலவில் 9% மட்டுமே.
இந்தச் சிலையை அமைக்கும் பணியை மேற்கொண்ட எல்&டி நிறுவனம் இந்த வெண்கலத் தகடுகளை உருவாக்க இந்திய நிறுவனங்களைத்தான் முதலில் பரிசீலித்தது. ஆனால் பிரம்மாண்டமான வெண்கலத் தகடுகளை, இத்தனை பெரிய எண்ணிக்கையில் செய்துதர நம்மிடம் நிறுவனங்கள் இல்லை. அதனால் குளோபல் டெண்டர் விட்டு இந்தச் சீன நிறுவனத்தைத் தேர்வு செய்தது
4. நம்மால் ஏன் செய்ய முடியவில்லை?
நம் நாட்டில் பெரிய சிலைகள் அதிகம் அமைக்கப்படவில்லை. அதனால் அதனைத் தொழிலாகச் செய்பவர்கள் இல்லை. கம்யூனிச நாடுகளிலும் சில கிழக்காசிய நாடுகளிலும் பிரம்மாண்டமான சிலைகள் நிறைய அமைக்கப்படுவதுண்டு. வடகொரியாவின் முக்கிய ஏற்றுமதியே பிரம்மாண்டமான சிலைகள்தான்
5. வள்ளுவர் சிலையுடனான ஒப்பீடு பற்றி?
அந்த ஒப்பீடு பொருத்தமானது அல்ல. வள்ளுவர் சிலை பாறாங்கற்களால் செய்யப்பட்டது. இது கான்கிரீட்டால் செய்யப்பட்டது இரண்டும் வேறு வேறு தொழில் நுட்பம்
6. இந்தச் சிலைக்காக உழவர்களிடமிருந்து இரும்பு பெறப்பட்டதா?
படேல் நாட்டின் ஒற்றுமைக்காக மட்டுமல்ல, வேளாண்மைக்காகவும் பாடுபட்டவர். அதானால் இதற்கான இரும்பை உழவர்களிடம் பெறலாம் என்று எண்ணி அவர்களது வேளாண் கருவிகளிலிருந்து ஒரு சிறு துண்டை கொடையாக அளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அந்த வேண்டுகோளை ஏற்று நாடெங்கிலும் இருந்து விவசாயிகள் இரும்பை அனுப்பிவைத்தார்கள். 5000 டன் இரும்பு சேர்ந்தது. ஆனால் அது சிலையை உருவாக்க்கப் பயன்படாது என்பதால் வேறு சில பணிகளில் பயன்படுத்தப்பட உள்ளது
7. வேறு சில பணிகள் என்றால்?
இந்தத் திட்டம் வெறும் சிலை அமைப்பது மட்டுமல்ல. சிலை சாது பெட் என்ற சிறு தீவில் அமைந்துள்ளது. அந்தத் தீவிற்கு ஒரு பாலம் அமைப்பது, பின் அங்கு நினைவகம், பார்வையாளர்கள் மையம், ஒரு கூட்ட அரங்கு (Convention center), ஒரு தங்கும் விடுதி, ஆய்வு நிறுவனங்கள், ஒரு பெருந்தோட்டம், ஒரு கேளிக்கை மையம் (amusement park.) இவையும் சிலையைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கிறது
8. இவை எல்லாவற்றிற்கும் சேர்த்துதானா ரூ3000 கோடி?
ஆம் அது மட்டுமல்ல. அது 15 ஆண்டுகளுக்குச் சிலையைப் பராமரிப்பதற்கான செலவையும் உள்ளடக்கியது
9. இந்தச் சிலை அரசியல் நோக்கம் கொண்டது. மோதி குஜராத் முதல்வராக இருந்த போது ஏன் இந்தச் சிலை அமைக்கப்படவில்லை என்று மாயாவதி கேட்டிருக்கிறாரே?
மோதி குஜராத் முதல்வராக இருந்த போதுதான் (அக்டோபர் 31 2013) இந்தச் சிலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. படேல் இறந்து 41 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவருக்கு பாரத ரத்னா பட்டம் அளிக்கப்பட்டது. அத்தனை ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு ஏன் அவரை கெளரவிக்கவில்லை என்று மாயாவதி கேட்டதாக எனக்கு ஞாபகம் இல்லை. படேலுக்கு மட்ட்டுமல்ல, சுபாஷ் போஸ், அம்பேட்கர், முன்னாள் பிரதமர்கள் லால்பகதூர், நரசிம்மராவ் போன்றவர்களுக்கும் மத்திய அரசு பெரிதாக ஏதும் செய்துவிடவில்லை.அதன் ஆர்வம் எல்லாம் நேரு குடும்பத்தைக் கொண்டாடுவதிலேயே இருந்தது.