பால கங்காதர திலகர் ஒரு இந்தியத் “தேசியவாதியும்”, “சமூக சீர்திருத்தவாதியும்”, விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே. இவரது பெயருடன் கௌரவப் பட்டமான “லோகமான்ய” என்பதையும் சேர்த்து அழைப்பதுண்டு. இந்தியாவுக்கு முதன் முதலில் தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். தன்னாட்சி எனது பிறப்புரிமை அதனை நான் பெறுவேன் என்னும் இவரது புகழ் பெற்ற கூற்று இன்றும் இந்தியாவில் நினைவுகூரப்படுகிறது. முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் ஆவார். மக்களிடையே அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அவர் திலக் மகராஜ் என்றும் அழைக்கப்பட்டார்.
திலகரின் சீடரான வ. உ. சிதம்பரம் பிள்ளை “தென்னாட்டுத் திலகர்” என்று அழைக்கப்படுகிறார். ஸ்ரீ அரவிந்தர் இந்திய மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்களில் முக்கியமானவர். பால கங்காதர திலகர் தலைமையில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பிறப்பும் கல்வியும் திலகர் 1856-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் நாள் மராட்டிய மாநிலம் ரத்தினகிரியில் பிறந்தார். தந்தையார் கங்காதர் ராமசந்திர திலக் சமஸ்கிருதத்தில் புலமை பெற்ற ஆசிரியர். தாயார் பார்வதிபாய்
அவரது பத்து வயது வரை ரத்தினகிரியில் படித்தார். பின்னர் அவரது தந்தை பணி காரணமாக புனேவுக்கு இடம் பெயர்ந்ததால் அங்கே கல்வியைத்தொடர்ந்தார். அவர் சுமார் பத்து வயதாக இருக்கும் போதே தாயை இழந்தார். அவருக்கு கேசவ் கங்காதர திலக் என்றே பெயரிட்டனர். அவரது தாயார் அவரை பால் என்று அழைத்தார். தாயார் நினைவாகவே திலகர் தனது பெயரை பால் கங்காதர திலக் என்று வைத்துக்கொண்டார். 1871-ல் சத்தியபாமா 11 வயது சிறுமியை திலகருக்கு மணம் முடித்தனர். 1877- ஆம் ஆண்டில் புனேவில் உள்ள டெக்கன் கல்லூரியில் கல்வி கற்றுப் பட்டம் பெற்றார். அப்போது அவரது தந்தையாரும் இறந்துவிட்டார். அவரது சித்தப்பா கோவிந்த ராவும் சித்தி கோபிகா பாயும் மிக அன்புடன் அவரை வளர்த்தனர். 1879-ல் சட்டப்படிப்பை முடித்தார். இவர் பெர்கூசன் கல்லூரியில் கணிதமும் கற்பித்து வந்தார்.
மகாதேவ் கோவிந்த் ரானடே என்பவர் ஆரம்பித்த சர்வஜனிக் சபாவில் சேர்ந்து பொதுத் தொண்டாற்றினார். தாதாபாய் நௌரோஜி இந்திய செல்வம் எப்படி ஆங்கிலேயரால் கொள்ளையடிக்கப்படுகிறது என்று புள்ளி விவரத்துடன் எழுதிய நூலை அடிப்படையாக வைத்து ரானடே 1872-ல் ஆற்றிய சொற்பொழிவும் விஷ்ணு சாஸ்திரி சிப்லுண்கர்1874-ல் நிபந்த மாலை என்ற பத்திரிக்கையில் தொடர்ந்து எழுதிய கட்டுரைகளும் சுய நலமற்ற பண்புடைய திலகரை ஆங்கில ஆதிக்கத்தை எதிர்க்கத் தூண்டியது.
சுவாமி விவேகானந்தர் இந்தியாவை சுற்றி வந்த பரிவ்ராஜக வாழ்க்கையின் போது, மும்பையில் இருந்து புனேவிற்கு செப்டம்பர் 1892 இல் ரயிலில் வந்தார். அப்போது பால கங்காதர திலகர் அவரது சக பிரயாணியாவார். பின்னர் திலகரின் இல்லத்தில் 8 லிருந்து 10 நாட்கள் வரை சுவாமி விவேகானந்தர் தங்கியிருந்தார்.அந்த அறை இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.பின்னாளில், இதே அறையில்தான் புகழ்பெற்ற விநாயகர் திருவிழாவையும் திலகர் ஆரம்பித்தார்.
ஜெர்மனியின் மாக்ஸ் முல்லர், அப்போதைய விக்டோரியா மகாராணிக்கு திலகர் விடுதலை செய்யப்பட வேண்டும், சிறையில் நல்லவிதமாக நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதினார். வில்லியம் வில்சன் ஹன்டர் மற்றும் பலரும் இக்கடிதத்தில் கையெழுத்திட்டனர். இன்றளவும் இக்காரணத்தால் ஜெர்மனியின் புனேவுடனான தொடர்பு நூறாண்டுகளுக்கும் மேல் பழமையானதாக கருதப்படுகிறது
சிறையில் இருந்து வெளிவந்த பிறகு மீண்டும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். அன்னிபெசன்ட் அம்மையாருடன் இணைந்து ஹோம்ரூல் இயக்கத்திற்காகப் போராடினார். கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடையே சுயராச்சியம் குறித்துப் பேசினார். 1919-ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்றார். இந்திய சுதந்திரம் குறித்து அங்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். லேபர் கட்சியைச் சேர்ந்த தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். (லேபர் கட்சியைச் சேர்ந்த பிரதமர் கிளமண்ட் அட்லீயின் பதவி காலத்தில் தான் நமக்கு சுதந்திரம் கிடைத்தது.) ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கேள்விப்பட்டு நாடு திரும்பினார். 1920 ஜூலையில் அவரது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் 1-ஆம் நாள் இறந்தார். சுமார் 2,00,000 பேர் கலந்துகொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.