இந்திய பொருளாதாரம் குறித்து தந்தை பரபரப்பை ஏற்படுத்தி குற்றச்சாட்டை முன்வைத்த போது, மகன் சமாளிப்பது வேடிக்கையாக இருந்தது.
தந்தை யஷ்வந்த் சின்ஹாவின் கருத்துக்ககு விளக்கம் அளிக்கும் வகையில் சர்வதேச அளவில் போட்டி போடும் நிலையில் இந்தியாவின் புதிய பொருளாதாரம் இருக்கும் என மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறியுள்ளார்.
”நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது; செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு, முறையாக செயல்படுத்தாத, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை உள்ளிட்டவை, அதை மேலும் மோசமாக்கியுள்ளது,” என, முன்னாள் மத்திய நிதியமைச்சர், யஷ்வந்த் சின்ஹா கூறியிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் யஷ்வந்த் சின்ஹாவின் மகனும், மத்திய அமைச்சருமான ஜெயந்த் சின்ஹா நாளிதழ் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில் கூறியுள்ளதாவது:
மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள், நீண்ட கால வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும். வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும். புதிய இந்தியாவை உருவாக்கவும், லட்சகணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கவும் மத்திய அரசு அடிப்படை சீர்திருத்தங்களை செய்து வருகிறது.
புதிய பொருளாதாரமானது, வெளிப்படைதன்மையுடனும், சர்வதேச அளவில் போட்டி போடும் வகையிலும் இருக்கும். அனைத்து இந்தியர்களும், சிறந்த வாழ்க்கை வாழும் வகையிலும், அனைவருக்கும் சம வாய்ப்புகளை அளிக்கும்… என்று அதில் கூறியுள்ளார்.