அரசு நலத்திட்டங்களைப் பெற ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக் கெடுவை நீட்டிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. எனவே இன்னும் மூன்று நாட்களே எஞ்சியுள்ளன. ஆதார் எண்ணை அரசு நலத் திட்டங்களுக்கு இணைப்பதற்கான காலக்கெடு வரும் மார்ச் 31 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. முன்னதாக, பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கெடுவை ஜூன் மாதம் வரை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்தது.
வங்கிக் கணக்கு, செல்போன் சேவை ஆகியவற்றுடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்குமாறு உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இந்நிலையில், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு வரும் 31ஆம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்திருந்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவால், பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசத்தை ஜூன் 30ஆம் தேதி வரை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளது. இந்நிலையில், ஆதார் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆதார் பாதுகாப்பு உத்தரவாதத் தன்மை குறித்த பவர் பாயின்ட் விளக்கத்தின் எஞ்சிய பகுதியை, தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் பூஷன் பாண்டே விவரித்தார்.
இருப்பினும், ஆதார் இணைக்கப்படாததால் சுமார் 14 கோடி பேர் அரசு நலத் திட்டங்களின் பலனை பெறமுடியாமல் இருப்பதால், மார்ச் 31 வரையிலான கெடுவை மேலும் நீட்டிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கோரினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர் வேணுகோபால், ஆதாரை காரணம் காட்டி ஒருவருக்குக் கூட இதுவரை அரசு சலுகை மறுக்கப்படவில்லை எனக் கூறினார்.
இதை அடுத்து, அரசு திட்டங்களுடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற மனுதாரர் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.