கிரிக்கெட் ஒரு ஜெண்டில்மேன் விளையாட்டு என்று வர்ணிப்பார்கள். கிரிக்கெட் இங்க்லீஷ் நாடுகளில் தோன்றி இங்கிலாந்தால் ஆளப்பட்ட நாடுகளில் பரவலாகி, காமல்ன்வெல்த் நாடுகளில் நங்கூரம் பாய்ச்சி நிலையான இடத்தைப் பிடித்துள்ளது.
இங்கிலாந்தில் துவங்கி வெள்ளை இனத்தவர்களால் பெருவாரியாக விளையாடப்பட்டதால் ஜெண்டில்மேன் விளையாட்டு என்று கூறப்பட்டதா என்பது விவாதத்துக்கு உரியது. ஆனால், இப்போதும் இந்த விளையாட்டுக்கு ஜெண்டில்மேன் விளையாட்டு என்று கூறுவது பொருத்தம் தானா?
இந்தக் கேள்வி எழுந்துள்ளதற்குக் காரணம், எப்போதுமே ஒரு சாம்பல் கோப்பைக்காக அடிபிடி போடும் இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் நடந்து கொள்ளும் விதம்தான்! முன்னர் பாகிஸ்தானின் இம்ரான் கான் பந்தைப் போட்டு தொடையில் தேய் தேய் என்று தேய்த்து ஒரு பக்கத்தை ஷைனிங் இல்லாமல் ஆக்கி பந்தை நாசப்படுத்தி, சேதப்படுத்தி, விக்கெட்களை எடுத்த போது கண்டறியப் படாத வித்தை நுணுக்கங்களெல்லாம் இப்போது, கேமரா பளிச்செனக் காட்டி விடுவதால் வீரர்களின் கோல்மால்கள் வெளிப்பட்டு விடுகின்றன.
இந்த கோல்மால் பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் ஆஸ்திரேலியாவின் பான்க்ராஃப்ட். தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் ஸ்மித், துணை கேப்டன் வார்னர் என நெருக்குதலுக்கு ஆளாக, இப்போது ஆஸ்திரேலிய அணி அவமானத்தின் உச்சத்துக்குச் சென்றிருக்கிறது. பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டுகள் ஒன்றும் ஆஸ்திரேலிய அணிக்குப் புதிதில்லை என்றாலும், இப்போது அந்த அணிக்கு நேர்ந்த அவமானம் போல் இதுவரை நேர்ந்ததில்லை!
இந்த நிலையில், ‘நேர்மைக்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் ராகுல் டிராவிட். என்று புகழாரம் சூட்டியுள்ளார் ஆஸ்திரேலிய வீரரான மைக் ஹஸி!
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தினால் ஆஸ்திரேலிய அணி இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவது கடினம் என்று கூறியுள்ள மைக் ஹஸி, கிரிக்கெட் விளையாட்டில் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக என்றென்றும் நம் நினைவில் வருபவர் ராகுல் டிராவிட்தான் எனப் புகழ்ந்துள்ளார். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. தான் ஆட்டமிழந்தோம் என்று தன் மனத்துக்குப் பட்டவுடனே, நடுவரின் ஒற்றை விரலுக்குக் காத்திராமல், உடனே களத்தில் இருந்து வெளியேறி எதிரணிக்கு எந்த ஒரு ஆட்டமிழத்தல் கோரும் வாய்ப்பும் கொடுக்காமல் வெளியேறிவிடுவார்.
போங்கு ஆட்டம் இல்லாத இந்தியாவின் சுவர் என்று வர்ணிக்கப்பட்ட ராகுல் டிராவிட்டுக்கு இப்போது புகழாரம் சூட்டியிருப்பவர் ஆஸி.,யின் மைக் ஹஸியேதான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ளார் மைக் ஹஸி. இவர்தான், ஆஸ்திரேலிய அணி இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவது கடினம் என்று தெரிவித்துள்ளார்.
‘பந்தைச் சேதப்படுத்திய காரணத்தால் மட்டும் ஆஸ்திரேலிய அணி தலைப்புச் செய்தியாவது முதல்முறை அல்ல. இனி வரும் நாள்கள் ஆஸ்திரேலிய அணிக்கு சவால் நிறைந்ததாகவே இருக்கும். இந்த சர்ச்சையில் இருந்து ஆஸி. அணி தன்னை மறு ஆய்வு செய்துகொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கிரிக்கெட்டில் நாம் மிகவும் மெனக்கெட்டு கடினமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறோம். தன்னம்பிக்கையுடன் ஆக்ரோஷமாக ஆடுகிறோம். ஆனால், நியாயமாக ஆடுவதை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது.
ராகுல் டிராவிட் என்றாலே, முதலில் மனதில் தோன்றுவது அவர் அடித்த 28 சதங்கள். அதேபோல், டிராவிட் என்றால் அவர் ஒரு சுவர், பேட்டிங் உத்திகளைச் சிறப்பாகக் கையாளுபவர். இவை எல்லாம் நினைவுக்கு வருவதை விட, அவர் ஒரு நேர்மையாளர், மிக நேர்மையுடன் கிரிக்கெட் ஆடினார் என்பதுதான் நினைவில் நிற்கும். ஆகவே நாம் விளையாடும் காலத்தில் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதுதான் முக்கியமானது எனக் கூறியுள்ளார் மைக் ஹஸி.
உண்மையில் ஜென்டில்மேன் விளையாட்டு என்பதன் பொருளை ஹஸி சொல்வது போல் டிராவிட்டிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம்!