பெங்களூர்: கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பா இன்று பதவி ஏற்கிறார். எடியூரப்பா முதல்வராக பதவியேற்பதை எதிர்த்து காங்கிரஸ், மஜத உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், எடியூரப்பாவுக்கு தடை இல்லை என பச்சைக் கொடி காட்டியது உச்ச நீதிமன்றம்.
காங்கிரஸ், மஜத., இரண்டும் சேர்ந்து தாக்கல் செய்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கோரப்பட்டது. அதை அடுத்து இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக ஏற்கப்பட்டு நள்ளிரவு 1.45க்கு நீதிபதிகள் ஏ.கே.சிக்கிரி, அசோக் பூஷன் மற்றும் எஸ்.ஏ.போப்தே ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்த இந்த விசாரணையின் போது, காங்கிரஸ்-மஜத தரப்பு வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான அபிஷேக் மனு சிங்வி, எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்க தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். மேலும், தாங்கள் கர்நாடக ஆளுநரை எதிர்க்கவில்லை; எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்த அவரின் முடிவையே எதிர்க்கிறோம் என்றார்.
இதற்கு பதிலாக, அரசுத் தரப்பு வழக்குரைஞர் முகுல் ரோத்தஹி, ஆளுநரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது; மரபுப் படி ஆளுநர் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சியை ஆட்சியமைக்க அழைத்துள்ளார் என்று கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் எடியூரப்பா முதல்வராகப் பதவி ஏற்க தடையில்லை என்றும், இந்த வழக்கு குறித்து விரிவான விசரணைக்குப் பிறகு தான் முடிவு எடுக்க முடியும் என்றும் கூறினர்.
மேலும், எடியூரப்பா தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடிதத்தை மதியம் 2 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், எடியூரப்பாவின் பதவியேற்பு இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் கூறினர். இந்த வழக்கின் விசாரணை நாளை காலை 10.30க்கு நடைபெறும் என்று கூறினர்.
இதையடுத்து எடியூரப்பா இன்று காலை 9 மணிக்கு முதல்வராகப் பதவி ஏற்கிறார்.