ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க இன்றே கடைசி நாள்

மத்திய அரசு வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண் பான் எண் இணைப்புக் கட்டாயம் என்று தெரிவித்துள்ளது. இவை இரண்டையும் இணைக்க இன்றே கடைசி நாளாகும். இது 5வது முறையாக மத்திய அரசு வழங்கிய நீட்டிப்பாகும்.

உச்ச நீதிமன்றம் பல அரசு சேவைகளுக்கு ஆதார் எண்ணை இணைக்கக் கடைசித் தேதியைக் காலவரையின்றி ஒத்தி வைத்த நிலையில் ஆதார் – பான் இணைப்பிற்கு இது செல்லாது என்று கூறப்படுகிறது.

வருமான வரித் துறை சட்டப் பிரிவு 133 AA (2)-ன் கீழ் 2017 ஜூலை 1-க்கு முன்பு வரை யாரிடம் எல்லாம் பான் கார்டு உள்ளதோ அவர்கள் எல்லாம் இந்த இணைப்பினை செய்ய வேண்டும், இல்லை என்றால் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது என்று கூறுகிறது.

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

வருமான வரி தாக்கல் இணையதளமான www.incometaxindia.gov.in-க்கு சென்று பான் எண், பிறந்த தேதி போன்ற விவரங்களை அளித்துப் பதிவு செய்து உள்நுழைய வேண்டும். பின்னர்ச் சுயவிவர அமைவு என்ற தெரிவை தேர்வு செய்து அதில் “ஆதார் இனைப்பு” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர் உங்கள் பெயர், பிறந்த தேதி, பாலினம் போன்ற விவரங்களைச் சரிபார்த்துக் கொண்டு ஆதார் எண்ணை உள்ளிட்டால், மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச்சொல் ஒன்று வரும். அதனை உள்ளிட்டு பான் – ஆதார் இணைப்பினை செய்யலாம். இணைப்பு முடிந்த பிறகு வெற்றிகரமான இணைக்கப்பட்டதாக மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

வருமான வரி தாக்கல் செய்பவர்கள் பான் – ஆதார் இணைப்பினை செய்து இருந்தால் தாக்கல் விவரங்களை அச்சிட்டுக் கையெழுத்திட்டு வருமான வரித் துறை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டிய அவசியம் இருக்காது என்பதே பான் – ஆதார் இணைப்பினை செய்ய வேண்டும் என்பதற்கான காரணங்கள் ஆகும். மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட பான் எண் பயன்படுத்துவதைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒருவரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பான் எண் இருந்தால் வங்கிகள் கடன் வாங்கும் போது பிரச்சனை வரும், கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். எனவே இணைப்பினை செய்து ஒரே பான் கார்டினை பயன்படுத்துவது நல்லது.