அரை மணி நேரம் பாதுகாப்பு இன்றி நின்றிருந்த ராகுல்: உளவுப் பிரிவு விசாரணை

சென்னை: மறைந்த திமுக. ,தலைவர் கருணாநிதி இறுதி அஞ்சலி நிகழ்வில் 30 நிமிடம் பாதுகாப்பு இல்லாமல் ராகுல் காந்தி இருந்ததாகக் கூறப்பட்டது குறித்து மத்திய உளவுப்பிரிவு விசாரணை மேற்கொண்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்திக்கு 30 நிமிடம் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி நேற்று பிற்பகல் சென்னை வந்தார்.

ராகுல்காந்தி வந்த நேரத்தில் திமுக தொண்டர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவர்கள் போலீஸாரின் கட்டுப்பாடுகளை மீறி கருணாநிதியின் உடல் வைக்கப் பட்டிருந்த இடம் வரைக்கும் வந்து சூழ்ந்து கொண்டனர். முக்கியப் பிரமுகர்கள் வரும் பகுதியிலும் தொண்டர்கள் ஆக்கிரமித்து விட்டனர். அவர்களைக் கட்டுப்படுத்த சென்னை போலீஸார் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.

அந்நேரத்தில் முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியாக ராகுல் காந்தியும் வந்தார். அவரை ஓர் இடத்தில் அமர வைத்து விட்டு போலீஸார் சென்று விட்டனர். சிறிது நேரம் அமர்ந்திருந்த ராகுல், பின்னர் எழுந்து அங்கிருந்த பகுதிகளை சுற்றிப் பார்க்க ஆரம்பித்தார். தொண்டர்களைக் கட்டுப்படுத்தும் முனைப்பில் இருந்த போலீஸார் ராகுலை மறந்து விட்டனர். இதனால் சுமார் 30 நிமிட நேரம் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் இருந்துள்ளார் ராகுல்.

இந்நிலையில், இதுகுறித்து விவரம் அறிந்த மத்திய உளவுப் பிரிவு போலீஸார், உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். இதுகுறித்து விசாரிக்கப் படும் என தெரிகிறது.