
வீட்டு வேலைக்காரர் ஒருவர் தான் வேலை செய்யும் வீட்டிலிருந்த 20 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்ததால் கைது செய்யப்பட்டார்.
மும்பையின் ஜோகேஸ்வரி வட்டாரத்தில் வினய் திரிபாதி என்ற 32 வயதான தொழிலதிபர் அங்குள்ள ஒரு அபார்ட்மெண்டில் வசித்து வந்தார். அவரின் வீட்டில் வீட்டை கூட்டி பெருக்கவும், சுத்தப்படுத்தவும் அஜய் வால்மீகி என்பவரை வேலைக்கு வைத்திருந்தார்.
அவர் தினமும் அவரின் வீட்டிற்கு வந்து வீட்டை சுத்தப்படுத்திவிட்டு குப்பைகளை எடுத்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 8ம் தேதியன்று வினய் தன்னுடைய வீட்டின் டைனிங் டேபிளில் 20 லட்ச ரூபாய் பணத்தை மறந்து வைத்து விட்டு, வீட்டை பூட்டாமல் சென்று விட்டார். அப்போது அவரின் வீட்டை சுத்தப்படுத்திவிட்டு குப்பைகளை கொண்டு செல்வதற்கு வேலைக்காரர் வால்மீகி வந்தார். அப்போது அவரின் வீட்டு டைனிங் டேபிளில் இருந்த 20 லட்ச ரூபாய் பணத்தை பார்த்தார்.
அந்த பண மூட்டையில் 20 லட்சம் என்று எழுதப்பட்டிருந்தது. அதை பார்த்ததும் வால்மீகி அதை எடுத்து கொண்டு வீட்டை விட்டு ஓடி விட்டார். பின்னர் அவர் அவரின் சொந்த ஊரான ஹரியானா மாநிலம் செல்வதற்காக குஜராத்திலுள்ள ராஜ்கோட்டிற்கு சென்றார்.
பிறகு பணத்தை காணாமல் தவித்த தொழிலதிபர் வினய், வீட்டு வேலைக்காரர் வால்மீகி மீது போலீசில் புகாரளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வால்மீகியை பிடிக்க வலை விரித்தனர். அப்போது அவரை அவரின் சொந்த ஊரான ஹரியானாவின் சோன்பேட்டையில் கைது செய்தார்கள். பிறகு அவரிடமிருந்த 19.5 லட்ச ரூபாய் பணத்தை மீட்டு அவரை சிறையிலடைத்தார்கள் .