தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள சூலமங்கலத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 37). இவர் கடந்த 7-ந்தேதி இரவு தனது மனைவி உஷாவுடன் (34) மோட்டார் சைக்கிளில் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார்.

துவாக்குடி அருகே செல்லும்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து கொண்டிருந்தனர்.

ராஜாவை, போலீசார் மறித்த போது அவர் நிறுத்தாமல் ஓட்டிச்சென்றார். இதனால் ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர் காமராஜ், விரட்டி சென்று ராஜாவின் மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்தார். இதில் இருவரும் தடுமாறி கீழே விழுந்ததில் உஷா சம்பவ இடத்திலேயே பலியானார். அப்போது உஷா கர்ப்பிணியாக இருந்ததாகவும் கூறப்பட்டது.

இதனால் ராஜா அளித்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் காமராஜை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் தாய் மற்றும் சிசுவின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாக கூறி இன்ஸ்பெக்டர் காமராஜ் மீது இரட்டை கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தன. இந்த வழக்கை திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டி. எஸ்.பி. புகழேந்தி விசாரணை நடத்தி வருகிறார்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

இந்த நிலையில் உஷா மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையை திருச்சி அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதில், உஷா கர்ப்பிணி இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அவரது வலது புற சினைப்பையில் ஒரு கட்டி இருப்பதாகவும், இடது புற சினைப்பையில் கரு ஏதும் இல்லாமல் இயல்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிரேத பரிசோதனையின் முதல் அறிக்கையில் உஷா கர்ப்பிணி இல்லை என்று வந்துள்ள நிலையில், மற்றொரு அறிக்கை இன்னும் சில நாட்களில் வரும். அந்த அறிக்கையை பொறுத்தே அவர் கர்ப்பமாக இருந்தாரா? என்பது உறுதிபட தெரியவரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending