சென்னை:
நடிகர் விஜய், நடிகை நயன்தாரா, புலி படக் குழுவினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

நடிகர்  விஜய் நடித்துள்ள புலி திரைப்படம் நாளை வெளியாகிறது. சுமார் 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் மற்றும் புலி திரைப்படத் தயாரிப்புக் குழுவினர் வீடுகளில் இன்று காலை வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டிலும், சாலிகிராமத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. சாலிகிராமத்தில் உள்ள புலி பட இயக்குனர் சிம்புதேவனின் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. நாகர்கோவில் அஞ்சுகிராமத்தில் உள்ள புலி பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் வீட்டிலும் சோதனை நடந்தது. புலி திரைப்படம் தொடர்பாக படக்குழுவினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இது தொடர்பாக தமிழகத்தில் 25 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

மதுரையில், வருமான வரித் துறை அதிகாரிகள் இன்று காலை 5 மணி அளவில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகளில் திடீர் சோதனையில் ஈடுபட்ட னர். மதுரை தெற்கு மாசி  வீதியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள் உள் பக்கமாகப் பூட்டிக் கொண்டு சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும், கீரைத்துரை முத்துப்பிள்ளை தெருவில் உள்ள அவரது மற்றொரு வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.  இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

மேலும் நடிகை நயன்தாராவின் கொச்சியில் உள்ள வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து வரும் நயன்தாரா கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார். இதைத் தொடர்ந்தே இவரது வீட்டில் வருமான வரி சோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அதுபோல், நடிகை சமந்தாவின் வீடுகளிலும் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர். சென்னை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள அவரது வீடுகளில் சோதனை நடந்தது.  சென்னை போட் கிளப், குரோம்பேட்டையில் உள்ள சமந்தா வீடுகளில் ஒரே நேரத்தில் சோதனை நடந்தது.

தமிழகம், கேரளா, ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களிலும் இன்று காலை ஒரே நேரத்தில் சுமார் 32 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending