மீன்பிடித் தடைக்காலம் இன்றுடன் முடிவடைவதை முன்னிட்டு, கடலுக்குச் செல்ல மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.
ஆண்டுதோறும் ஏப்ரல், மே மற்றும் ஜுன் மாதங்களில் வங்கக் கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கம் அதிகளவில் இருப்பதாக கடல்சார் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, வங்கக் கடலில் விசைப் படகுகளில் மீன்பிடித்தால் மீன்குஞ்சுகள் வலையில் சிக்கி அழியும் என்பதால், கடந்த 2000ம் ஆண்டு முதலாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக 45 நாட்கள் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு வந்தது.
கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்த தடைக்காலம் 60 நாட்களாக நீட்டிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டுக்கான தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. மீன்பிடி தடைக்காலத்தில், திருவள்ளூர் மாவட்டம் தொடங்கி, கன்னியாகுமரி வரையுள்ள கடற்பகுதிகளில், விசைப் படகு மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.
இந்த தடைக்காலம் நாளை இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது. தடைக்காலம் முடிவதை முன்னிட்டு, மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. சென்னை காசிமேட்டில் மட்டும் 1,200 விசைப் படகுகள் உள்ளன. படகுகளுக்கு மராமத்து பணிகள், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடலுக்குள் செல்வதற்குத் தேவையான டீசல், ஐஸ் கட்டிகள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றையும் வாங்கி சேகரித்து வருகின்றனர். மீன்பிடி வலைகள் உள்ளிட்ட சாதனங்களையும் மீனவர்கள் வாங்கி தயார் நிலையில் வைத்துள்ளனர். இன்று நள்ளிரவு முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்வார்கள். எனவே அடுத்தவாரம் முதல் மீன்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.