அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் ஒத்துழையாமை போராட்டம்

கன்னியாகுமரியில் அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் ஒத்துழையாமை போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊதிய உயர்வு கோரி காளிகேசம், கீரிபாறை உள்பட 9 இடங்களில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குமரி மாவட்டத்தில் மிகப்பெரும் அரசுத் துறை நிறுவனங்களில் ஒன்றாக அரசு ரப்பர் கழகம் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களில், வனத்துறையிடமிருந்து குத்தகைக்குப் பெற்ற சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் இங்கு ரப்பர் தோட்டம் உள்ளது.

மயிலாறு, கோதையாறு, சிற்றாறு, மணலோடை, கீரிப்பாறை ஆகிய 5 பிரதான கோட்டங்களும், அதன்கீழ் கல்லாறு, குற்றியாறு, மருதம்பாறை, காளிகேசம், பரளியாறு பிரவுகளையும் கொண்டுள்ள இந்நிறுவனத்தில், ரப்பர் மரங்களில் பால்வடித்தல், ஆலைப் பணி, களப்பணி ஆகிய பணிகளில் சுமார் 1100 நிரந்தரத் தொழிலாளர்களும், சுமார் 650 தற்காலிகத் தொழிலாளர்களும் உள்ளனர். இதில் கணிசமான எண்ணிக்கையில் பெண் தொழிலாளர்களும் உள்ளனர்.

இங்கு பணி செய்யும் தொழிலாளர்களில் குறிப்பிட்ட பகுதியினர் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களும், மலைவாழ் மக்களும் ஆவர். நகரங்களிலிருந்து வெகு தொலைவில், அடர்ந்த வனப்பகுதிகளுக்கு மத்தியில் அச்சுறுத்தும் வன விலங்குகளுக்கிடையில், பெரும்பாலும் மின்சாரமின்றி மற்றும் அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாத குடியிருப்புகளில் வாழும் இத்தொழிலாளர்களின் வாழ்க்கை சவால்கள் மற்றும் சாகசங்கள் நிறைந்ததாகும்.

இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இதுவரை புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை.

புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தும் வகையில் நாகர்கோவில் தொழிலாளர் துறை உதவி ஆணையர் அலுவலகத்திலும், வனத்துறை அமைச்சர் முன்னிலையிலும் இதுவரை 29 முறை பேச்சு வார்த்தைகள் நடத்தியும் உடன்பாடு ஏற்படாத நிலை உள்ளது. குறிப்பாக கடந்த பிப். 2ஆம் தேதி சென்னையில் வனத் துறை அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தமிழக முதல்வர் மூலம் 10 நாள்களில் தீர்வு ஏற்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. அதன் பிறகு இதுவரை பேச்சுவார்த்தை நடத்தப்படாத நிலை உள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். ஊதிய உயர்வை வலியுறுத்தி ரப்பர் கழக நிர்வாக இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோட்ட மேலாளர் அலுவலகம் ஆகியவற்றின் முன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், மறியல் என பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை.