இன்று விசாரணைக்கு வருகிறது நிர்மலாதேவி, முருகன் ஜாமீன் மனு

பாலியல் பேர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள உதவிப் பேராசிரியர்கள் நிர்மலாதேவி, முருகன் ஆகியோரது ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று ஒத்திவைத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அரசு உதவிபெறும் கலை கல்லூரியில் கணிதத் துறை உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்த நிர்மலாதேவி, தன்னிடம் படித்த மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, மதுரை காமராஜர் பல்கலைக்கழக நிர்வாக மேலாண்மைத் துறை உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், நிர்மலாதேவி, முருகன் ஆகியோர் தனித்தனியாக தங்களது வழக்குரைஞர்கள் மூலம் ஜாமீன் கோரி, ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் தொடர்பாக கடந்த வியாழக்கிழமை விசாரணை நடத்திய நீதிபதி முத்துசாரதா, வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். நிர்மலாதேவி ஜாமீன் கோரி ஏழாவது முறையாக விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஜாமீன் மனு தள்ளுபடி: இந்நிலையில், மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருப்பசாமி தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இரண்டாவது முறையாக மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனு வியாழக்கிழமை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இவரது ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி, இவ்வழக்கில் கைதாகியுள்ள மூவரும் செய்தது சாதாரண குற்றம் கிடையாது.

இது சமுதாயத்தை சீரழிக்கும் செயல். மூவருக்கும் ஜாமீன் வழங்கினால் மாணவிகளுக்கு பாதுகாப்பு இருக்காது. ஆகவே, 3 பேரும் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யக்கூடாது என்றும், 3 பேரிடமும் சிறையில் வைத்தே விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.