நட்சத்திர விடுதியில் பயங்கரவாத தாக்குதல் : 27 பேர் சுட்டுக்கொலை

ஆப்ரிக்க நாடான மாலி தலைநகர் பமாகோவில் நட்சத்திர விடுதிக்குள் புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த 30 பணியாளர்கள் உட்பட 170 பேரை சிறைபிடித்தனர். பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கிய நட்சத்திர விடுதி பல மணி நேர சண்டைக்குப் பின் மீட்கப்பட்டது. சண்டையில், 27 பேர் கொல்லப்பட்டனர்.

பிணைக்கைதிகளில் 20 பேர் இந்தியர்கள். ஆயுதங்களோடு வந்த பயங்கரவாதிகள் விடுதியின் காவலர்களை சுட்டுக்கொன்ற பிறகு உள்ளே நுழைந்து அங்கு தங்கியிருந்தவர்களையும், பணியாளர்களையும் சிறைப் பிடித்தனர்.

அமெரிக்கா – பிரான்ஸ் கூட்டுப்படையினர், மாலி பாதுகாப்புப் படையினருடன் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். நட்சத்திர விடுதிக்குள் அதிரடியாக நுழைந்த ராணுவத்தினர் பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே பயங்கர சண்டை மூண்டது. பல மணி நேர சண்டையில், 2 பயங்கரவாதிகளும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். நட்சத்திர விடுதியில் இருந்து 27 உடல்கள் மீட்கப்பட்டதாக மாலி அரசு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு அல் கய்தாவுடன் தொடர்புடைய அல்-மொராபிடோன் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மாலித் தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பயங்கரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து, மாலியில் பத்து நாட்களுக்கு அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.