தமிழகத்தில் அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக இதுவரை 625 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னை – 97, கடலூர் – 13, விழுப்புரம் – 255, நாமக்கல் – 7,ஈரோடு – 7,தஞ்சை – 10, சேலம் – 50,கொடைக்கானல் – 2,வேலூர் – 2, நெல்லை – 31, விருதுநகர் – 80, கோவை – 85, திருப்பூர் – 57, அரியலூர் – 14,என இதுவரை 786 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி, பட்டாசு வெடித்ததால் இளைஞர்கள், சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்கு பதியப் பட்டுள்ளது.
தமிழகத்திலேயே முதல் முறையாக, நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக, நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவியில், 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிக பட்சமாக விழுப்புரத்தில் 225 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதன்படி இன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப் பட்டிருந்தது. ஆனால் இந்த நேரக் கட்டுப்பாட்டை மீறி, முற்பகலில் சேரன் மகாதேவியில் பேருந்துநிலையம் அருகே, குடியிருப்பு பகுதியில் தெருவில் வைத்து பட்டாசுகள் வெடிக்கப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்ததன் அடிப்படையில் அப்பகுதிக்குச் சென்ற போலீசார், சிறார்கள் உள்ளிட்ட 25 பேரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
சிறார்களின் தந்தையர் 6 பேர் மீதும், 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் 7 பேர் மீதும் போலீசார், இந்திய தண்டனைச் சட்டம் 285ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் பட்டாசுகளை வெடிப்பதில் நேரக் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும் என்றும், அனுமதிக்கப்பட்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகளை கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.
தமிழகத்திலேயே முதல் முறையாக, நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததற்கான சட்ட நடவடிக்கை சேரன்மகாதேவியில் எடுக்கப் பட்டது.
* இந்திய தண்டனைச் சட்டம் 285ஆவது பிரிவின் கீழ் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
* தீப்பற்றக்கூடிய, எரியக் கூடிய பொருட்களை தெரியாமலோ அல்லது தெரிந்தும் உத்தரவை மீறியோ அலட்சியமாக அல்லது மூர்க்கமாகவோக பயன்படுத்துவது, அதன் மூலம் மனிதர்களுக்கு காயம் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துபவர்கள் மீது இந்த பிரிவில் வழக்கு பதிவு செய்யப்படும்.
* இந்தப் பிரிவின் கீழ் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
* இந்திய தண்டனை சட்டத்தின் 188வது பிரிவின்படி, அரசின் உத்தரவுக்கு கீழ்படியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
* இந்த சட்டத்தின்படி 1 முதல் 6 மாதம் வரை சிறை தண்டனையோ அல்லது 200 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை அபராதமோ விதிக்கப்படலாம். அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.