பத்து மாத குழந்தை விழுங்கிய ஹேர்பின்னை திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வியாழக்கிழமை அகற்றி, குழந்தையின் உயிரை காப்பாற்றினர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மருங்காபுரி கோனார்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகளும், ஹரிஷ் (10 மாதம்) என்ற ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.
வியாழக்கிழமை காலை வீட்டில் மற்ற குழந்தைகள் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்த நேரத்தில், விளையாடிக் கொண்டிருந்த ஹரிஷ், தலைக்கு வைக்கும் ஹேர்பின்னை எடுத்து விழுங்கிவிட்டான். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், ஸ்கேன், எக்ஸ்ரே எடுத்து பரிசோதித்து பார்த்தபோது, குழந்தையின் மூச்சுக்குழாயில் ஹேர்பின் சிக்கியிருந்ததும், அதை அகற்றாவிட்டால் குழந்தை இறந்துவிடும் அபாயம் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து காது, மூக்கு, தொண்டை மருத்துவப் பிரிவின் தலைவர் டாக்டர் பழனியப்பன் தலைமையில், அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பவதாரிணி, மயக்கவியல் நிபுணர் சிவக்குமார் உள்ளிட்ட டாக்டர்கள் குழு, உடனடியாக அதிநவீன (விடியோ லெரிகோகோபிக்) எண்டோஸ்கோபிக் கருவி உதவியுடன் குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த 4 செ.மீ. நீளமும், 2.5 செ.மீ. அகலமும் கொண்ட ஹேர்பின்னை லாவகமாக எடுத்தனர். இதனால் குழந்தை இறப்பிலிருந்து தப்பி, தற்போது நலமுடன் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களுக்கு, மருத்துவமனையின் முதல்வர் எஸ். மேரி லில்லி பாராட்டு தெரிவித்தார். குழந்தையின் பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள குழந்தை ஹரிஷ்.