
பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலனை திருமணம் செய்து கொண்ட இளம் பெண்ணுக்கு, தேனிலவு நாட்கள் கூட இனிமையாக கழியவில்லை என்பதுதான் சோகம்.
சென்னையை அடுத்த ஆவடி அருகே உள்ள சிஆர்பிஎப் பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் 62 வயதான ராஜா. ஓய்வு பெற்ற சிஆர்பிஎப் மருத்து அலுவலரான இவரது மகள் ராதா.
தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ராதா, சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த பாலாஜி என்ற இளைஞரை கடந்த ஒராண்டாக காதலித்து வந்துள்ளார்.
இந்த காதலுக்கு ராதாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த மாதம், திடீரென வீட்டை விட்டு வெளியேறிய ராதா, நண்பர்கள் உதவியுடன் பாலாஜியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த திருமணத்தை ராதாவின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளாததுடன், அவரை வீட்டிற்குள் அனுமதிக்கவும் மறுத்துள்ளனர்.
இதனால், சில நாட்கள் நண்பர்கள் வீட்டில் புதுமண தம்பதி தங்கியிருந்துள்ளனர்.
திருமணமான ஒரு சில நாட்களிலேயே பாலாஜியின் சுயரூபம் வெளிபடத் தொடங்கியுள்ளது.
மதுபோதைக்கு அடிமையான பாலாஜி, தினமும் குடித்துவிட்டு வந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், ராதாவின் நடத்தையிலும் சந்தேகம் கொண்டு, அவரை அடித்து உதைத்து துன்புறுத்தியுள்ளார். ,
இதற்கிடையில், மகனின் திருமணத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த பாலாஜியின் தந்தை மஸ்தான், ராதாவின் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
தமது மகளுக்கு திருமணம் செய்து வைத்த பிறகு, பாலாஜிக்கும், ராதாவுக்கும் முறைப்படி திருமணம் செய்துவைப்பதாகக் கூறி, மகனை தம்முடன் அழைத்துச் சென்றுள்ளார்.

ராதா பெற்றோர் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார். தந்தையுடன் சென்ற பாலாஜி, அதன்பிறகு, ராதாவுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன் சாலிகிராமத்திற்கு கணவனை பார்க்கச் சென்ற ராதாவை, பாலாஜியும், அவரது தந்தையும் அடித்து அவமானப்படுத்தியதாக தெரிகிறது.
இந்த நிலையில்தான் வீட்டில் தனியாக இருந்த ராதா, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தகவலறிந்து சென்ற ஆவடி டேங்க பேக்டரி போலீசார், ராதாவின் சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.