ராமநாதபுரம்: தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ராம ராஜ்ய ரத யாத்திரை, எதிர்க்கட்சிகளின் போராட்டங்களால் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த ரதத்துக்கு போலீஸார் முழு பாதுகாப்பையும் அளித்து வருகின்றனர். இந்நிலையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, ராமேஸ்வரத்தில் இந்த ரதம் போலீஸாரால் தடுத்து நிறுத்தப் பட்டது.
ஐந்து கோரிக்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் விதமாக ராம ராஜ்ய ரதயாத்திரை நடைபெற்று வருகிறது. அயோத்தியில் தொடங்கிய இந்த யாத்திரை ஐந்து மாநிலங்களைக் கடந்து தமிழகம் வந்துள்ளது. தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ரத யாத்திரைக்கு போலீஸார் முழு பாதுகாப்பும் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரையில் இருந்து புறப்பட்ட ரத யாத்திரை ராமேஸ்வரம் மாவட்டம் சென்றடைந்தபோது போலீஸ் அறிவுறுத்திய பாதையான கிழக்குக் கடற்கரை சாலை வழியாக செல்லாமல், தேவிபட்டினம் வழியாக செல்ல முயன்றது. ஆனால், மாற்றுப் பாதையில் செல்வதற்கு போலீஸார் அனுமதிக்கவில்லை. பாதுகாப்பு கருதி, திட்டமிட்டபடி குறிப்பிட்ட பாதை வழியாகவே செல்ல வேண்டும் என அறிவுறுத்தி ரதத்தை தடுத்து நிறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், ரதத்துடன் அங்கிருந்த உள்ளூர் பாஜக., நிர்வாகிகளிடம் நிலைமையை எடுத்துச் சொன்ன போலீஸார், திட்டமிட்ட பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தினர். திட்டமிடப் படாத புதிய பாதையில் சென்றால் பிரச்னை ஏற்படலாம் என்று எடுத்துக் கூறியதை அடுத்து, காவல்துறை கூறிய கிழக்கு கடற்கரை சாலையில், தூத்துக்குடி நோக்கி ரத யாத்திரையை தொடர்ந்து செல்லுமாறு பாஜக., நிர்வாகிகள் ரதயாத்திரையில் வந்தவர்களிடம் பேசினர். இதை அடுத்து போலீஸார் திட்டமிட்ட பாதையில் ரதம் புறப்பட்டுச் சென்றது.