சென்னை: நம் மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை தமிழக அரசுதான் தீர்மானிக்க வேண்டும். அந்த உரிமை தமிழக அரசுக்கு வர வேண்டும்; நான் ஆட்சிக்கு வந்தால், எனது முதல் கையெழுத்து, லோக் ஆயுக்தவுக்குதான் இருக்கும் என்றார் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல ஹாசன்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்றுப் பேசினார் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்.
கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றிய அவர், கோபம் அதிகமானதன் வெளிப்பாட்டினால்தான் நான் அரசியலுக்கு வந்தேன். இதனால் எந்தவித பதற்றமோ, பயமோ எனக்கு இல்லை. கல்வி என்பது சம்பளம் பெறும் ஒரு கருவியாக மட்டுமே இருக்கக் கூடாது என்று கூறினார்.
பின்னர் மாணவர்கள் அரசியலுக்கு வருவது குறித்துப் பேசிய கமல், மாணவர்களுக்கு அரசியல் புரிதல் இருக்க வேண்டும். இளைஞர்களிடையே அரசியல் தெளிவு இருந்தால் மட்டுமே, அரசியல்வாதிகள் நியாயத்துடன் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.
பின்னர், நீட் தேர்வு குறித்து மாணவர் ஒருவர் எழுப்பிய வினாவுக்கு பதிலளித்த கமல், நாம் என்ன படிக்க வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.
தாம் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு கிடைத்தால், தம்முடைய முதல் கையெழுத்து ஊழலை ஒழிக்கும் லோக் ஆயுக்தாவுக்கு தான் இருக்கும் என்றார் உறுதியாக!