சென்னை: சென்னை, பல்லாவரத்தில், உயிருக்கு உயிராய் காதலித்த தனது காதலியை சந்தேகப்பட்ட காதலன் ஒருவர், அப்பெண் மீது பிளேடால் கீறி உயிரெடுக்க முற்பட்டார். அவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை, பல்லாவரத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், சென்னை விமான நிலையத்தில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றுகிறார். இவருக்கும் திருச்சியைச் சேர்ந்த இந்து என்கிற பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் பழகி வந்த நிலையீல், பிரகாஷ் இந்துவைக் காதலித்துள்ளார். இந்நிலையில், திடீரென இந்து மீது பிரகாஷுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்துவிடம் கேள்விகள் கேட்டுக் குடைந்த நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பல்லாவரத்தில் உள்ள பூங்காவுக்கு வருமாறு இந்துவை அழைத்துள்ளார் பிரகாஷ். அதன்படி இந்துவும் அங்கு வந்துள்ளார். அப்போது இருவரும் பேசிக் கொண்டிருந்த நிலையில், திடீரென இந்துவிடமிருந்த செல்போனைப் பிடுங்கி, அவர் யாரிடம் எல்லாம் பேசியுள்ளார் என்று இன்கமிங்க், அவுட்கோயிங் கால்களை ‘செக்’ செய்துள்ளார் பிரகாஷ்.
இதனால் கோபம் அடைந்த இந்து, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, ஆத்திரமடைந்த பிரகாஷ், தன் கையில் வைத்திருந்த பிளேடால் இந்துவை கண்டபடி கிழித்துள்ளார். இதனால் ரத்தம் பெருக்கெடுக்க, இந்து அலறித்துடித்துள்ளார்.
இந்துவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள், உடனடியாக இந்துவை மீட்டு, அருகில் இருந்த குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கே அவருக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்துவின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டு வருவதைப் பார்த்ததுமே ஓடத் தொடங்கி தலைமறைவானார் பிரகாஷ். அவர் குறித்து போலீஸாரிடம் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
தப்பி ஓடிய பிரகாஷை பல்லாவரம் போலீஸார் தேடிக் கண்டுபிடித்து கைதுசெய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அதில், இந்து மீது ஏற்பட்ட சந்தேகத்தால், அவரை பிளேடால் கிழித்ததாகத் தெரிவித்துள்ளார் பிரகாஷ்.
இதுகுறித்துக் கூறிய போலீஸார், “பிரகாஷும் இந்துவும் காதலித்துள்ளனர். இந்து மீது ஏற்பட்ட சந்தேகத்தால், அவரை பிளேடால் கிழித்ததாக பிரகாஷ் கூறியுள்ளார். இந்துவை கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக பிரகாஷை கைது செய்துள்ளோம். நல்லவேளையாக, இந்து அலறிய போது அங்கே திரண்ட பொதுமக்களால் இந்து காப்பாற்றப்பட்டுவிட்டார். இல்லையென்றால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும்” என்று கூறினர்.