சென்னை: தூத்துக்குடியில் நடைபெற்ற கலவரம் மற்றும் போராட்டத்தில், சமூக விரோதிகள் ஊடுருவியதாக முதலமைச்சர் கூறுவது போராட்டக் காரர்களை அவமானப்படுத்தும் செயல் என்று குறிப்பிட்டுள்ள தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், திமுக., தலைமையகமான அறிவாலயத்தையே சட்டமன்றமாக்கி, கற்பனையாக அவை அலுவல்கள் நடப்பதைப் போல், போட்டி சட்டமன்றக் கூட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 40 ஆண்டுகளாக தமிழக அரசியல் களத்தில் இருந்துவரும் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக, துணை முதல்வராக, சென்னை மேயராக என்று பதவிகளில் இருந்துவிட்டார். ஆனால், அவருக்கு தமிழக முதல்வர் நாற்காலியில் அமரும் யோகம் மட்டும் இதுவரை அமையவே இல்லை. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலின் போது, திமுக., வென்று ஸ்டாலின் முதல்வராவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், அப்போது திமுக.,வில் உட்கட்சிப் பூசல் தலை தூக்கியிருந்தது.
மதுரையை மையமாகக் கொண்டு மு.க.அழகிரியும் சென்னையை மையமாகக் கொண்டு ஸ்டாலினும் திமுக,வில் கோலோச்சியபோது, ஸ்டாலின் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அழகிரியை கட்சியை விட்டு நீக்கினார் திமுக., தலைவர் கருணாநிதி. இப்படி குடும்பச் சண்டையால், திமுக.,வின் வெற்றி பாதிக்கப் படக் கூடாது என்பதற்காக, தனக்கு இயற்கையாக ஏதாவது நேர்ந்தால்தான் ஸ்டாலின் முதல்வர் ஆக முடியும் என்று பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்தார் கருணாநிதி.
ஆனால் எதிர்பார்த்தற்கு மாறாக, அந்தத் தேர்தலில் திமுக., தோற்றது. இதனால் தாம் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் அமர விரும்பாமல், ஸ்டாலினுக்கு அந்தப் பதவியை விட்டுக் கொடுத்து, உடல் நலக் குறைவால் வீட்டிலேயே முடங்கிப்போனார். ஆனால் ஸ்டாலினுக்கோ, இத்தனை வருட அரசியல் வாழ்க்கையில் தம்மால் முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லையே என்ற ஏக்கத்தில், தாம் என்ன செய்கிறோம் என்ற எந்தத் திட்டமிடலும் தெரியாமலேயே, ஏதோ அரசியலில் ஈடுபட்டு, முதல்வர் நாற்காலி அடுத்து தனக்குத்தான் என்ற ஆசையில் போராட்டங்களை நடத்தி வருகிறார்.
மக்களிடம் பெரிய அளவுக்கு கவர்ச்சியோ, அறிமுகமோ இல்லாத எடப்பாடி பழனிசாமி எல்லாம் முதலமைச்சர் ஆகும் போது, தம்மால் ஆக முடியவில்லையே என்ற ஏக்கம் மட்டும் ஸ்டாலினிடம் அப்படியே இருந்து வந்தது. இந்நிலையில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்த வெற்றிடத்தைக் கைப்பற்றும் அதி தீவிர முயற்சியில் எத்தனையோ வழிகளைக் கையாண்டு பார்த்து விட்டார். எல்லாம் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன.
அதற்காகத்தான் எத்தனை எத்தனை போராட்டங்கள். எல்லாவற்றிலும் திமுக.,வினர் பின்னணியில் இருந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி கலவரமும் கூட திமுக., பெயரைத் தாங்கிக் கொண்டுள்ளது. முதல்வர் எடப்பாடி இது குறித்து இன்று பேரவையில் குற்றம் சாட்டுகையில், தூத்துக்குடி கலவரத்தின் பின் திமுக., இருந்தது என்றார்.
இந்நிலையில், தூத்துக்குடி கலவரத்தில் காவலர்கள் செய்தவை குறித்து ஸ்டாலின் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு எடப்பாடி பழனிசாமி கூறியதால் ஆத்திரமடைந்த ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை போட்டி சட்டமன்றம் நடத்தப் போவதாகவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை கூட்டத்தொடரில் பங்கேற்கப் போவதில்லை என்றும் அறிவித்தார் ஸ்டாலின்.