ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் சட்டபடியே நடவடிக்கை: தென்மண்டல ஐஜி பேட்டி!

சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்து கோன் 308வது நினைவு தின நிகழ்ச்சிகள் ஜூலை 11-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்து கோன் மணி மண்டபத்தில் அரசு சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

இதில் மாவட்ட ஆட்சியர், மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்று வீரன் அழகுமுத்து கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர், சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் மரியாதை செய்ய உள்ளனர்.

இதனையெடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக இன்று தென்மண்டல ஐஜி கே.பி.சண்முக ராஜேஸ்வரன், டிஐஜி கபில்குமார் சரத்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, டிஎஸ்பி ஜெபராஜ் மற்றும் காவல்துறையினர் கட்டாலங்குளம் மணி மண்டபத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதன் பின்னர் ஐஜி சண்முகராஜேஸ்வரன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் காவல்துறையினர், வீரன் அழகுமுத்து கோன் வரிசுதாரர் மற்றும் நலச்சங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிகழ்ச்சி நடைபெறும் நேரம், வாகனங்கள் வருகை, தலைவர்கள் வருகை, மரியாதை செலுத்து நேரம் ஒதுக்கவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிகிறது.

கூட்டத்தில் நாலாட்டின்புதூர் ஆய்வாளர் ஜீடுடி, கயத்தார்; காவல் ஆய்வாளர் ஆவுடையப்பன், அழகுமுத்துக்கோன் வரிசுதாரர் வனஜா, வீரன் அழகுமுத்துக்கோன் நலச்சங்க தலைவர் மாரிச்சாமி,செயலாளர் முத்துகிருஷ்ணன், பொருளாளர் குமார், துணைத்தலைவர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்பு தென்மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசும் போது, வீரன் அழகுமுத்து கோன் நினைவு நாள் நிகழ்ச்சி வரும் 11-ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டோம். நினைவு நாள் நிகழ்ச்சிகளுக்கு வரும் வாகனங்களுக்கு வழக்கம் போல் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும். அழகுமுத்து கோன் நலச்சங்கத்தினரிடம் நிகழ்ச்சிகளை அமைதியாக நடத்த அறிவுறுத்தி உள்ளோம்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கைது என்பது சட்டப்படி என்ன உண்டோ அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.