
வைகை பாயும் ஐந்து மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப் பட்டது. இதனை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னின்று திறந்து வைத்தார்.
வைகை அணையில் நீர்மட்டம் 69 அடியை எட்டிய நிலையில் அணைக்கு வினாடிக்கு 3393 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் 5 மாவட்டங்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அணையின் மொத்த உயரம் 71 அடி. இதில் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால், அணையில் இருந்து நீர் திறந்து விட ஏற்பாடு செய்யப் பட்டது.
இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாசனத்துக்காக இன்று தண்ணீர் திறந்து வைத்தார். நீர் இருப்பைப் பொறுத்து வினாடிக்கு 1130 கன அடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று கூறப்பட்டது.
வைகை அணை நீர் திறந்து விடப் பட்டதன் மூலம் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சத்து ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.