சென்னை: உயர் ரக பிஎஸ்என்எல். தொலைபேசி இணைப்புகளை சட்ட விரோதமாக சன் தொலைக்காட்சிக்கு பயன்படுத்தியது தொடர்பான வழக்கில், கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என சென்னை சிபிஐ நீதிமன்றம் கூறியுள்ளது. அன்று இருவரும் ஆஜராக வேண்டுமென்று அது உத்தரவிட்டுள்ளது.
தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது, அதிவேக பிராட்பேன்ட் இணைப்புகளை சட்டவிரோதமாக சன் தொலைக்காட்சிக்கு பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரையும் சிபிஐ., நீதிமன்றம் விடுவித்தது.
ஆனால், அந்த உத்தரவுக்கு எதிரான சிபிஐ., யின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ. சமர்ப்பித்த ஆதாரங்கள் போதுமானவை என்று தெரிவித்தது.
இதை அடுத்து, 7 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம், வழக்கை மீண்டும விசாரிக்க சிபிஐ., நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்ததை அடுத்து, இந்த வழக்கு சிபிஐ., நீதிமன்ற நீதிபதி ஆர்.வசந்தி முன் கடந்த 11ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றம் சாட்டப்பட்ட 7 பேருக்கு எதிராக ஆகஸ்ட் 17ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என நீதிபதி அறிவித்தார். அன்றைய தினம் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவை ஒட்டி நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பிஎஸ்என்எல்., முன்னாள் பொது மேலாளார் பிரம்மநாதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கேரளாவில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள பிரம்மநாதன் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை எனக் கூறினார். மேலும், மற்றவர்களின் தரப்பிலும் குற்றச்சாட்டு பதிவு செய்வதை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் என கூறிய நீதிபதி, அன்று தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.