மதுரை: எந்த ஆட்சி வந்தாலும் கோயில்களில் ஊழல் இருக்கத்தான் செய்யும் என்றும், நித்தியானந்தா மதுரை ஆதினத்துக்குள் எக்காரணம் கொண்டும் நுழைய முடியாது என்றும் கூறினார் மதுரை ஆதினம்.
செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதினம் அருணகிரிநாதர், நித்தியானந்தா மதுரை ஆதினத்திற்குள் நுழைய முடியாது. ஒரு முறை ஆதினத்திலிருந்து நீக்கப் பட்டவரை மீண்டும் சேர்த்துக் கொள்ள முடியாது. நித்தியானந்தா மீது வழக்கு இருப்பதால் சாதாரண மனிதராகவும் அவர் உள்ளே நுழைய முடியாது என்றார் மதுரை ஆதினம்.
மேலும், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோயில்களில் ஊழல் இருக்கத்தான் செய்யும் என்றார் மதுரை ஆதினம் அருணகிரிநாதர்.
மதுரை ஆதினம் கூறுவது போல், எந்த நபர் மதுரை ஆதினத்தில் அதினகர்த்தராக வந்தாலும், அங்கே நிச்சயம் முறைகேடும் ஊழலும் தான் இருக்கும். அப்படி இருக்க, நித்தியானந்தா மட்டும் ஏன் விதிவிலக்கு என்று கேட்கின்றனர் நித்யானந்தா ஆதரவாளர்கள். ஏற்கெனவே, கோடிக்கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டுதான் நித்தியானந்தவை ஆதினத்தில் சேர்த்து இளைய ஆதினமாக பட்டாபிஷேகம் எல்லாம் செய்தார் மதுரை ஆதினம் அருணகிரிநாதர் என்ற குற்றச்சாடு இவர் மீது வைக்கப் பட்டது. ஒரு முறை ஆதினத்தில் இருந்து விலக்கப்பட்டவர் மீண்டும் சேர்த்துக் கொள்ள முடியாது என்றால், ஏற்கெனவே ஒருமுறை இளையவராக பட்டாபிஷேகம் செய்யப்பட்டவரை மீண்டும் பட்டாபிஷேகம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று வாதிடுகின்றனர் நித்யானந்தா ஆதரவாளர்கள்.
எப்படியோ, மீனாட்சி ஆட்சி புரியும் மதுரைக்கும், சம்பந்தப் பெருமான் ஆட்சி செய்த மதுரை ஆதினத்துக்கும் அவப்பெயர்களை இப்போது ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை!
திராவிட இயக்கங்களின் ஆட்சியில்தான், பணத்தைப் பெற்றுக் கொண்டு, நாத்திகர்களைக் கோயில் அலுவலர்களாக, அதிகாரிகளாக நியமித்தார்கள், அதுபோல், மதுரை ஆதினத்துக்கும் ஏதோ வழியில் வந்து சேர்ந்துவிட்டார் தற்போதைய ஆதினகர்த்தர். ஆலயங்களில் இருந்து நாத்திக திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்களை விரட்டி, ஆலயங்களை அரசின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று போராட்டம் நடந்து வருவதைப் போல், மதுரை ஆதினத்துக்கு எதிராகவும் போராட்டங்கள் முன்வைக்கப்பட்டால், ஆச்சரியப் படுவதற்கில்லை என்கிறார்கள் இந்த விவகாரம் குறித்து தீவிரமாக விவாதிப்பவர்கள்!