நாகை : தமிழகத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் அனைத்தும் திடீரென்று மூடப் பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காவிரி டெல்டா பகுதிகளான திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலத்தடி நீரைக் கொண்டு முற்பட்ட குறுவை சாகுபடி செய்து வந்தனர். அவர்கள் சாகுபடி செய்த நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப் பட்டு வந்தது.
குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1660 என்ற விலைக்கு வாங்கி வந்தது. திருச்சி, தஞ்சை, திருவாரூர் பகுதிகளில் கடந்த இரண்டு மாதமாகவும் நாகை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாகவும் கொள்முதல் செய்து வந்தது.
மத்திய அரசு குவிண்டாலுக்கு ரூ.200ஐ உயர்த்தி அறிவித்தது. செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து குவிண்டால்ரூ.1860 என்று விலைக்கு வாங்கிக் கொள்ளும் என்று தமிழக அரசு அறிவித்த நிலையில், திடீரென்று நேற்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களையும் மூடப்பட்டு விட்டது.
இது தொடர்பாக துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு மத்திய அரசு கொள்முதலை நிறுத்தச் சொன்னதால் தமிழக அரசு நெல் கொள்முதலை நிறுத்தியுள்ளது என்று கூறியுள்ளனர்.
ஏற்கெனவே நாள் ஒன்றுக்கு குறைந்த அளவே நெல் கொள்முதல் செய்து வந்ததால் தனியார் நெல் வியாபாரிகள் விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு அதாவது குவிண்டால் ஒன்று ரூ.1300 என்று வாங்கிச் செல்கின்றனர்.
தமிழக அரசின் இந்த திடீர் நடவடிக்கையால் மேலும் நெல் விலையை குறைத்துக் கொடுக்க வேண்டியிருக்கும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.