சென்னை: கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் படி, சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தடை விதிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப் பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய மக்கள் கட்சித் தலைவர் ரவி தாக்கல் செய்த மனுவில், மக்கள் வரிப் பணத்தை பள்ளிகள், சுகாதார வசதிகள் உள்ளிட்ட பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்! ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிரான வழக்குகள் திரும்பப் பெறப் பட்டதால், இந்த வழக்கு தொடரப் பட்டுள்ளது. கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின் படி கடற்கரையில் கட்டடம் கட்ட அனுமதி இல்லை என்பதால் இனிமேல் மெரினாவில் நினைவிடங்கள் கட்ட அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்க பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் குலுவாடி ரமேஷ், கல்யாண சுந்தரம் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் வந்தது. வழக்கின் விசாரணைக்குப் பின், இந்த மனு தொடர்பாக தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் வரும் 19ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணை 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது.
முன்னதாக, கருணாநிதியின் நினைவிடம் மெரினாவில் அமைக்கப் பட வேண்டும் என்பதால், அவரசர அவசரமாக இரவோடு இரவாக நீதிமன்றத்தில் கூடி, திமுக.,. சார்பில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராகத் தொடுக்கப் பட்டிருந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. இது திமுக.,வின் இரட்டை வேடத்தையும் கீழ்த்தரமான அரசியலையும் தமிழக மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.