12 Aug 05 High court - 2026

சென்னை: தங்கள் கோயிலில் கடவுள் சிலை மாறியது பூஜை செய்யும் அர்ச்சகருக்குத் தெரியாதா? அவர்கள் எந்திரத் தனமாக நடந்துகொள்வது வேதனை தருகிறது என்று உயர் நீதிமன்றம் கொட்டு வைத்துள்ளது!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் புன்னைவனநாதர் சந்நிதியில் லிங்கத்தை பூஜிக்கும் மயில் சிலை காணாமல் போனதால், புதிய சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும் என ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு டிவிசன் பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், வாயில் பூவுடன் கூடிய மயில் சிலை காணாமல் போய், தற்போது வாயில் பாம்புடன் இருப்பது போன்ற சிலை வைக்கப்பட்டிருக்கிறது. இது ஆகமத்துக்கு எதிரானது.

கோவில் நிர்வாகத்தின் அறங்காவலர்களையும், செயல் அதிகாரியையும் நீக்கிவிட்டு, கோவில் முறையாக நிர்வகிப்பதை உறுதி செய்ய உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆகம வல்லுனர்கள், சட்ட வல்லுனர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும்.. என்று கோரப் பட்டது.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சிலை மாயமானது, சிலை மாறிவிட்டது என்பதை அரசின் கவனத்துக்கு அர்ச்சகர்கள் ஏன் கொண்டு செல்லவில்லை? அது அர்ச்சகர்களின் கடமை தானே! இப்போதெல்லாம் அர்ச்சகர்கள் எந்திரத்தனமாக செயல்படுகின்றனரே தவிர தெய்வீகப் பணியை ஆற்ற வில்லை என்கிறபோது வேதனையாக உள்ளது என்று கூறினர்.

இதை அடுத்து, அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மகாராஜா, இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்றும், மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்றும் கேட்டார்.

இதை ஏற்ற நீதிபதிகள், நான்கு வாரங்களில் பதிலளிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending