சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் நடிகர் கருணாஸை குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட வேண்டும் என்று அதிமுக எம்பி கோ.அரி கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறிய போது, சினிமாவில் நடப்பதுடன் கருணாஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும்; காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்; அவர் மீது குண்டாஸ் சட்டம் போட்டு கைது செய்ய வேண்டும் என்று கூறினார்.
முன்னதாக, முதலமைச்சர் மற்றும் காவல்துறை உயரதிகாரியை சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் கருணாஸ் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப் பட்ட நிலையில், அவரை தனிப்படைகள் அமைத்து தேடி வருவதாக போலீசார் கூறினர். இந் நிலையில், நான் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில்தான் இருக்கிறேன் என்று கருணாஸ் செய்தியாளர்களை அழைத்து தெரிவித்தார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, முக்குலத்தோர் புலிப்படை இயக்கத்தின் சார்பில், 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்றுப் பேசிய அந்த இயக்கத்தின் தலைவரும், எம்எல்ஏ.வுமான கருணாஸ், முதலமைச்சர் குறித்தும், காவல்துறை அதிகாரி ஒருவர் பற்றியும் அவதூறாக பேசினார். கருணாசின் சர்ச்சைக்குரிய பேச்சு, யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது.
இதைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலை முயற்சி, கொலை மிரட்டல், கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், சாதி ரீதியாக கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுதல், பொதுமக்கள் அமைதியை கெடுக்கும் வகையில் பேசுதல் ஆகிய 6 பிரிவுகளின் கீழ், கருணாஸ் உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வழக்கு பதிவு செய்யப்பட்டதும் கருணாஸ் தலைமறைவாகி விட்டதாகவும், அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 2 ஆய்வாளர்கள், 2 உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசாருடன் கூடிய தனிப் படையினர் கருணாசை தேடி வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், சென்னை சாலிகிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், தான் தலைமறைவாகவில்லை என்றார். கொலை செய்துவிட்டு வந்தாலும் பார்த்துக் கொள்வதாக ஆதரவாளர்கள் மத்தியில் பேசியது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, தவறான நோக்கங்களுக்காக கொலை செய்யுமாறு தான் கூறவில்லை என்றார்.
கூவத்தூர் பற்றிய பேச்சுக்கு, குடியரசுத் தலைவர் தேர்தலை ஒப்பிட்டு விளக்கமளித்த கருணாஸ், சசிகலாவிடம் தான் காசு வாங்கிவிட்டதாக கூறிய அமைச்சர் ஜெயக்குமார் என்ன அரிச்சந்திரனா? என்றார்.
நாடார் ஐயர் ஊடகங்கள்தான் இருக்கின்றன, அவர்கள் நாடார் செய்திகளை மட்டுமே போட்டுக் கொள்கிறார்கள் என்றுஅவதூறாகப் பேசிய விவகாரம் குறித்து கேட்டபோது, அந்த அவதூறுப் பேச்சுக்காக நாடார் சமூகத்திடம் தான் வருத்தம் தெரிவித்து விட்டதாகக் கூறினார். மேலும், எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் மனம் புண்படும்படி பேசியிருந்தாலும் அதற்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக கருணாஸ் கூறினார்.
இருப்பினும், கூட்டத்தில் கடுமையாகப் பேசிவிட்டு, பின்னர் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறுவது சிறுபிள்ளைத் தனமானது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.