டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வின் வினாத்தாளில் ஈ.வே, ராமசாமி நாயக்கரின் பெயரை அவருடைய சாதி பெயரான நாயக்கர் என்ற பெயருடன் அச்சிட்டு கேள்வித்தாளில் குறிப்பிடப் பட்டிருந்ததால், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் ஊடகங்களும் அதை சர்ச்சை ஆக்கி வருகின்றன.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வின் வினாத்தாளில் ஈரோடு வெங்கடப்ப ராமசாமி நாயக்கரின் பெயர் சாதி பெயருடன் அச்சிடப்பட்டிருப்பதை சர்ச்சை ஆக்கி வருகின்றனர் திமுக.,வினர்!
குரூப் 2 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. பொது அறிவுப் பிரிவில் “திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார்?” என்ற கேள்விக்கு விடையான 4 பதில்களில் ஈ.வே.ரா.,வின் பெயர் மட்டும் சாதிப் பெயருடனும் அச்சிடப்பட்டிருந்தது.
மேலும், ஈ.வெ.என்பதற்கு பதிலாக இ.வெ.ராமசாமி நாயக்கர் என குறிப்பிட்டிருந்தது, அவரது பெயரை தவறாகக் குறிப்பிட்டிருப்பதாகக் கூறி, திமுக.,வினர் சமூக வலைத்தளங்களில் பொங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தேர்வுகளுக்கான கேள்வித் தாள்களில் ஏற்படக் கூடிய தவறுகள் பிழைகள் குறித்து பலரும் அவ்வப்போது தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி தான் வருகின்றனர். இருப்பினும், புத்தகங்களில் ஏற்படும் பிழைகளைப் போல், வினாத் தாள்களிலும் பிழைகளை அனுமதிப்பது, மிக மோசமானதுதான்!
இரு தினங்களுக்கு முன் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கல்லூரிகளில் தமிழ்த் தேர்வு நடைபெற்றது. இந்த வினாத்தாளில், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை என்ற அவரின் பெயரை தவறாகவே, தேசிய விநாயகம் பிள்ளை என்றே குறிப்பிட்டிருந்தார்கள். மேலும், வைரமுத்து குறித்த கேள்விகள் எல்லாம் கேட்கப் படும் அளவுக்கு தமிழ்த்தாய் வாழ்த்தை வழங்கிய மனோன்மணீயம் சுந்தரனார் பெயரில் உள்ள பல்கலையில் வினாத்தாள்கள் வடிவமைக்கப் படுவது வேதனையான ஒன்றுதான்!