சோழவந்தான் நகரின் மையத்தில் அமைந்துள்ளது ஸ்ரீஜெனகை மாரியம்மன் கோவில். பிரசித்தி பெற்ற இந்த கோவிலின் வைகாசிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. பக்தர்கள் காப்புக்கட்டுதலுடன் விரதத்தை தொடங்கினர்.
கொடியேற்ற வைபவத்தை அடுத்து அம்மனுக்கு காப்புக்கட்டப்பட்டது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. தொடர்ந்து ஏராளமான பக்தர்களுக்கு காப்புகள் கட்டப்பட்டன. அதைத் தொடர்ந்து 17 நாட்கள் திருவிழா நடைபெற்று, நேற்று தீர்த்தவாரி உத்ஸவம் நடைபெற்றது.
திருவிழாவில் தினமும் அம்மன் ரிஷபம், யாழி, சிம்மம், காமதேனு, குதிரை, அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் எம்.வி.எம் குழும தலைவர் முத்தையா, நிர்வாகி வள்ளிமயில், கலைவாணி மெட்ரிக்பள்ளி தாளாளர் மருதுபாண்டியன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக 9-ம்நாள் காலை பால்குடம், பிற்பகலில் அக்னிச்சட்டி எடுத்தல் ஆகியவை நடைபெற்றன.
இரவு பூப்பல்லக்கு, மறுநாள் மாலை மந்தைக்களத்தில் பூக்குழி இறங்குதல் ஆகியவை நடைபெற்றன. 16-ம் நாள் திருவிழாவாக திருத்தேரோட்டமும், 17-ம்நாள் வைகையாற்றில் தீர்த்தவாரி உற்சவத்துடன் திருவிழா நிறைவடைந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாக அதிகாரி லதா, தக்கார் சக்கரையம்மாள், கணக்கர் பூபதி, மற்றும் ஆலய பணியாளர்கள் உபயதாரர்கள் செய்திருந்தனர்.

செய்தியும் படமும்: சோழவந்தான் ரவிச்சந்திரன்