திருவண்ணாமலை மாவட்டம் அருகே, ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக, ரூ.5.51 லட்சம் மோசடி செய்த, தமிழ்நாடு அரசு போக்குவரத்து பொறியாளர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வசந்தம் நகரைச் சேர்ந்தவர் விவசாயி பழனியாண்டி, 65. இவரது மகன் ராஜேஷ். ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். மகள் சுபாவின் கணவர் சிவக்குமார், சென்னை தமிழ்நாடு அரசு மாநகர போக்குவரத்து பணிமனையில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இவருடன் திண்டுக்கல்லை சேர்ந்த மாரியப்பன், 57, என்பவரும், இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள தனது மைத்துனர் ராஜேசுக்கு வேலை வாங்க வேண்டும் என்று சிவக்குமார் கூறியுள்ளார். அதற்கு மாரியப்பன், தான் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
இதை நம்பி சிவக்குமார், தன் மாமனார் பழனியாண்டியிடம், 7 லட்சம் பெற்று, மாரியப்பனிடம் கொடுத்துள்ளார். ஆனால், மாரியப்பன் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் அவர்மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதை தொடர்ந்து 1.48 லட்சம் ரூபாயை திருப்பி கொடுத்தார். மீதி பணம் ரூ.5லட்சத்து. 51ஆயிரத்து. 500ஐ விரைவில் தருவதாக தெரிவித்தார். ஆனால், இதுவரை தராததால் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் பழனியாண்டி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரிக்க கோரி போளூர் போலீசாருக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் போளூர் போலீசார் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பொறியாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.