
தமிழ் நாடு நாள் உருவான வரலாற்றை பெரியாரிடமிருந்து தொடங்குவது வரலாற்றுப் புரட்டு!
சென்னை மாகாணத்தை மொழி வழித் தமிழர் தாயகமாக உருவாக்க வேண்டுமென்று முதன்முதலாக அரசியல் அரங்கில் குரல் கொடுத்து போராடியவர் ம.பொ.சி அவர்கள். அது போல் தமிழக எல்லைகளை மீட்கப் போராடியவர்களில் முதன்மையானவர்களாக மார்சல் நேசமணி, மங்கலங் கிழார், தளபதி விநாயகம், குஞ்சன் நாடார் ஆகியோரை குறிப்பிடலாம்.
தமிழக அரசு வெளியிட்ட தமிழ்நாடு அரசாணை குறிப்பில் பெரியாரிலிருந்து தொடங்கி வரலாறு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதன்மை எல்லைக் காப்புப் போராளிகள் ம.பொ.சி.யும், நேசமணியும் இறுதியாக வரிசைப்பட்டியலில் வருகின்றனர்.
இது தமிழக எல்லைக் காப்பு போராளிகளை அவமதிப்பது மட்டுமல்லாமல் வரலாற்றை திரிக்கும் முயற்சியாகும்.

திராவிட நாடு பேசிக் கொண்டு தமிழ்நாடு மொழிவழித் தாயகமாக பிரிவதை தொடக்கம் முதலே எதிர்த்தவர் பெரியார். வேறுவழியின்றி இறுதிக்கட்டத்தில் மொழிவழி தமிழ் நாடு பிரிவதை ஆதரித்தார். அவரை முதல் வரிசைப் பட்டியலில் காட்டுவது வரலாற்றுப் புரட்டாகும்.
அண்ணாவும் பெரியார் வழியில் திராவிட நாடு கேட்டவர் தான். பெரியார் போல் இவர் எதிர்க்க வில்லை என்றாலும் , ம.பொ.சி. ஏற்பாடு செய்த ஒரு முழு அடைப்பு போராட்டத்தில் பங்கெடுத்தவர்.
மேலும், அவர் மொழிவழி தமிழ் நாடு உருவாகி பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகே ( ம.பொ.சி. தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு போராடியதன் விளைவாக) தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். பிறகு தமிழ் நாடு பெயர் மாற்றப்பட்டது. அண்ணாவின் பங்களிப்பை கூறுவதில் தவறில்லை என்றாலும், தமிழ் நாடு பெயர் மாற்றத்திற்காக தன்னுயிரை முதன் முதலாக ஈந்த சங்கரலிங்கனாரை இறுதி வரிசையில் காட்டுவது அவரின் ஈகத்தை கொச்சைப்படுத்தும் செயலன்றோ?
குளமாவது, மேடாவது என்று சொன்ன காமராசரின் பெயரும் இதில் வருகிறது. இவரும் பெரியாரைப் போல எதிர்த்து வந்து இறுதியில் ஆதரித்தவர்தான். இவர் பெயரும் பெரியார், அண்ணா பெயருக்கு அடுத்து படியாக வருகிறது.
நேசமணி நடத்திய தெற்கெல்லை போராட்டத்தை ஆதரித்து நின்றவர் பொதுவுடைமைச் போராளி ஜீவானந்தம். தமிழ் நாடு பெயர் மாற்றத்திற்கு குரல் கொடுத்தவர். அவர் பெயரை குறிப்பிட்டதில் தவறில்லை.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அரசாணைக்குப் பின்னால் வரலாற்றைத் திரிக்கும் திராவிடக் கும்பலின் கைவரிசை இதில் நன்றாகவே பளிச்சிடுகிறது.
தமிழ்நாடு நாள் கோரிக்கை என்பது தமிழ்த் தேசியத்தின் கோரிக்கையே தவிர திராவிடத்தின் கோரிக்கையல்ல. தமிழ்த் தேசிய எழுச்சியின் அழுத்தம்தான் தமிழ் நாடு அரசை கொண்டாடத் தூண்டியுள்ளது.
இல்லாத திராவிடத்தை கழகங்கள் தூக்கிப் பிடிப்பதாலோ என்னவோ, இல்லாத வரலாற்றையும் எழுதி அரசாணையாக வெளியிடப்படுகிறது.
திராவிடத்தின் வரலாற்றுப்புரட்டை முறியடிக்கும் ஆற்றல் தமிழ்த் தேசியத்திற்கு உண்டென்பதை திராவிட ஆட்சியாளருக்கு உரக்கச் சொல்வோம்!
- கதிர் நிலவன்

