நடந்து முடிந்த மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலின் போது, பாஜக., தேர்தல் அறிக்கையில் வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தது! இதற்கு முன்னதாக, கடந்த வருடம் பசும்பொன் தேவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்க வேண்டும் என்று பாஜக சார்பில் பேராசிரியர் ஸ்ரீநிவாசன் கோரிக்கை மனு கொடுத்திருந்தார். இன்று பசும்பொன் தேவர் திருமகனாரின் ஜெயந்தியை முன்னிட்டு இதனை பாஜக.,வினர் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
கடந்த வருடமே, பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு மத்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை அறிவிகக வேண்டும் என்று பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் ஸ்ரீநிவாசன், மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் கோரிக்கை மனுவை நேரில் சந்தித்து வழங்கினார்! அந்தக் கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட மத்திய அமைச்சர், பசும்பொன் தேவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.
இது குறித்து பேராசிரியர் ஸ்ரீனிவாசன் குறிப்பிடுகையில், இதுவரை பசும்பொன் தேவர் அவர்களுக்கு பாரதரத்னா விருது வழங்கப் படாததற்கு காங்கிரஸ் கட்சி வருத்தப்பட வேண்டும்! பாரத ரத்னா விருது ஒரு குடும்ப சொத்து போல கருதுகிறது காங்கிரஸ். சுதந்திரத்துக்காக போராடிய பிற தலைவர்களுக்கு காலம் கடந்து கொடுக்கப்பட்டது. ஆனால் ராஜீவ் காந்திக்கு 1991ஆம் வருடமும், இந்திரா காந்திக்கு 1984ஆம் ஆண்டும், நேருவுக்கு அவர் இருக்கும் போதேயும் என ஒரே குடும்பத்துக்கு வழங்கப்பட்டது.
ஆனால் சுதந்திரத்துக்குப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு 1993ஆம் ஆண்டும், சர்தார் படேலுக்கு 1992ஆம் ஆண்டும் மிக தாமதமாக வழங்கப்பட்டது!
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு பிடித்த தென் இந்திய தலைவர் பசும்பொன் தேவர் என அவரே குறிப்பிட்டிருக்கிறார். பாஜக ஆட்சியில் தான் பசும்பொன் தேவருக்கு நாடாளுமன்றத்தில் சிலை வைக்கப்பட்டது!
தேசியத்தையும் தெய்வீகத்தையும் நேசிக்கும் அனைவரும் பசும்பொன் தேவரின் வாரிசுகள்தான்! அந்த மகானைப் போன்று அனைத்து ஜாதியினருடன் நட்புடன் வாழ வேண்டும் என்றார் பேராசிரியர் ஸ்ரீனிவாசன்.